Pongal 2024: தஞ்சாவூர் மாநகராட்சி அலுவலகத்தில் சமத்துவ பொங்கல் விழா கோலாகல கொண்டாட்டம்
தஞ்சை மாநகராட்சி அலுவலகத்தில் சமத்துவ பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. இதில் மண்பானையில் பொங்கலிட்டு வழிபாடு செய்தனர். இதையொட்டி கோலப்போட்டி, விளையாட்டு போட்டிகளும் நடத்தப்பட்டன.
தஞ்சாவூர்: தஞ்சை மாநகராட்சி அலுவலகத்தில் சமத்துவ பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. இதில் மண்பானையில் பொங்கலிட்டு வழிபாடு செய்தனர். இதையொட்டி கோலப்போட்டி, விளையாட்டு போட்டிகளும் நடத்தப்பட்டன.
தமிழர்களின் திருநாளான பொங்கல் பண்டிகை வரும் 15-ந்தேதி (திங்கட்கிழமை) கொண்டாடப்படுகிறது. இதையொட்டி அரசு அலுவலகங்கள், பள்ளி, கல்லூரிகளில் சமத்துவ பொங்கல் விழா கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில் தஞ்சை மாநகராட்சி அலுவலகத்தில் நடந்த பொங்கல்விழாவில் மேயர் சண்.ராமநாதன், துணை மேயர் டாக்டர் அஞ்சுகம்பூபதி, ஆணையர் மகேஸ்வரி ஆகியோர் கலந்துகொண்டு புதுப்பானையில் பொங்கலிட்டு விழாவை தொடங்கி வைத்தனர்.
இதனை தொடர்ந்து கோலப்பேட்டி, சாக்குப்போட்டி, பலூன்உடைத்தல்,, கயிறு இழுத்தல், ஓட்டப்பந்தயம், மெதுவாக சைக்கிள் ஓட்டுதல், சோடா பாடடிலில் நீர் நிரப்புதல், முறுக்கு சாப்பிடுதல், வடை சாப்பிடுதல், பாட்டுப்போட்டி, இசை நாற்காலி, உறி அடித்தல் போன்ற விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டன.
இதில் மாநகராட்சி அதிகாரிகள், பணியாளர்கள் கலந்து கொண்டனர். உரி அடித்தல் போட்டியில் தஞ்சை மாநகராட்சி மேயர் சண்.ராமநாதனும், இசை நாற்காலி போட்டியில் மண்டலக்குழு தலைவர் ரம்யாசரவணன் முதல் பரிசும், துணை மேயர் டாக்டர் அஞ்சுகம்பூபதி 2-ம் பரிசும், மாநகராட்சி ஆணையர் மகேஸ்வரி 3-ம் பரிசும் பெற்றனர்.
கயிறு இழுத்தல் போட்டியில் ஆண்கள் பெண்கள் என சரிசமம் என்று நிரூபிக்கும் வகையில் ஒருபுறம் மேயர் சண்.ராமநாதன் மற்றும் ஆண் கவுன்சிலர்களும், மற்றொருபுறம் துணை மேயர் அஞ்சுகம் பூபதி, ஆணையர் உமா மகேஸ்வரி மற்றும் பெண் கவுன்சிலர்களும் கலந்து கொண்டனர். இதில் இருதரப்பினரும் தங்களின் பலத்தை நிரூபிக்க போட்டி போட்டுக்கொண்டு கயிறை இழுத்தனர் இதில் சட்டென்று கயிறு அறுந்ததால் மேயர், துணை மேயர், ஆணையர் உட்பட அனைவரும் கீழே விழுந்தனர். அங்கு கூடி நிகழ்ச்சியை பார்த்தவர்கள் இடையே இது பெரும் நகைச்சுவையை ஏற்படுத்தியது.
தொடர்ந்து வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளும் வழங்கப்பட்டன. நிகழ்ச்சியை கவிஞர் ராகவ்மகேஷ் தொகுத்து வழங்கினர். முன்னதாக மாநகராட்சி பொறியாளர் சேர்மக்கனி வரவேற்றார். முடிவில் மாநகர் நல அலுவலர் டாக்டர் சுபாஷ்காந்தி நன்றி கூறினார்.
கலெக்டர் அலுவலகம்: தஞ்சை கலெக்டர் அலுவலகத்தில் சமத்துவ பொங்கல் விழா நடைபெற்றது. இதில் கலெக்டர் தீபக்ஜேக்கப், கூடுதல் கலெக்டர் ஸ்ரீகாந்த், வருவாய் அலுவலர் தியாகராஜன் ஆகியோர் மண்பானையில் பொங்கல் வைத்து விழாவை தொடங்கி வைத்தனர்.
பின்னர் வழிபாடு நடத்தி அனைவருக்கும் சர்க்கரைப்பொங்கல் வழங்கப்பட்டன. அதைத் தொடர்ந்து அரசு ஊழியர்களுக்கு கோலப்போட்டி, கயிறு இழுத்தல் உள்ளிட்ட விளையாட்டு போட்டிகளும் நடத்தப்பட்டன. இதில் கலெக்டர் அலுவலகத்தில் பணிபுரியும் அதிகாரிகள், ஊழியர்கள் என அனைவரும் கலந்து கொண்டனர். போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு கலெக்டர் தீபக்ஜேக்கப் பரிசுகளையும் வழங்கினார்.