பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி அங்கீகரிப்பு - தஞ்சையில் அதிமுகவினர் இனிப்பு வழங்கி கொண்டாட்டம்
பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமியை அங்கீகரித்தது தேர்தல் ஆணையம். தஞ்சையில் அதிமுகவினர் இனிப்பு வழங்கி கொண்டாட்டம்.
தஞ்சாவூர்: அதிமுக பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமியை தேர்தல் ஆணையம் அங்கீகரித்தது. இதையடுத்து தஞ்சையில் அதிமுகவினர் பட்டாசு வெடித்தும், பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கியும் கொண்டாடினர்.
அதிமுகவில் ஒற்றை தலைமை விவகாரம் உச்சகட்டத்தை எட்டியதை தொடர்ந்து ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர்கள் கட்சியிலிருந்து நீக்கப்பட்டனர். அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி நியமிக்கப்பட்டார். எனவே இதனை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றம், உச்சநீதிமன்றத்தில் ஓ.பன்னீர்செல்வம் வழக்கு தொடர்ந்த நிலையில், எடப்பாடி பழனிசாமி தரப்புக்கு ஆதரவாகவே தீர்ப்பு வந்தது.
மேலும் அதிமுக பொதுச்செயலாளர் தேர்தல் நடத்தப்பட்டு அதில், எடப்பாடி பழனிசாமி பொதுச்செயலாளராக போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார். இதனை தொடர்ந்து எடப்பாடி பழனிசாமியை அதிமுகவின் பொதுச்செயலாளராக அங்கீகரிக்க கோரி தேர்தல் ஆணையத்திடம் முறையிடப்பட்டது. இந்த நிலையில், எடப்பாடி பழனிசாமியை அதிமுவின் பொதுச்செயலாளராக அங்கீகரிக்க கூடாது என்று தேர்தல் ஆணையத்திற்கு ஓ.பன்னீர்செல்வம் மனு அளித்துள்ளார்.
இதையடுத்து இந்த வழக்கில் தேர்தல் கமிஷன் உரிய முடிவை எடுத்து 21-ம் தேதிக்குள் கோர்ட்டில் தெரிவிக்க வேண்டும் என டெல்லி ஐகோர்ட்டு உத்தரவிட்டது. இந்த உத்தரவுக்கான காலக்கெடு நாளை முடிவடைகிறது.
தேர்தல் கமிஷன் இதுதொடர்பாக நேற்று முன்தினம் ஆலோசனை நடத்தியது. இந்திய தலைமை தேர்தல் கமிஷனர் ராஜீவ்குமார் தலைமையிலான அதிகாரிகள் காலையிலும், மாலையிலும் 2 கட்ட அமர்வுகளில் இது தொடர்பாக ஆலோசித்தனர். இந்நிலையில், அதிமுக பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமியை தலைமை தேர்தல் ஆணையம் அங்கீகரித்தது. அதிமுக பொதுச்செயலாளர் தேர்தலில் எடப்பாடி பழனிசாமி வெற்றி பெற்றது செல்லும் என்று தலைமை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இரட்டை இலை சின்னத்தை பயன்படுத்திக் கொள்ளவும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதையடுத்து தமிழகம் முழுவதும் அ.தி.மு.க.வினர் பட்டாசு வெடித்தும், இனிப்புகள் வழங்கியும் கொண்டாடினர். அதன்படி தஞ்சை ரயில் நிலையம் அருகே அ.தி.மு.க.வினர் மாநில ஜெயலலிதா பேரவை இணை செயலாளர் காந்தி தலைமையில், மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் துரை.திருஞானம், எம்.ஜி.ஆர். மன்ற இணை செயலாளர் ராஜமாணிக்கம், முன்னாள் நகர செயலாளர் பஞ்சாபிகேசன் ஆகியோர் முன்னிலையில் பட்டாசு வெடித்து கொண்டாடினர்.
மேலும் அந்த வழியாக வாகனங்களில் சென்ற பொதுமக்களுக்கு இனிப்புகளையும் வழங்கினர். முன்னாள் மேயர் சாவித்திரிகோபால், கூட்டுறவு அச்சக தலைவர் புண்ணியமூர்த்தி, ஜெயலலிதா பேரவை துணைத்தலைவர் பாலை.ரவி, ஒன்றிய செயலாளர் கலியமூர்த்தி, வார்டு செயலாளர் மனோகர், கவுன்சிலர்கள் கோபால், தெட்சிணாமூர்த்தி மற்றும் அ.தி.மு.க. நிர்வாகிகள், முன்னாள் கவுன்சிலர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.