ஏரியில் ஆக்கிரமிக்கப்பட்ட 15 ஏக்கர் - 20 ஆண்டுகளுக்கு பிறகு மீட்பு
ஏரியில் சுமார் 15 ஏக்கர் பரப்பளவு ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதை அகற்றுவதன் மூலம் பல நூறு ஏக்கர் சாகுபடி நிலங்கள் பயன்பெறும் - விவசாயிகள்
தஞ்சை மாவட்டம் அம்மாபேட்டை அருகே புளியகுடி கிராமத்தில் உள்ள சிக்கப்பட்டு ஏரி சுமார் 110 ஏக்கர் பரப்பளவு கொண்டது. இந்த ஏரி அப்பகுதியில் நிலத்தடி நீரை பாதுகாக்கவும், பாசனத்திற்கும் பயன்பட்டு வந்தது. இதன் மூலம் புளியகுடி, கருப்ப முதலியார் கோட்டை உள்ளிட்ட பல்வேறு கிராமத்தினர் பெரிதும் பயன்பட்டனர்.
இந்நிலையில் ஏரிக்குள் கருப்பு முதலியார் கோட்டை கிராமத்தைச் சேர்ந்த 16 பேர் சுமார் 15 ஏக்கர் பரப்பளவு கொண்ட இடத்தை ஆக்கிரமித்து, அதில் நெல், கடலை, எள், உளுந்து உள்ளிட்ட பயிர்களை சாகுபடி செய்துவந்தனர்.
இதனையடுத்து ஆக்கிரமிப்பை அகற்ற வேண்டும் என அப்பகுதி மக்கள் மாவட்ட நிர்வாகத்துக்கு தொடர்ந்து கோரிக்கை வைத்துவந்தனர். இதையடுத்து நீர்வளத் துறையின் வெண்ணாறு கோட்ட பிரிவு கண்காணிப்பு பொறியாளர் தமிழ்ச்செல்வன், உதவி செயற்பொறியாளர் மொக்க மாயன், உதவி பொறியாளர் மணிவண்ணன் ஆகியோர் மேற்பார்வையில், பொக்லின் இயந்திரம் மூலம் ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணி தொடங்கியது. இந்த ஆக்கிரமிப்பு அகற்றும் பணியானது ஓரிரு நாள்களில் முடிவடையும் என அலுவலர்கள் கூறினர்.
இந்த விவகாரம் குறித்து விவசாயிகள் கூறுகையில், “சிக்கப்பட்டு ஏரி தண்ணீரை கொண்டு பல்வேறு கிராமத்தினர் பல நுாறு ஏக்கர் சாகுபடி செய்துவந்தோம். இந்த ஏரியில் தேங்கியுள்ள தண்ணீரால் நிலத்தடி நீர் மட்டம் குறையாமல் இருந்தது. கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு அப்பகுதியினர் சிலர் ஏரியை ஆக்கிரமித்து சாகுபடி செய்யும் வயல்களாக மாற்றினர்.
இதனால் ஏரியின் பரப்பளவு குறைந்தது. குறைந்ததோடு மட்டுமின்றி ஏரியானது வறண்டும் போனது. இதனால் அப்பகுதியில் சாகுபடி செய்பவர்கள் மின் மோட்டாரை கொண்டும், வாடகை தண்ணீரை பெற்றும் விவசாயம் செய்யும் நிலைக்கு தள்ளப்பட்டனர். இந்நிலையில் ஏரியில் சுமார் 15 ஏக்கர் பரப்பளவு ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதை அகற்றுவதன் மூலம் பல நூறு ஏக்கர் சாகுபடி நிலங்கள் பயன்பெறும்” என்றனர்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
மேலும் வாசிக்க: TN Legislative Assembly| நீட் விலக்கு மசோதாவிற்காக 8-ஆம் தேதி சட்டமன்றத்தின் சிறப்பு கூட்டம்