இருக்கு... ஆனா இல்ல: அது இருந்தா இன்னும் நல்லா இருக்கும்... பயணிகள் கோரிக்கை எதற்காக?
கோடை காலம் என்பதால் வெயிலின் தாக்கம் அதிகம் இருக்கும் இப்போது முதியவர்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகினர். இதனால் சிலர் மயக்கமடையும் நிலையும் ஏற்பட்டது.

புதுக்கோட்டை: நிழற்பந்தல் அமைச்சீங்க நன்றி... இதையே தற்காலிக ஷெட் போல் அமைத்தால் மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்று பொதுமக்கள் மற்றும் பயணிகள் வலியுறுத்தி உள்ளனர்.
புதுக்கோட்டை புதிய பஸ் நிலையத்தில் டவுன் பஸ்கள் நிறுத்துமிடத்தில் பயணிகளின் கோரிக்கையை ஏற்று நிழற்பந்தல் அமைக்கப்பட்டுள்ளது. இருப்பினும் இதை இன்னும் பயனுள்ளதாக அமைத்து தர வேண்டும் என்பதுதான் தற்போதைய கோரிக்கையாக உள்ளது. புதுக்கோட்டை புதிய பஸ் நிலையத்தில் கட்டிடங்கள் சேதமடைந்த நிலையில் அதனை இடித்து விட்டு புதிதாக கட்டப்பட உள்ளது. சேதமடைந்த கட்டிடங்கள் முழுவதுமாக இடிக்கப்பட்ட நிலையில் அந்த இடம் மைதானம் போல காட்சியளிக்கிறது. பஸ் நிலையம் அருகில் உள்ள அரசு போக்குவரத்து கழக பணிமனை வளாகத்தில் தற்காலிக பஸ் நிலையத்தில் இருந்து புறநகர் பஸ்கள் இயக்கப்படுகிறது. டவுன் பஸ்கள் வழக்கம் போல பஸ் நிறுத்தத்தில் இருந்து இயக்கப்படுகிறது.
இந்த நிலையில் கட்டிடங்கள் முழுமையாக இடித்து அகற்றப்பட்டு விட்டதால் டவுன் பஸ்கள் நிறுத்துமிடத்தில் நிழற்குடை வசதி இல்லாமல் இருந்தது. இதனால் கிராமப்புறங்களுக்கு செல்ல வேண்டிய மக்கள் டவுன் பஸ்களுக்காக காத்திருக்கும் போது வெயில், மழையில் அவதி அடைந்து வந்தனர். மேலும் முதியவர்கள் இதனால் மிகுந்த அவதிக்குள்ளாகி வந்தனர். கோடை காலம் என்பதால் வெயிலின் தாக்கம் அதிகம் இருக்கும் இப்போது முதியவர்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகினர். இதனால் சிலர் மயக்கமடையும் நிலையும் ஏற்பட்டது. எனவே இப்பகுதியில் நிழற் பந்தல் அமைக்க வேண்டும் என்று பொதுமக்கள், பயணிகள் கோரிக்கை விடுத்தனர்.
மக்களின் சிரமத்தை போக்கும் வகையில் மாநகராட்சி நிர்வாகத்தினர் நேற்று நடவடிக்கை எடுத்தனர். புதுக்கோட்டை புதிய பஸ் நிலையத்தில் டவுன் பஸ்கள் நிறுத்துமிடத்தில் பசுமை பந்தல் என அழைக்கப்படும் நிழற்பந்தல் நேற்று அமைக்கப்பட்டது. நீண்ட வலையான இதனை பஸ்கள் நிறுத்துமிடம் எதிரே, அதாவது இரு சக்கர வாகன நிறுத்துமிட பக்கவாட்டு சுவர் அருகே கம்புகள் கட்டி அதன் மேல் நீண்ட வலையை மேற்கூரையை போல போட்டு தற்காலிகமாக அமைக்கப்பட்டுள்ளது. இதற்கு பொதுமக்கள் மத்தியில் வரவேற்பு கிடைத்துள்ளது. முக்கியமாக முதியவர்கள் உடன் நடவடிக்கை எடுத்த மாநகராட்சி நிர்வாகத்திற்கு நன்றியும் தெரிவித்துள்ளனர்.
அதேநேரத்தில் வலைபோல உள்ள இந்த பந்தலில் நேற்று மழை பெய்த போது அதில் இருந்து தண்ணீர் வடிந்தது. இதனால் பொதுமக்கள் நிழற்பந்தலை பயன்படுத்த முடியவில்லை. வெயில் அடிக்கும் போது வெயிலின் தாக்கமும் அதில் இருந்தது. இதனால் அந்த வலைக்கு பதிலாக மேற்கூரை போன்று ஷெட்கள் அமைக்க மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்த வலைப்பந்தல் ஏதோ வெயிலில் இருந்து தற்காத்துக் கொள்ள உதவும். இருப்பினும் இது நிரந்தரம் இல்லை. வேகமாக காற்று வீசினால் இந்த பந்தல் பிய்த்து கொண்டு சென்று விடலாம் அல்லது காற்றின் வேகத்தில் கிழிந்துவிடவும் வாய்ப்பு உள்ளது. எனவே மக்களின் கோரிக்கையை ஏற்று நடவடிக்கை எடுத்த மாநகராட்சி நிர்வாகம் இதை தற்காலிக ஷெட் போல் அமைத்து தந்தால் பயணிகள், பொதுமக்கள் பயன்பெறுவர். இதுகுறித்து பரிசீலனை செய்ய வேண்டும் என்று தெரிவித்துள்ளனர்.




















