தஞ்சாவூர் விவசாயிகள் கண்ணீர்: அறுவடை தேக்கம், கொள்முதல் முடக்கம் - பி.ஆர்.பாண்டியன் வேதனை
வரலாற்றில் இல்லாத வகையில் தஞ்சாவூர், நாகப்பட்டினம், திருவாரூர், மயிலாடுதுறை மாவட்டங்களில் மட்டும் ஆறரை லட்சம் ஏக்கரில் குறுவை சாகுபடி செய்யப்பட்டுள்ளது.

தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே கார்காவயல், பண்ணை வயல் உள்ளிட்ட பகுதிகளில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் 10 ஆயிரம் மூட்டை கொள்முதலுக்காக குவித்து வைக்கப்பட்டுள்ளது. அறுவடை செய்ய வேண்டிய பயிர்களும் வயலிலே நின்று கொண்டிருக்கிறது. எனவே கொள்முதலை தடையின்றி தொடங்க வேண்டும் என்று பி.ஆர்.பாண்டியன் வலியுறுத்தினார்.
கோட்டாக்குடி, பண்ணவயல் கிராமங்களில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் கொள்முதல் தடைப்பட்டுள்ளதை நேரில் பார்வையிட்ட தமிழக காவிரி விவசாயிகள் சங்கத்தின் பொதுச் செயலாளர் பி ஆர் பாண்டியன் நிருபர்களிடம் கூறியதாவது:
வரலாற்றில் இல்லாத வகையில் தஞ்சாவூர், நாகப்பட்டினம், திருவாரூர், மயிலாடுதுறை மாவட்டங்களில் மட்டும் ஆறரை லட்சம் ஏக்கரில் குறுவை சாகுபடி செய்யப்பட்டுள்ளது. இந்த ஆறரை லட்சம் ஏக்கர் குறுவை சாகுபடி பயிர்கள் முழுமையும் செப்டம்பர் மாதம் துவங்கி அக்டோபர் 15 தேதிக்குள் அறுவடை முடிக்கப்பட வேண்டும். அக்டோபர் 20ம் தேதி வடகிழக்கு பருவமழை துவங்க இருக்கிறது.
இந்நிலையில், டெல்டா பகுதிக்கு மிகப்பெரும் பேரழிவு பெருமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. பட்டுக்கோட்டை அருகே கார்காவயல், பண்ணை வயல் உள்ளிட்ட பகுதிகளில் ஒரு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில், 10 ஆயிரம் மூட்டை கொள்முதலுக்காக காத்துள்ளன. அறுவடை செய்ய வேண்டிய பயிர்களும் வயலிலே நின்று கொண்டிருக்கிறது.
இந்நிலையில் கொள்முதலில் ஏற்பட்டிருக்கிற மிகப்பெரிய பின்னடைவு, விவசாயிகள் மிகப்பெரும் பாதிப்புக்கு ஆளாக உள்ளனர். எனவே,தமிழக அரசு உயர்மட்டக்குழுவை அனுப்பி வைத்து விரைந்து கொள்முதல் செய்வதற்கான நடவடிக்கைகளை துவங்க வேண்டும். நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டு, செயல்பாட்டிற்கு வந்தால் தான் அறுவடையை செய்ய முடியும் என்கிற நிலை ஏற்பட்டிருப்பதால், அன்றாடம் கொள்முதல் செய்வதற்கான நடைமுறையை துவங்க வேண்டும்.
அறுவடை செய்து கொள்முதல் செய்யக்கூடிய நெல் மூட்டைகள் அனைத்தும் அன்றாடம் அரவை ஆலைகளுக்கு அனுப்பி வைக்கப்பட வேண்டும். இரண்டு ஆண்டுகளாக திறந்தவெளி, கிடங்குகள் தற்காலிகமாக அமைக்கப்படாமல் கைவிடப்பட்டுள்ளது. இந்தாண்டு அதிக விளைச்சல் அதிக நிலப்பரப்பில் குறுவை சாகுபடி மேற்கொண்டு இருப்பதால் விரைந்து திறந்தவெளி கிடங்குகளை, ஏற்படுத்தி அன்றாட கொள்முதல் செய்யக்கூடிய நெல்லை அரவைக்கு அனுப்பியது போக மீதம் உள்ள நெல்லை, திறந்தவெளி கிடங்குகளில் அடுக்கி வைக்க வேண்டும்.
மாறாக கொள்முதல் நிலையங்களில் அடுக்கி வைப்பதால் விவசாயிகள் நெல்லை கொண்டு வரும் நெல்லை கொள்முதல் செய்ததற்கு வாய்ப்பு இல்லாத நிலையில் அறுவடையும் தடைப்படுகிறது எனவே தமிழ்நாடு அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கொள்முதல் தொடர்பாக, அதிகாரிகளிடம் பேசிய போது, ஆய்வு கூட்டங்கள் நடத்தி தீர்வு காணப்படும் என்று உத்தரவாதம் கொடுத்திருக்கிறார்கள். உடனடியாக வேளாண் துறை அமைச்சரும், உணவு துறை அமைச்சரும் காவிரி டெல்டா மாவட்டங்களில் விவசாயிகளை, அதிகாரிகளை அழைத்து ஒரு இடத்தில் அமர்ந்து கருத்துக்களை கேட்டு விரைந்து கொள்முதல் செய்வதற்கான நடவடிக்கை முதலமைச்சர் அமைச்சர் மேற்கொள்ள வேண்டும்.
நேரடியாக கொள்முதலுக்கு முதலமைச்சர் பொறுப்பேற்க வேண்டும். உணவுத்துறை அமைச்சரை மட்டும் நம்பி தமிழக அரசு செயல்பட முடியாத நிலை முட்டுக்கட்டை ஏற்பட்டிருக்கிறது. கொள்முதலில் அனுபவம் பெற்ற அமைச்சர்களையும், அதிகாரிகளையும் இந்த மாவட்டங்களுக்கு அனுப்பி வைத்து கொள்முதலை விரிவுபடுத்த வேண்டும். இல்லையென்றால் பாதிக்கப்படுகிற விவசாயிகள் நேரடியாக களம் இறங்குவார்கள். இதை யாரும் ஏற்பாடு செய்ய வேண்டியதில்லை. ஆகவே பாதிக்கப்படுகிற விவசாயிகள் வீதிக்கு வருவார்கள். எனவே தமிழக அரசு தான் இதை எதிர்கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.





















