செறிவூட்டப்பட்ட அரிசி பற்றி அமைச்சர் மா.சுப்பிரமணியனிடம் விளக்கிய ஆட்சியர்
குட்கா பொருட்களுக்கு விதிக்கப்பட்ட தடையை உயர்நீதிமன்றம் நீக்கி உள்ள நிலையில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்படும் என்றும் அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டின் கடைசியாக 38 வது மாவட்டமாக நாகப்பட்டினம் மாவட்டத்தில் இருந்து மயிலாடுதுறை மாவட்டம் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு பிரிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து படி படிப்படியாக மாவட்டம் முழுமையாக இயங்க ஒவ்வொரு துறையின் நாகப்பட்டினத்தில் இருந்து பிரிக்கப்பட்டு தனியாக இயங்க தொடங்கி வருகிறது. அதன் ஒன்றாக மயிலாடுதுறை அரசு பெரியார் மருத்துவமனை மாவட்ட மருத்துவமனையாக தரம் உயர்த்தப்பட்டுள்ளது.
இந்நிலையில் மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தொற்று நோய் சிகிச்சை பெறுவதற்கான தனியார் தொண்டு நிறுவன உதவுடன் 3.65 கோடி ரூபாய் மதிப்பில் கட்டப்பட்ட புதிய கட்டிடத்தை திறந்து வைத்தார். தொடர்ந்து தலா 25 லட்சம் மதிப்பீட்டில் அளக்குடி மற்றும் கோமல் கிராமத்தில் கட்டி முடிக்கப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் செவிலியர் குடியிருப்பு கட்டிடத்தை காணொளி மூலம் திறந்து வைத்து, மாவட்ட அரசு மருத்துவமனையாக தரம் உயர்த்தப்பட்ட அரசு மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்கு 46.5 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புதிய கட்டமைப்புடன் உருவாக்குவதற்கான அடிக்கலை நாட்டினார்.
அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் மா.சுப்பிரமணியன், "தமிழ்நாட்டில் குட்கா பொருட்களுக்கு விதிக்கப்பட்ட தடையை உயர்நீதிமன்றம் நீக்கி உள்ள நிலையில், இது குறித்து தமிழ்நாடு முதலமைச்சர் உத்தரவுப்படி தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யும் என்று தெரிவித்தார். மேலும், கொரோனா தடுப்பூசிக்கு பிறகு மாரடைப்பு நோயல் இறப்பவர்கள் எண்ணிக்கை அதிகமாக உள்ளதாக கருத்துக்கள் நிலவுகிறதே என்ற செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு? தற்போது மாரடைப்புகள் அதிக அளவில் ஏற்பட்டு வருகிறது. இதற்கு காரணம் என்னவென்று உலக சுகாதார நிறுவனம் ஆய்வு செய்து வருகிறது. முழுமையான ரிசல்டும் இதுவரை வராத சூழலில் நாமாக எந்த முடிவுக்கும் வர கூடாது. இருப்பினும் மாரடைப்புகள் அதிகரித்துள்ள காரணத்தால் அனைவரும் உடற்பயிற்சி செய்ய வேண்டும். இதன் மூலம் மாரடைப்பிலிருந்து பாதுகாத்துக் கொள்ளலாம்" என்று கூறினார்.
மேலும், குடியரசு தின கிராம சபை கூட்டத்தில் வருகிற ஏப்ரல் மாதம் முதல் ரேஷன் கடைகளில் மக்களுக்கு வழங்க உள்ள செறிவூட்டப்பட்ட அரிசியால் உடலில் பக்கவிளைவுகளை ஏற்படுத்தும் என கூறி அதற்கு எதிர்ப்பு தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது குறித்து செய்தியாளர் எழுப்பிய கேள்விக்கு, செறிவூட்டப்பட்ட அரிசி குறித்து தகவல் அறியாத மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் இதுகுறித்து மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியரின் விளக்கத்தை கேட்டு பின்னர் இதுதொடர்பாக துறை சார்ந்த அமைச்சர் மற்றும் செயலாளரிடம் எடுத்து கூறி எவ்விதமான நடவடிக்கை எடுக்கப்படும் என எதிர்காலத்தில் தெரிவிக்கப்படும் என்றார். இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் லலிதா, மயிலாடுதுறை பாராளுமன்ற உறுப்பினர் ராமலிங்கம், மயிலாடுதுறை சட்டமன்ற உறுப்பினர் ராஜகுமார், பூம்புகார் சட்டமன்ற உறுப்பினர் நிவேதா.முருகன், சீர்காழி சட்டமன்ற உறுப்பினர் பன்னீர்செல்வம், சுகாதாரத்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.