தொழில் முனைவோர்களாக மாறும் பதிவேடு குற்றவாளிகள் -தஞ்சை எஸ்.பி.யின் மனிதாபிமான நடவடிக்கை
''இவர்கள் அனைவருக்கும் அக்காலக்கட்டத்தில் உரிய வாய்ப்புகள் வழங்கப்பட்டிருந்தால் ஒருவேளை இவர்கள் குற்றச் செயல்களில் ஈடுடாமல் இருந்திருக்கக் கூடும்''
கடந்த சில தினங்களுக்கு முன்புவரை காவல்துறையினரால் சரித்திரப் பதிவேடு குற்றவாளிகள் என்றழைக்கப்பட்டு வந்த 4 நபர்கள் தஞ்சை மாவட்ட எஸ்.பி.ரவளி ப்ரியா காந்தபுனேனியின் முயற்சி மற்றும் மனிதாபிமான நடவடிக்கை காரணமாக தற்போது தொழில் முனைவோர்களாக மாறியுள்ளனர். குற்றச்செயல்களை கைவிட்டு கடந்த 5 ஆண்டுகளுக்கு மேல் திருந்தி வாழும் நான்கு பேரின் வாழ்வாதாரத்தை உறுதி செய்யும் வகையில், தேசியமயமாக்கப்பட்ட வங்கி மூலம், அவர்கள், சுய தொழில் தொடங்குவதற்காக 12.06 லட்சம் கடனுதவி வழங்கப்பட்டுள்ளது.
தஞ்சை மாவட்டத்தில் 900க்கு மேற்பட்டோர் சரித்திரப் பதிவேடு குற்றவாளிகளாக உள்ளனர். அண்மையில் அப்பதிவேட்டை ஆய்வு செய்தபோது, குறிப்பிட்ட சிலர் கடந்த 5 ஆண்டுகளுக்கு மேலாக எவ்வித குற்றச் செயலிலும் ஈடுபடாமல் திருந்தி வாழ்ந்து வருவது தெரிய வந்தது. அவர்களில் பெரும்பாலோர் ஓட்டல்களில் வெயிட்டர்கள் அல்லது டேபிள் கிளீனிங் வேலை பார்ப்பது, கூலி வேலை செய்து வருவது தெரிய வந்தது.
இவர்கள் அனைவரும் குற்றச் செயல்களில் ஈடுபடுவதைக் கைவிட்டு தற்போது சமுதாயத்தில் வருமானம் ஈட்டும் உறுப்பினர்களாக மாறியிருக்கின்றனர். இவர்கள் அனைவருக்கும் அக்காலக்கட்டத்தில் உரிய வாய்ப்புகள் வழங்கப்பட்டிருந்தால் ஒருவேளை இவர்கள் குற்றச் செயல்களில் ஈடுடாமல் இருந்திருக்கக் கூடும். ஏற்கெனவே இவர்கள் திருந்தி வாழ்ந்து வரும் நிலையில், கடந்த 5 ஆண்டுகளுக்கு மேலாக எவ்வித குற்றச் செயலிலும் ஈடுபடாத நிலையில் இவர்களுக்கு சரித்திரப் பதிவேடு குற்றவாளி என்ற முத்திரை மூலம் ஏற்பட்டுள்ள பாதிப்புகளை களைய எஸ்பி ரவளிப்பிரியா காந்த புனேனி முடிவு செய்தார். அதனடிப்படையில், தற்போது திருந்தி வாழும் பழைய குற்றவாளிகளில் 73 நபர்களை தேர்வு செய்து அவர்களுக்கு செப்டம்பர் 20 ஆம் தேதி மோட்டிவேசன் கிளாஸ் நடத்துவதற்காக அவர்கள் அனைவருக்கும் அழைப்பு விடுத்திருந்தனர். ஆனால், 54 நபர்கள் மட்டுமே வந்திருந்தனர்.
அக்கூட்டத்தில் கலந்து கொண்டவர்களில் குற்றவாளிகளில் பெரும்பாலோர், இந்நிகழ்ச்சியின் முடிவில் போலீஸார் நம் மீது ஏதோ பொய் வழக்கு போட்டு உள்ளே போட்டு விடுவார்களோ அல்லது அங்கேயே ஏதாவது பாண்ட் எழுதி அதில் கையெழுத்து மற்றும் உறுதியை வாங்கி கொண்டு அனுப்பிடுவாங்களோ என்ற மனநிலையிலேயே வந்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. அக்கூட்டத்தில், சுய தொழில் தொடங்க அரசாங்கத்தால் என்னென்ன வாய்ப்புகள், திட்டங்கள், வங்கிகள் மூலம் கடனுதவிகள் வழங்கப்படுகின்றன, அவற்றிற்கான கல்வித் தகுதிகள், வயது வரம்பு என்ன என்பன குறித்து மாவட்ட தொழில் மைய அதிகாரி எடுத்துரைத்தார்.
அக்கூட்டத்தின் இறுதியில், 26 நபர்கள் சுய தொழில் தொடங்க விருப்பம் தெரிவித்தனர். இதற்கென காவல்துறையினர் தனியே ஒருகுழு அமைத்து சுய தொழில் தொடங்க விருப்பம் தெரிவித்தவர்களின் கல்வித் தகுதி, வயது, என்ன வகையான தொழில் செய்ய விரும்புகின்றனர், எனக் கேட்டறிந்து அதற்கான சந்தை மதிப்பு உள்ளதா என ஆய்வு செய்து மாவட்ட தொழில் மைய அதிகாரிகள் மற்றும் வங்கி அதிகாரிகள் ஆகியோருக்கு இடையே ஒரு இணைப்பாக போலீசார் செயல்பட்டனர். இதில், சுய தொழில் தொடங்க விருப்பம் தெரிவித்த 26 நபர்களில் 2 நபர்கள் வயது வரம்பை கடந்துவிட்டதால் கடனுதவி பெற தகுதியற்றவர்களாகி விட்டனர்.
24 பேர் விண்ணப்பித்தனர். அவர்களில் 10 நபர்களுக்கு சிபில் ஸ்கோர் ரொம்ப குறைவாக இருந்ததால் அவர்களுக்கு கடன் கிடைக்கவில்லை. மீதி 14 நபர்களின் குடும்பத்தினர்களுக்கு கடனுதவி வழங்க வங்கிகள் சம்மதம் தெரிவித்துள்ளன. மேற்படி 14 பேரில் முதல்கட்டமாக 4 நபர்களுக்கு சுய தொழில் தொடங்க வங்கிகள் 12.04 லட்சம் கடனுதவி வழங்கியுள்ளன. அதற்கான உத்தரவை வங்கி அதிகாரிகள் முன்னிலையில், எஸ்.பி. ரவளி ப்ரியாகாந்தபுனேனி, பயனாளிகளுக்கு வழங்கினார். இதில், கீழ திருப்பந்துருத்தியை சேர்ந்த கண்ணன் என்பவரின் மகள் ஆர்த்தி என்பவருக்கு வாழை நார் இயந்திரம் வாங்க இந்தியன் வங்கிக் கிளை 2 லட்சமும், பட்டுக்கோட்டை அண்ணாநகரைச் சேர்ந்த ரேணுகாதேவி என்பவருக்கு ரெடிமேட் துணிக்கடை ஆரம்பிக்க ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா 4.30 லட்சம் கடனும், திருக்காட்டுப்பள்ளி அருகேயுள்ள வடக்குநத்தம் முல்லைக்குடியைச் சேர்ந்த ஜெயலட்சுமி என்பவருக்கு ஓட்டல் நடத்த இந்தியன் வங்கிக் கிளை 1.50 லட்சமும், பாப்பாநாடு அருகேயுள்ள சோழகன்கரையைச் சேர்ந்த காளீஸ்வரி என்பவருக்கு இணையதள மையம் தொடங்க பேங்க் ஆப் இந்தியா கிளை 4.03 லட்சம் கடனுதவி வழங்கப்பட்டது.
இது குறித்து எஸ்பி ரவளிபிரியாகாந்தபுனேனி கூறுகையில், ஒருவர் குற்றச் செயல்களில் ஈடுபடுவதற்கு சமூக, பொருளாதார ஏற்றத் தாழ்வுகளும் முக்கிய காரணம் ஆகும். போதிய கல்வியறிவு இன்மை, ஏழ்மை, பொருள் ஈட்ட உரிய வாய்ப்பு கிட்டாமை ஆகியவையும் காரணங்கள் ஆகும். கடுமையான சட்டங்கள் மற்றும் நடவடிக்கைளால் மட்டுமே குற்றங்களின் எண்ணிக்கையை குறைக்க முடியாது. அதையும் தாண்டி, குற்றவாளிகளின் குடும்ப பொருளாதார நிலையை உயர்த்தி அவர்களின் வாழ்வாதாரத்தை உறுதி செய்வதன் மூலம் குற்றச் செயல்களில் ஈடுபடுவோரின் எண்ணிக்கையை குறைக்க முடியும் என்பதை உணர்ந்த எஸ்.பி. ரவளி ப்ரியா மேற்கொண்ட மனிதாபிமான அணுகுமுறை காரணமாக தற்போது முதல் கட்டமாக 4 நபர்கள் கடனுதவி பெற்று தொழில் முனைவோர்களாக உருவெடுத்துள்ளனர்.
இந்நால்வரில் பழைய குற்றவாளியான கண்ணன் என்பவர் குற்றச் செயலைக் கைவிட்டு திருந்தி கடந்த 5 ஆண்டுகளாக ஒரு பனானா ஃபைபர் கம்பெனியில் கூலி வேலை செய்து வந்தார். தற்போது வங்கியில் கடனுதவி பெற்று சொந்தமாக பனானா ஃபைபர் இயந்திரம் வாங்கி தொழில் முனைவோராக மாறியுள்ளார். இது எனக்கு ஓரளவு மனநிறைவை கொடுக்கிறது. இந்த வெற்றிக்கு நான் மட்டும் காரணம் அல்ல. இது ஒரு கூட்டு முயற்சி. மாவட்ட தொழில் மைய அதிகாரிகள், வங்கி அதிகாரிகள் மற்றும் காவல்துறையினர் ஆகியோரின் ஒட்டுமொத்த கூட்டு முயற்சிகு கிடைத்த வெற்றி. இவர்கள் அனைவருக்கும் நான் நன்றிக்கடன் பட்டுள்ளேன் என்றார். திருந்தி வாழும் பழைய குற்றவாளிகளின் மறுவாழ்வுக்காக காவல் துறை சார்பில் இதுபோன்ற மனிதாபிமான நடவடிக்கை மேற்கொள்வது தஞ்சை மாவட்டத்தில் இதுவே முதல் முறை என்கின்றனர் மூத்த காவல்துறை அதிகாரிகள்.