ஏபிபிநாடு செய்தி எதிரொலி: ஆஹா... பாசன வாய்க்கால் புதுப்பாலம் திறந்தாச்சு.. மகிழ்ச்சியில் மக்கள்
பாசன வாய்க்காலில் அமைக்கப்பட்டு இருந்த தற்காலிக பாதையும் முழுமையாக நீக்கப்பட்டு தண்ணீர் வேகமாக பாய்ந்தோடும் வகையில் தூர்வாரப்பட்டுள்ளது.

தஞ்சாவூர்: தஞ்சாவூர் அருகே புதுகல்விராயன்பேட்டையில் புதிதாக கட்டப்பட்டு வந்த பாசன வாய்க்கால் சாலை முழுமையாக முடிக்கப்பட்டு போக்குவரத்திற்காக திறக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த பாலத்திற்கான இணைப்பு சாலை அமைக்கும் பணி வெகுவேகமாக நடந்து வருகிறது.
தஞ்சாவூர் மாவட்டம் புதுகல்விராயன்பேட்டையில் குண்டும், குழியுமாக இருந்த சாலையை சீரமைக்கப்பட்டு புதிய தார்சாலை அமைக்கப்பட்டது. இந்த பகுதியில் இருந்த பழமையான பாசன வாய்க்கால் பாலத்தையும் இடித்து தற்போது அகலப்படுத்தி புதிய பாலம் அமைத்து வாகன போக்குவரத்து நடந்து வருகிறது. இந்த பாலத்திற்கான இணைப்பு சாலை அமைக்கும் பணிகள் மும்முரமாக நடந்து வருகிறது.
ஆலக்குடியிலிருந்து பூதலூருக்கு செல்லும் வழியில் அமைந்துள்ளது புதுக்கல்விராயன்பேட்டை. இந்த கிராமத்தில் பேருந்து நிறுத்தும் இடத்திலிருந்து தஞ்சாவூர் நோக்கி செல்லும் சாலை மிகவும் குண்டும், குழியுமாக இருந்தது. இந்த சாலை வழியாக வழியாக ஆலக்குடி, வண்ணாரப்பேட்டை, 8 நம்பர் கரம்பை, தஞ்சாவூருக்கு என தினமும் நூற்றுக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன.
மேலும் திருக்காட்டுப்பள்ளி, பூதலூர், சித்திரக்குடி உட்பட பல பகுதிகளை சேர்ந்தவர்கள் தஞ்சாவூரில் பல்வேறு வர்த்தக நிறுவனங்களில் பணியாற்றுகின்றனர். இவர்கள் இருசக்கர வாகனத்தில் தஞ்சாவூருக்கு பணிக்காக வந்துவிட்டு செல்கின்றனர். கடந்த இரண்டு ஆண்டுகளாக இந்த சாலை பழுதடைந்து காணப்பட்டது. தொடர்ந்து சிறிது சிறிதாக இந்த சாலை முழுவதும் குண்டும், குழியுமாக மாறி விட்டது.

கடந்த நவம்பர், டிசம்பர் மாதத்தில் பெய்த கனமழையால் இந்த சாலை மிகவும் மோசமான நிலையில் ஆங்காங்கே பெரும் பள்ளமாக மாறியது. இதனால் இரவு நேரத்தில் வாகனத்தில் வருபவர்கள் மிகுந்த அவதிக்கு உள்ளாகி வந்தனர். இந்த சாலையின் அவலம் குறித்து ஏபிபிநாடு செய்தி வெளியிட்டது. இதையடுத்து இந்த சாலையை அகலப்படுத்தி சீரமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதற்காக இப்பகுதியில் குடிநீர் குழாய்கள் சீரமைக்கப்பட்டு சாலையை அகலப்படுத்தி புதிய சாலை போடப்பட்டுள்ளது. இரண்டு ஆண்டுகளுக்கும் மேல் சரியான சாலை இல்லாமல் அவதிப்பட்டு வந்த வாகன ஓட்டுனர்கள் புதிய சாலை அமைக்கப்பட்டதால் வெகுவாக மகிழ்ச்சி அடைந்தனர். இதற்கிடையில் இப்பகுதியில் உள்ள பழமையான பாசன வாய்க்கால் பாலமும் இடிக்கப்பட்டு கட்டப்பட்டு வந்தது.
வாகன போக்குவரத்திற்காக தற்காலிக பாதை அமைக்கப்பட்டு அதன் வழியாக வாகனங்கள் சென்று வந்தன. இந்த பணிகளை நெடுஞ்சாலைத் துறை கோட்டப் பொறியாளர் செந்தில்குமார், உதவி கோட்டப் பொறியாளர் கீதா, தரக்கட்டுப்பாடு உதவிகோட்டப் பொறியாளர் வேணுகோபால் ஆகியோர் பார்வையிட்டு பணிகளை விரைவாகவும், தரமாகவும் முடிக்க அறிவுறுத்தினர். இந்நிலையில் பாலம் அகலப்படுத்தி முழுமையாக முடிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் மேட்டூர் அணை திறக்கப்பட்டு பாசனத்திற்காக கல்லணையும் திறக்கப்பட்டுள்ளதால் இப்பகுதி விவசாயிகள் இந்த பாலம் பணிகள் நிறைவடைந்து தண்ணீர் வருமா என்று எதிர்பார்த்து இருந்தனர். காரணம் இந்த பாசன வாய்க்காலில் வரும் தண்ணீரை நம்பி நூற்றுக்கணக்கான நிலங்களில் சாகுபடி பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்பதுதான்.
தற்போது இந்த பாலம் வாகனப்போக்குவரத்திற்காக திறக்கப்பட்டுள்ளது. மேலும் பாலத்திற்கான இணைப்பு சாலை அமைக்கும் பணிகள் மும்முரமாக நடந்து வருகிறது. இதற்கிடையில் பாசன வாய்க்காலில் அமைக்கப்பட்டு இருந்த தற்காலிக பாதையும் முழுமையாக நீக்கப்பட்டு தண்ணீர் வேகமாக பாய்ந்தோடும் வகையில் தூர்வாரப்பட்டுள்ளது. இதையடுத்து பாலத்தின் பணிகளை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுத்த அதிகாரிகள் விவசாயிகளும், பொதுமக்களும் நன்றியும், பாராட்டும் தெரிவித்தனர்.





















