ஸ்மார்ட் சிட்டியாக மாறும் தஞ்சாவூர் -3 வீதி சாலைகள் நவீன முறையில் மேம்படுத்தும் பணிகள் தொடக்கம்
’’மழை நீர் வடிகால் மற்றும் நீர் வழிப்பாதையின் மீது கட்டப்பட்டுள்ள தற்காலிக- நிரந்தர கட்டுமானங்களை வரும் 18ஆம் தேதிக்குள் அகற்ற மாநகராட்சி ஆணையர் உத்தரவு’’
மத்திய அரசு, இந்தியாவில் 100 நகரங்களை ஸ்மார்ட் சிட்டியாக மாற்றுவதற்கு அறிவித்தது. அதில் தமிழகத்தில் உள்ள 11 நகரங்களில் தஞ்சை நகரமும் ஒன்று. இதற்காக 1,289 கோடி ஒதுக்கியுள்ளது. இதில் மத்திய அரசு 50 சதவீதமும், மாநில அரசு 50 சதவீதமும் வழங்குகிறது. இந்த நிதியின் கீழ் பாரம்பரியமான தஞ்சாவூர் நகரை மேலும் அழகு படுத்தும் வகையில் கோட்டை அகழி மேம்பாடு, குளங்கள் மறுசீரமைப்பு, குடிநீர் அபிவிருத்தி, புதை சாக்கடை சீரமைப்பு பணிகள், காய்கறி சந்தைகள் சீரமைப்பு, மணிகூண்டு சீரமைப்பு, பழைய பேருந்து நிலையம் புதுப்பித்தல், பூங்காக்கள் சீரமைப்பு, நகரங்களின் சாலைகள் புதுப்பித்தல், நகர்புறங்களில் தெருக்கள் மேம்பாடு, புராதன சின்னங்கள் பழமை மாறாமல் சீரமைப்பது என 90 திட்டங்கள் தொடங்கப்பட்டன. இதில் 16 திட்டப்பணிகள் நிறைவு பெற்றுள்ளது. மீதமுள்ள பணிகள் நடைபெற்று வருகிறது.
இந்த திட்டத்தின் கீழ் மேலவீதி, தெற்கு வீதி, வடக்கு வீதி ஆகிய மூன்று வீதி சாலைகளை அகலப்படுத்தி, மழை நீர் செல்லும் வகையில், ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் பணிகள் நடைபெறவுள்ளது. இந்த மூன்று வீதி சாலைகளில் 1.9 மீட்டர் அகலம் முதல் 2.5 மீட்டர் வரை நடைபாதை அமையவுள்ளது. 4 தெருக்களிலும் தேர் ஓட்டப்படும் போது தெருக்களின் தன்மை மற்றும் கோவில் திருவிழாக்களின் முக்கியத்துவத்தை கருத்தில் கொண்டு, சாலை அமைக்கப்படுகிறது. வடக்கு பிரதான வீதி நடைபாதைகள், சாலை ஓர வடிகால்கள் மற்றும் பயன்பாடுகளுக்கான பிரத்யேக இடத்துடன் தரமான 3 வழிச்சாலை வண்டிப்பாதை கட்டமைப்பாக மேம்படுத்தப்படவுள்ளது. அடையாளம் காணப்பட்ட கூடுதல் நிலம் பார்க்கிங் இடமாகப் பயன்படுத்தப்படுகிறது.
ஒவ்வொரு நடைபாதையிலும் வழக்கமான குறுக்குவெட்டுகளில் நடைபாதை வடிகால் மற்றும் பயன்பாடுகளும் உள்ளன. அனைத்து சாலைகளில், அடையாளம், விவரக்குறிப்புகள், அலுமினிய தட்டுக்கு மேல் பொருத்தப்பட்ட நவீன ரிப்லெக்டிவ் ஷீட் உடனும், இரும்பு, குழாய்களில், அடையாளங்கள், அறிகுறிகள் வைக்கப்படவுள்ளது. இந்த அடையாளங்களில், சாலை மையம், விளிம்பு கோடு, தொடர்ச்சி கோடு, நிறுத்த கோடு, வழி கோடுகள், மூலைவிட்ட-செவ்வகரான் அடையாளங்கள் மற்றும் வரிக்குதிரை போல் வௌ்ளை கோடுகள் மற்றும் பார்க்கிங் பகுதிகளில் அமைக்கப்படவுள்ளது. சாலை குறியீடுகள் மிகவும் பொருத்தப்பட்ட அதி நவீன தெர்மோபிளாஸ்டிக் வண்ணப்பூச்சுகளுடன் கண்ணாடி விவரங்களை பிரதிபலிக்கும் கண்ணாடி வைக்கப்படுகிறது. இரவு நேரம் மற்றும் ஈரமான வானிலையில் பார்வைத்திறனை மேம்படுத்த பிரதிபலிப்பு ஸ்டட்கள் வழங்கப்பட வேண்டும். இவை நவீன ரெட்ரோ ரிப்ளெக்டிவ் வகையில் அமைக்கப்படுகிறது.
மின்தேக்கிகள் மற்றும் தானியங்கி சென்சார் மற்றும் வெளிச்சத்தை மேம்படுத்துதல் மற்றும் அதே நேரத்தில் குறைந்தபட்ச மின்சக்தியை மேம்படுத்துதல் ஆகியவற்றுடன் திறமையான மற்றும் நவீன விளக்கு சாதனங்கள் வைக்கப்படுகிறது. பேருந்து நிறுத்தங்கள் போன்ற பொருத்தமான தேர்ந்தெடுக்கப்பட்ட இடங்களில் சரியான வழியில் தோட்டங்கள் வைக்கப்படுகிறது. பயன்பாட்டுச் சேவைகளை அமைத்தல், பராமரித்தல், பழுதுபார்ப்பதற்காக அடிக்கடி சாலையை வெட்டுவதைத் தவிர்ப்பதற்காக 300 மிமீ இருக்க வேண்டும். குழாய்கள் இரட்டை வரிசைகளில் முழு அகலத்திற்கும் சாலையின் குறுக்கே ஒவ்வொரு 250.மீ இடைவெளியிலும் சேவை துறைகளான மின்சாரம், தொலைபேசி, நீர் மற்றும் கழிவுநீர் செல்வதற்கு முக்கியத்துவம் கொடுத்து அமைக்கப்படுகிறது. சாலையின் இருபுறமும் நடைபாதைகளை அமைப்பதால், தண்ணீர் தேங்குவதைத் தவிர்க்க போதுமான வடிகால் மற்றும் தொடர்ச்சியான வடிகால்களும், சரியான சாலை அடையாளங்கள் மற்றும் அடையாளங்களை வழங்கவும், தெரு விளக்குகளை சீரமைக்கும் வசதி செய்து கொடுக்கப்பட்டுள்ளது.
தினந்தோறும் நான்கு வீதிகளான, வடக்கு வீதி 15,643 வாகனங்களும், மேற்கு வீதியில் 17,362 வாகனங்களும், தெற்க வீதியில் 19,800 வாகனங்களும், கிழ வீதியில் 21456 வாகனங்களும் சென்று வருகின்றன. இதனை கருத்தில் கொண்டு, மூன்று வீதிகளை, ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் நவீன முறையில் மேம்படுத்தும் பணி விரைவில் தொடங்கப்படவுள்ளது. இந்த வீதிகளில் உள்ள இடத்தின் அகலத்தை பொறுத்து, சாலைகளை அகலப்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. தஞ்சையின் புரதான பாரம்பரியமிக்க தஞ்சை பெரியக்கோவில் யுனஸ்கோவால் அங்கீகரிக்கப்பட்டு உள்ளது. தஞ்சை மாநகரில் பிரதான நான்கு வீதிகள் ஏற்கனவே நன்கு வடிவமைக்கப்பட்டு, மழைநீர், குளங்களுக்கு கொண்டு செல்லும் வாய்க்கால்கள் வடிவமைக்கப்பட்டுள்ளது. பல ஆண்டுகளுக்கு முன்னர் இந்த வழியாக மழைநீர் தங்கு தடையின்றி சென்று உள்ளது.
மேற்படி, வாய்க்கால்கள் சில இடங்களில் அரசுக்கு சொந்தமான பொது இடங்களிலும், சில இடங்களில் தனியாருக்கு சொந்தமான இடங்களிலும் கடந்து செல்கின்றது. மழைநீர் வடிகாலின் மீது தனியார்களால் கட்டுமானங்கள் கட்டப்பட்டு வடிகாலின் நீர்போக்கிற்கு இடையூறு ஏற்படுகிறது. இதனால் மழைநீர் தேங்கி நிற்க ஏதுவாகிறது. இதனை தவிர்க்கும் பொருட்டு தாங்களாகவே அப்புறப்படுத்திக் கொள்ள அறிவுறுத்தப்படுகிறது. மேலும், புதியதாக கட்டிடங்கள் கட்ட அனுமதி வேண்டி விண்ணப்பிக்கும் பொழுது வடிகாலின் மேல் கட்டுமானங்கள் கட்டமாட்டேன் என்று உறுதிமொழி பெறப்பட்ட பின்னரே அனுமதி வழங்கப்படும். மேலும், பெரியகோயில், பெத்தணணன் கலையரங்கம், ஆர்எம்எச், கோர்ட், தெற்கலங்கம், கீழ அலங்கம், வடக்கு ஆஜாரம் ஆகிய சாலைகள் நவீன முறையில் பணிகள் தொடங்கப்படவுள்ளது. எனவே, மழை நீர் வடிகால் மற்றும் நீர் வழிப்பாதையின் மீது கட்டப்பட்டுள்ள தற்காலிக- நிரந்தர கட்டுமானங்களை வரும் 18ஆம் தேதிக்குள் அகற்றி கொள்ள வேண்டும் என்று தஞ்சாவூர், மாநகராட்சி ஆணையர் சரவணகுமார், தெரிவித்துள்ளார்.