சீர்காழி: கொள்ளிடம் ஆற்றின் நடுதிட்டில் சிக்கிய தாய், மகன் - மீட்பு முயற்சியில் தாய் பலியான சோகம்
சீர்காழி அருகே கொள்ளிடம் ஆற்றின் நடுதிட்டில் சிக்கிய தாய், மகனை மீட்கும் போது ஏற்பட்ட படகு விபத்தில் மீட்கப்பட்ட தாய் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
கர்நாடக மாநிலத்தில் உள்ள காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் கனமழை காரணமாக மேட்டூர் அணைக்கு நீர் வரத்து அதிகரித்துள்ளது. இதனால் மேட்டூர் அணை நிரம்பியுள்ளது. அணையின் பாதுகாப்பு கருதி அணையில் இருந்து உபரி நீர் தொடர்ந்து வெளியேற்றப்பட்டு வருகிறது. இந்நிலையில், கடந்த 17 ஆம் தேதியில் இருந்து திருச்சி அணையில் இருந்து கொள்ளிடம் ஆற்றில் ஒரு லட்சத்து 25 ஆயிரம் கன அடி உபரி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.
இந்த நீரானது மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அடுத்த கொள்ளிடம் ஆற்றின் வழியே பழையாறு அருகே கடலில் கலந்து வருகிறது. தொடர்ந்து வெள்ள நீர் அதிகரித்து வருவதால் கொள்ளிடம் ஆற்றின் கரையோரம் உள்ள ஆற்றங்கரை தெரு, ஆற்றின் படுகையில் அமைந்துள்ள நாதல்படுகை உள்ளிட்ட பகுதிகளில் 10 க்கும் மேற்பட்ட வீடுகளை வெள்ளநீர் சூழ்ந்துள்ளது. அதேபோல் நாதல்படுகை மற்றும் முதலைமேடு திட்டு கிராமத்தில் பயிரிடப்பட்டிருந்த 300 ஏக்கர் பரப்பளவிலான பருத்தி, சோளம், வெண்டை, கத்தரி, உள்ளிட்ட தோட்டக்கலை பயிர்கள் மற்றும் முல்லை, மல்லி, செவ்வந்தி உள்ளிட்ட பூச்சொடிகள் முற்றிலுமாக வெள்ள நீரில் மூழ்கியுள்ளது.
நேற்று முதல் பயிர்கள் தண்ணீரில் மூழ்கியுள்ளதாலும் மேற்கொண்டு சில தினங்களுக்கு தண்ணீர் குறைவதற்கான வாய்ப்பு இல்லாததாலும் பயிர்களை காப்பாற்ற முடியாத நிலை ஏற்பட்டுள்ளதால் விவசாயிகள் கவலையில் ஆழ்ந்துள்ளனர். மேலும், 20க்கும் மேற்பட்ட செங்கல் சூளைகளை சுற்றி தண்ணீர் சூழ்ந்துள்ளதால் இதனால் சுடாத செங்கற்கள் முற்றிலும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் அடுத்த நாதல்படுகை கிராமத்தைச் சேர்ந்த 55 வயதான காந்திமதி என்பவர் கொள்ளிடம் ஆற்றில் உள்ள நடுத்திட்டு பகுதியில் தங்கி ஆடுகள் மேய்த்து வருகிறார். இந்த சூழலில் கொள்ளிடம் ஆற்றில் அளவுக்கு அதிகமான உபரிநீர் வெளியேற்றப்பட்டதால் ஆற்றின் நடுவே தங்கி ஆடு மேய்த்த காந்திமதிக்கு தகவல்கள் தெரியாததால் ஆற்றின் நடுவே சிக்கி கொண்டார். அவரை மீட்டு நாட்டுப்படகு மூலம் கொண்டு வரும்போது கொள்ளிடம் ஆற்றில் தண்ணீரின் ஓட்டம் அதிகரித்ததால் படகு திடீரென கவிழ்ந்தது. படகை ஓட்டிய செல்வராஜ் என்பவரும் படகில் பயணித்த காந்திமதியின் மகன் ராசுகுட்டி என்பவரும் நீந்தி கரை சேர்ந்துவிட்டனர்.
ஆனால், காந்திமதி அங்கிருந்த மரத்தை பிடித்துக்கொண்டு உயிருக்கு போராடி கொண்டிருந்தார். தகவலறிந்த கீழ குண்டல பாடி கிராமத்தைச் சேர்ந்த மக்கள் விசை படகு மூலம் சென்று அவரை மீட்டு சிதம்பரம் முத்தையா மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். ஆனால் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இவர்கள் பயணித்த நாட்டு படகு வெள்ளநீரில் அடித்து செல்லப்பட்டது. இதுகுறித்து கொள்ளிடம் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம் கொள்ளிடம் பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்