அம்பானிக்கும், அதானிக்கும் விவசாயிகளை அடிமைகளாக்கும் வகையில் பாஜக ஆட்சி - ஹன்னன் முல்லா
அம்பானிக்கும் அதானிக்கும் விவசாயிகளை அடிமைகளாக்கும் வகையில் பாரதிய ஜனதா கட்சி ஆட்சி நடத்துகிறது என அகில இந்திய விவசாயிகள் சங்கத்தின் அகில இந்திய பொதுச் செயலாளர் ஹன்னன் முல்லா தெரிவித்துள்ளார்.
நாகையில் நடைபெறும் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாநில மாநாட்டில் பங்கேற்பதற்காக டெல்லியிலிருந்து இரயில் மூலம் மயிலாடுதுறைக்கு வந்தடைந்த அகில இந்திய விவசாயிகள் சங்கத்தின் அகில இந்திய பொதுச்செயலாளர் ஹன்னன் முல்லா , அகில இந்திய தலைவர் அசோக் தாவ்லே, அகில இந்திய துணை செயலாளர் விஜூ கிருஷ்ணன், பொருளாதார நிபுணர் பேராசிரியர் வெங்கடேஷ் ஆத்ரேயா, முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும், தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாநில துணைத்தலைவருமான டில்லி பாபு ஆகியோருக்கு தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் மயிலாடுதுறை மாவட்டக்குழு மற்றும் மார்க்சிஸ்ட் கட்சி, கரும்பு விவசாயிகள் சங்கம், தமிழ்நாடு அனைத்து சமய நிலங்களில் குடியிருப்போர் பாதுகாப்பு சங்கங்கள் சார்பில் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
தொடர்ந்து அகில இந்திய விவசாய சங்க தலைவர்கள் கேனிக்கரை பகுதியில் உள்ள பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தனர். முன்னதாக செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில், அகில இந்திய விவசாயிகள் சங்க மாநாடு டிசம்பர் மாதம் கேரளாவில் நடைபெறுகிறது. இதனை ஒட்டி ஒவ்வொரு மாநிலமாக விவசாயிகள் சங்க மாநாடு நடைபெற்று வருகிறது. அதன்படி தமிழ்நாட்டில் முப்பதாவது விவசாயிகள் சங்க மாநில மாநாடு நடைபெறுகிறது. இதில் பங்கேற்பதற்காக வருகை தந்துள்ளோம்.
எட்டு ஆண்டு பிரதமர் மோடியின் ஆட்சியில் ஒரு லட்சம் விவசாயிகள் கடன் சுமை மற்றும் விவசாயத்தில் ஏற்பட்ட நஷ்டம் காரணமாக தற்கொலை செய்து கொண்டுள்ளனர். இயற்கை பேரிடர் காரணமாக விவசாயம் விளைச்சல் பாதிக்கும்போது அதற்கு உரிய நஷ்ட ஈடு மத்திய அரசு தருவதில்லை. மேலும், விளைபொருள்களுக்கு உரிய குறைந்தபட்ச ஆதார விலையும் வழங்குவதில்லை. எட்டு வழி சாலை போன்ற திட்டங்களுக்காக வலுக்கட்டாயமாக விவசாயிகளிடமிருந்து விளைநிலங்கள் பறிக்கப்படுகின்றன.
பல லட்சம் தொழிலாளர்கள் வேலை இழப்பை சந்தித்துள்ளனர் பாரதிய ஜனதா கட்சி ஆட்சியில் அம்பானிக்கும் அதானிக்கும் விவசாயிகளை அடிமைகள் ஆக்கும் போக்கு நடைபெற்று வருகிறது. 500க்கும் மேற்பட்ட விவசாய சங்கத்தினர் இணைந்து 750 உயிர்களை பலி கொடுத்து வேளாண் திருத்த சட்டங்களை தடுத்து நிறுத்தி உள்ளோம். தொடர்ந்து மத்திய அரசின் வேளாண் விரோத செயல்களை கண்டித்து தொடர் போராட்டங்கள் முன்னெடுப்போம் என்று கூறினார்.
பிரதமர் நரேந்திர மோடியின் பிறந்தநாள் விழாவை ஒட்டி மயிலாடுதுறையில் மாவட்ட அளவிலான கபடி போட்டியை பாஜக மாவட்ட தலைவர் தொடங்கி வைத்தார்.
பாரத பிரதமர் நரேந்திர மோடியின் பிறந்தநாள் விழாவை மயிலாடுதுறையில் பாரதிய ஜனதா கட்சியினர் பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கி கொண்டாடி வருகின்றனர். மயிலாடுதுறை ராஜன் தோட்டத்தில் மோடி பிரீமியர் கபாடி லீக் போட்டிகள் நடத்தப்பட்டன. மாவட்ட அளவில் நடத்தப்பட்ட இந்த போட்டியில் அமெச்சூர் கபடி கழகத்தைச் சேர்ந்த 40 அணி வீரர்கள் பங்கேற்று விளையாடினர்.
பாஜக மாவட்ட விளையாட்டு பிரிவு சார்பில் நடைபெற்ற இந்த போட்டிகளை பாஜக மாவட்ட தலைவர் அகோரம் துவக்கி வைத்தார். பாஜக மாநில மாவட்ட மற்றும் நகர நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இதில் கபடி அணி வீரர்கள் ஆக்ரோஷமாக மோதிக்கொண்டனர்.