மழையும் வாட்டுது.. விலையும் குறைந்தது: மக்காச்சோளம் சாகுபடி செய்த விவசாயிகள் வேதனை
கடந்த சில நாட்களாக பெய்த மழையால் சோளத்தை காய வைக்க முடியாத நிலை இருந்து வந்தது. தற்போது வெயில் அடிப்பதை பயன்படுத்தி விவசாயிகள் சோளத்தை காய வைத்து வருகின்றனர்.
தஞ்சாவூர்: தஞ்சை மாவட்டம் வல்லம் பரிவு சாலை பகுதியில் மக்காச்சோளம் உலர்த்தும் பணியில் விவசாயிகள் தீவிரம் காட்டி வருகின்றனர். கடந்த சில நாட்களாக பெய்த மழையால் சோளத்தை காய வைக்க முடியாத நிலை இருந்து வந்தது. தற்போது வெயில் அடிப்பதை பயன்படுத்தி விவசாயிகள் சோளத்தை காய வைத்து வருகின்றனர்.
மக்காசோளத்தை காய வைக்கும் பணி
தஞ்சையை அடுத்த வல்லம் பரிவு சாலை பகுதியில் மக்காச்சோளம் உலர்த்தும் பணியில் விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர். தஞ்சை அருகே பல்வேறு பகுதிகளில் மக்காச்சோளம் அறுவடை பணிகள் நடைபெற்று வருகிறது. அதனை விவசாயிகள் சாலையில் போட்டு உலர்த்தும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
கடந்தாண்டு சோளத்தில் நல்ல மகசூல்
தஞ்சை மாவட்டம் குருவாடிப்பட்டி, துலுக்கம்பட்டி, நாஞ்சிக்கோட்டை, சாமிப்பட்டி, சூரியம்பட்டி, மருங்குளம், ஏழுப்பட்டி, மின்னாத்தூர், குருங்குளம், தங்கப்ப உடையான்பட்டி, தோழகிரிப்பட்டி, கொத்தம்பட்டி, திருக்கானூர்ப்பட்டி உள்ளிட்ட பல்வேறு மேட்டுப்பகுதி கிராமங்களில் உள்ள விவசாயிகள் மக்காச்சோளம் சாகுபடியில் ஈடுபட்டனர். தற்போது மக்காச்சோளம் அறுவடை பணியை விவசாயிகள் தீவிரமாக செய்து வருகின்றனர். கடந்த ஆண்டு ஏக்கருக்கு 20 குவிண்டால் முதல் 30 குவிண்டால் வரை மகசூல் கிடைத்ததாகவும், ஆனால் தற்போது 15 குவிண்டாலில் இருந்து 20 குவிண்டால் வரை மட்டுமே மகசூல் கிடைப்பதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.
இந்தாண்டு விலை குறைத்து வாங்கும் வியாபாரிகள்
சில பகுதிகளில் கடந்த ஆண்டு போலவே 30 குவிண்டால் வரை மகசூல் கிடைத்துள்ளது. கடந்த ஆண்டு மக்காச்சோளத்தை வாங்கிய வியாபாரிகள் குவிண்டால் ரூ. 2650 வரை வாங்கிச் சென்றனர். ஆனால் தற்போது அதனுடைய விலை குறைந்து ரூ.2500க்கு வியாபாரிகள் வாங்குகின்றனர். மேலும் அறுவடை செய்து வரும் சோளம் ஈரமாக இருப்பதால் மேலும் விலை குறைத்து வியாபாரிகள் கேட்பதால் அறுவடை செய்த சோளத்தை நெடுஞ்சாலையில் பரவலாக கொட்டிவைத்து காய வைக்கும் நிலை உள்ளது. அவ்வபோது மழை பெய்து வருவதால் அறுவடை செய்த சோளத்தையும் காய வைக்க முடியாமல் விவசாயிகள் தவித்து வருகின்றனர்.
உடனே பணம் கிடைப்பதால் சற்றே ஆறுதல்
சோளத்தின் மகசூலும் குறைந்து விலையும் வீழ்ச்சி அடைந்து இருப்பதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். இருப்பினும் உடனுக்குடன் வியாபாரிகள் கொள்முதல் செய்து கொண்டு பணத்தை தருவதால் சற்று மகிழ்ச்சி அடைந்துள்ளனர். குறைந்த காலம் நிறைந்த வருமானம் கொடுக்கும் மக்காச்சோளத்தை மாற்றுப்பயிராக சாகுபடி செய்ய தொடங்கி விட்டனர். அறுவடை செய்த இடத்திற்கே வந்து வியாபாரிகள் வாங்கி செல்கின்றனர். உடனே பணமும் கைக்கு வந்து விடுகிறது. அதனால் கரும்பு சாகுபடி அளவை குறைத்து அதிக ஏக்கரில் மக்காச்சோளம் பயிரிடுகின்றனர். ஆண்டுக்கு இருமுறை மக்காச்சோளம் சாகுபடி செய்யும் விவசாயிகளும் உள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்த ஆண்டு சரியானபடி மகசூல் இல்லைங்க
இதுகுறித்து விவசாயிகள் தரப்பில் கூறுகையில், நாங்கள் குருவாடிப்பட்டி பகுதியில் சோளம் விவசாயம் செய்து வருகிறோம். ஒரு கிலோ விதை சோளத்தை ரூ.450 முதல் ரூ.500 வரை வாங்கி பயிரிட்டோம். ஒரு ஏக்கர் சோளம் பயிரிட்டால் 1 டன் அளவிற்கு சோளம் அறுவடை செய்யலாம். இதற்கான அறுவடை காலம் 110 நாட்கள் ஆகும். இந்த ஆண்டு சரியான மழை இல்லாததால் சாகுபடி பாதிக்கப்பட்டுள்ளது. சாகுபடி செய்யும் போது போதிய மழை இல்லை. ஆனால் அறுவடை செய்த பின் மழை பெய்ய தொடங்கி உள்ளது.
தஞ்சை மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருவதால் அறுவடை செய்த சோளத்தை காய வைப்பதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. வியாபாரிகள் 16% ஈரப்பதம் இருந்தால் மட்டும் தான் வியாபாரிகள் வாங்கி கொள்கின்றனர். தற்போது வானம் மேக மூட்டத்துடன் இருப்பதால் ஈரப்பதம் குறையவில்லை. நாங்கள் சாகுபடி செய்யும் சோளத்தை திருமலைசமுத்திரம், திருக்கானூர்பட்டி உள்ளிட்ட பகுதியில் இருந்து வியாபாரிகள் மொத்தமாக வாங்கிச் செல்வார்கள். இவ்வாறு அவர் தெரிவித்தார்.