ஒரு நாட்டின் பிரதமர் பெரும் முதலாளிக்கு ஏஜெண்டாக இருப்பது பெரும் அநீதி - முத்தரசன்
மோடி ஆட்சிக் காலத்தில் 23 பொதுத்துறை நிறுவனங்களை அதானி போன்ற நிறுவனங்களுக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளதாக முத்தரசன் விமர்சனம் செய்துள்ளார்.
மயிலாடுதுறையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வளர்ச்சி நிதி வழங்கும் மாவட்ட சிறப்பு பேரவை கூட்டம் மாவட்ட செயலாளர் சீனிவாசன் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் முத்தரசன் கலந்துகொண்டார். அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த முத்தரசன் கூறியதாவது:- இந்தியா விடுதலைக்கு பிறகு நமது நாடு வரலாற்றில் என்றும் கண்டிறாத மிகமோசமான சூழல் நிலவுகிறது. எழுதப்படாத சட்டத்தை மோடி தலைமையிலான ஆட்சி செயல்படுத்துகிறது. உண்மையை சொல்லாதே, உண்மையை சொன்னால் நாங்கள் அதனை ஏற்கமாட்டோம். நடவடிக்கை எடுப்போம். கைது செய்வோம், சிறையில் அடைப்போம் என்று மோடி தலைமையிலான மத்திய ஆட்சி மேற்கொண்டு வருகிறது.
அவர்கள் தேர்தல் நேரத்தில் அளித்த தமிழக மீனவர் பிரச்னைக்கு தீர்வு, விலைவாசி உயர்வு கட்டுப்படுத்துதல், வேலைவாய்ப்பு, கருப்புபணம் மீட்புபோன்ற வாக்குறுதிகளை நினைவுபடுத்தக்கூடாது. அதனை கேட்டதன் எதிரொலிதான் 2019-ம் ஆண்டு லோகச்பா தேர்தல் பரப்புரையின் போது ராகுல்காந்தி பேசியதற்கு தற்போது தண்டனை வழங்கப்பட்டு பதவி பறிக்கப்பட்டுள்ளது. லோக்சபாவில் அதானிக்கும், மோடிக்கும் உறவு என்ன, எவ்வளவு வெளிநாட்டு முதலீடுகள் ஈர்க்கப்பட்டு தொழில் தொடங்கப்பட்டது? என்று அடுக்கடுக்கான கேள்விகளை ராகுல் எழுப்பினார். ஜவகர்லால்நேரு முதல் மன்மோகன்சிங் வரை எல்லா பிரதமரும் தொழில் அதிபர்களோடு உறவாகத்தான் இருப்பார்கள். மாநில முதல்வர்களும் உறவாகத்தான் இருப்பார்கள். தொழில்முதலீட்டு மாநாடு நடத்துவார்கள்.
ஒரு நாட்டின் பிரதமர் ஒரு பெரும் முதலாளிக்கு ஏஜெண்டாக இருப்பது பெரும் அநீதி. அதானி என்கின்ற ஒற்றை நபருக்கு ஏஜெண்டாக செயல்பட்டு நாட்டை அடகு வைத்துவிட்டார். பல ஆயிரம்கோடி கொள்ளை அடித்தது குறித்து நாடாளுமன்ற நிலைக்குழு விசாரிக்க வேண்டுமென்று விசாரிக்க வலியுறுத்தினார். அதில் என்ன தவறு. ஒரு நபரை காப்பாற்ற நாடாளுமன்றத்தை நடக்கவிடாமல் மோடி செயல்படுகிறார். மோடி பாசிச பாதையில் செல்கிறார். பாசிச பாதையில் சென்றவர்கள் தோற்றுபோனார்கள், அந்த நிலையைத்தான் மோடி மேற்கொண்டிருக்கிறார். இதுமிக மிக ஆபத்தானது, தீர்ப்பு வழங்கிய நீதிமன்றம் மேல்முறையீடு செய்ய 30 நாள் அவகாசம் வழங்குகிறது. ஆனால் தீர்ப்பு வழங்கிய 24 மணிநேரத்தில் ராகுல்காந்தி எம்.பி.பதவி பறிக்கப்பட்டு வீடு காலிசெய்யப்படுகிறது. பழிவாங்க வேண்டும் என்பதை காட்டுகிறது.
என்னை எதிர்த்து பேசினால் தீர்த்து கட்டிவிடுவேன் என்பதைதான் மோடி அரசு செயல்படுத்திகொண்டிருக்கிறது. ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை உள்ள அனைத்து கட்சியினரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும். ஜனநாயகத்தின் மீது நடத்தப்பட்ட மிகப்பெரிய தாக்குதல் அதனை அகற்ற அனைவரும் ஒன்றிணைய வேண்டும். இந்திராகாந்தி பிரதமராக இருந்த காலங்களில் 66 பொதுத்துறை நிறுவனங்கள் உருவாக்கப்பட்டது. வாஜ்பாய்காலத்தில் 17 பொதுத்துறை நிறுவனங்கள் உருவாக்கப்பட்டது. ஆனால் மோடி ஆட்சிக்காலத்தில் 23 பொதுத்துறை நிறுவனங்களை அதானிபோன்ற நிறுவனங்களுக்கு விற்பனை செய்துள்ளார் என்றார்.
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்