பாட்டாளி கவிஞர் பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரத்தின் நினைவுநாள் - மாவட்ட நிர்வாகம் சார்பில் மரியாதை
’’கண்களை மூடுகிறேன், கல்யாணம் தெரிகிறார். ஒளி தெரிகிறது, கண்களைத் திறக்கிறேன்: கல்யாணம் இல்லை - கலையுலகு இருட்டாயிருக்கிறது என கருணாநிதி இரங்கல் தெரிவித்திருந்தார்’’
29 வயதில் விவசாயி, மாடு மேய்ப்பவர், உப்பளத் தொழிலாளர், நாடக நடிகர், என 17 வகைத் தொழில்களில் ஈடுபட்டவர் பாட்டாளி மக்களின் ஆசைகளையும், ஆவேசத்தையும், அந்தரங்க சக்தியுடன் பாடல்களாக வடித்தவர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம். இவர் 1930 ஆம் ஆண்டு ஏப்ரல் 13 ஆம் தேதி, தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே உள்ள செங்கப்படுத்தான்காடு என்னும் சிற்றூரில், அருணாச்சலனார்-விசாலாட்சி ஆகியோருக்கு இளைய மகனாக எளிய விவசாய குடும்பத்தில் பிறந்தார். இவர் தந்தையும் கவி பாடும் திறன் பெற்றவர். கணபதிசுந்தரம் என்கிற மூத்த சகோதரரும் வேதநாயகி என்கிற இளைய சகோதரியும் உள்ளனர். பள்ளிப்படிப்பு மட்டுமே முடித்த கல்யாணசுந்தரம், திராவிட இயக்கத்திலும், கம்யூனிசத்திலும் ஈடுபாடு கொண்டிருந்தார். இவரது மனைவி பெயர் கௌரவாம்பாள்.
பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம், தனது 19ஆவது வயதிலேயே கவிபாடுவதில், அதிக ஆர்வம் காட்டியவர். இவருடைய பாடல்கள் கிராமியப் பண்ணை தழுவியவை. பாடல்களில் உருவங்களை காட்டாமல் உணர்ச்சிகளை காட்டியவர். இருக்கும் குறைகளையும் வளரவேண்டிய நிறைகளையும் சுட்டி காட்டியவர். திரையுலகில், பாட்டாளி மக்களின் ஆசைகளையும், ஆவேசத்தையும், அந்தரங்க சக்தியுடன் பாடல்களாக இசைத்தார். இவர் இயற்றி வந்த கருத்துச் செறிவும் கற்பனை உரமும் படைத்த பல பாடல்களை பல பத்திரிகை வெளியிட்டு வந்தது. 1954 ஆம் ஆண்டு பெண் திரைப்படத்திற்காக முதல் பாடலை இயற்றி அந்தத் துறையில் அழுத்தமான முத்திரை பதித்தார்.
இளம் வயதிலேயே, விவசாய சங்கத்திலும், பொதுவுடைமைக் கம்யூனிஸ்ட் கட்சியிலும் ஈடுபாடு கொண்டிருந்தார். தான் பின்பற்றி வந்த கட்சியின் லட்சியத்தை உயரத்தில் பறக்கும் வகையில் கலை வளர்ப்பதில் சலிக்காமல் ஈடுபட்டார். நாடகக் கலையில் ஆர்வமும், விவசாய இயக்கத்தின் மீது அசைக்கமுடியாத பற்றும் கொண்டிருந்தார். தஞ்சையைச் சேர்ந்த வீரத் தியாகிகள் சிவராமன், இரணியன் ஆகியோருடன் சேர்ந்து விவசாய இயக்கத்தைக் கட்டி வளர்க்க தீவிரமாகப் பங்கெடுத்தார்.
தமது 29 வயதில் விவசாயி, மாடு மேய்ப்பவர், உப்பளத் தொழிலாளர், நாடக நடிகர், என 17 வகைத் தொழில்களில் ஈடுபட்டவர். இவருக்கு இருந்த நடிப்பாசையின் காரணமாக சக்தி நாடக சபாவில் இணைந்தார். இந்த சக்தி நாடக சபாவில்தான் பின்னாளில் திரையில் பிரபலமான சிவாஜி கணேசன், எம்.என்.நம்பியார், எஸ்.வி.சுப்பையா, ஓ.ஏ.கே. தேவர் ஆகியோர் நடிகர்களாக இருந்தனர். பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் ஒ.ஏ.கே. தேவரின் நெருங்கி நண்பரானார். சக்தி நாடக சபாவின் நாடகங்கள் ஒவ்வொன்றாய் திரைப்படமாகியும், அதன் நடிகர்கள் சினிமாவில் நுழைய ஆரம்பித்தனர். ஆனால் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரமோ நடிப்பை விட்டுவிட்டுப் பாடல் எழுதும் கலையைக் கற்றுக்கொள்ள புதுச்சேரி சென்று புரட்சிக்கவி பாரதிதாசனிடம் உதவியாளராகச் சேர்ந்துவிட்டு இறுதியில் கவிஞரானார்.
பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் திருமணம் முடிந்த ஐந்து வருடங்களில் தனது 29-வது வயதில் 1959 அக்டோபர் மாதம் 8 ஆம் நாள் காலமானார். இவரது மறைவுக்கு, மறைந்த முன்னாள் முதல்வர் மு. கருணாநிதி செலுத்திய அஞ்சலியில், கண்களை மூடுகிறேன், கல்யாணம் தெரிகிறார். ஒளி தெரிகிறது, கண்களைத் திறக்கிறேன்: கல்யாணம் இல்லை - கலையுலகு இருட்டாயிருக்கிறது எனத் தெரிவித்திருந்தார். தமிழ்நாடு அரசு பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம் நினைவைப் போற்றும் வகையில் தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டையில், பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம் மணிமண்டபம் அமைக்கப்பட்டு, அங்கு பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் அவர்களின் மார்பளவு சிலை அமைக்கப்பட்டுள்ளது. அவரது வாழ்க்கை வரலாறு தொடர்பான புகைப்படங்கள் கண்காட்சியாக வைக்கப்பட்டுள்ளது.
இத்தகைய சிறப்பு வாய்ந்த புகழ்பெற்ற பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரத்தின் நினைவுநாளை முன்னிட்டு, பட்டுக்கோட்டையில் உள்ள அவரது மணிமண்டபத்தில் உள்ள உருவ சிலைக்கு, பட்டுக்கோட்டை சார் ஆட்சியர் பாலசந்தர், மலர் தூவி, மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர் அவருடன், செய்தி தொடர்பு உதவி அலுவலர் எழிலரசன் ஆகியோர் உள்ளனர்.