நிலுவையில் உள்ள திட்டங்களை விரைந்து, தரமாக முடிக்கணும்... அனைத்து துறை அலுவலர்களுக்கு அமைச்சர் அட்வைஸ்
நிலுவையில் உள்ள அனைத்து திட்டப் பணிகளையும் விரைவாக, தரமாகவும் முடிக்க வேண்டும் என்று அலுவலர்களுக்கு உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி. செழியன் அறிவுரை.
தஞ்சாவூர்: நிலுவையில் உள்ள அனைத்து திட்டப் பணிகளையும் விரைவாக, தரமாகவும் முடிக்க வேண்டும் என்று சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி. செழியன் அறிவுரை வழங்கினார்.
அனைத்துத் துறை அலுவலர்களுக்கான ஆய்வுக் கூட்டம்
தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்ட அரங்கில் உயர்கல்வித் துறை அமைச்சர் கோவி.செழியன் தலைமையில், அனைத்துத் துறை அலுவலர்களுக்கான ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் மாவட்ட கலெக்டர் பிரியங்கா பங்கஜம், தஞ்சாவூர் நாடாளுமன்ற உறுப்பினர் முரசொலி, சட்டமன்ற உறுப்பினர்கள் துரை,சந்திரசேகரன் (திருவையாறு). டி.கே.ஜி.நீலமேகம், (தஞ்சாவூர்), அண்ணாதுரை (பட்டுக்கோட்டை). மாநகராட்சி மேயர்கள் தஞ்சாவூர் சண்.இராமநாதன், கும்பகோணம் சரவணன் , மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆஷிஷ் ராவத், மாவட்ட வருவாய் அலுவலர் தியாகராஜன், மாவட்ட வன அலுவலர் அகில் தம்பி, ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் பாலகணேஷ், மாவட்ட ஊராட்சித் தலைவர் உஷா புண்ணியமூர்த்தி, தஞ்சாவூர் மாநகராட்சி துணை மேயர் மரு.அஞ்சுகம் பூபதி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கோரிக்கைகள் மீது மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள்
கூட்டத்தில் உயர்கல்வித் துறை அமைச்சர் கோவி. செழியன் தெரிவித்ததாவது: தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின், துணை முதலமைச்சர் உதயநிதி ஆகியோரின் அறிவுறுத்தலுக்கிணங்க, அனைத்துத் துறை அலுவலர்களுக்கான ஆய்வுக் கூட்டம் தஞ்சாவூர் மாவட்டத்தில் சிறப்பாக நடைபெற்றுள்ளது.
இக்கூட்டத்தில் வருவாய்த் துறை. சமூக பாதுகாப்புத் திட்டம், உயர்கல்வி மற்றும் பள்ளிக் கல்வித் துறை, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை, பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை, தாட்கோ, சமூக நலத்துறை. மாவட்ட குழந்தைகள் நல அலுவலகம், மாற்றுத்திறனாளிகள் நலத்துறை, வேளாண்மைத் துறை, தோட்டக் கலைத் துறை, பொதுப்பணித்துறை, ஊரக வளர்ச்சித் துறை, நகராட்சி நிர்வாகம், ஓருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்டம், மகளிர் திட்டம், சத்துணவுத் திட்டம், கூட்டுறவுத் துறை, தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம், தொழிலாளர் நலத்துறை, தேசிய நெடுஞ்சாலைத் துறை, நபார்டு, தமிழ்நாடு மின்சார வாரியம். தமிழ்நாடு குடிநீர் வழங்கல் வாரியம், மீன்வளத்துறை, சுற்றுலா, பண்பாடு மற்றும் இந்து சமய நலத்துறை. நூலகத் துறை, தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் போன்ற பல்வேறு துறை சார்ந்த நடைபெற்று வரும் பணிகள், முடிவுற்றப் பணிகள் மேற்கொள்ள வேண்டிய பணிகள் போன்ற பல்வேறு பொருள் குறித்து இக்கூட்டத்தில் ஆய்வு செய்யப்பட்டது.
பணிகளையும் விரைவாக தரமாக முடிக்கணும்
கூட்டத்தில் ஒன்றியக் குழுத் தலைவர்கள், மக்கள் பிரதிநிதிகள் தங்களின் பகுதிகளுக்கு ஏற்ப கோரிக்கைகளை வைத்தார்கள். அதுமட்டுமின்றி அரசு அலுவலர்களும் தங்களின் திட்டப் பணிகளை விளக்கியதோடு துறைச் சார்ந்த கோரிக்கைகளையும் வைத்தார்கள். இன்றைய கூட்டத்தின் கோரிக்கைகள் மீது மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் குறித்து அடுத்த ஆய்வுக் கூட்டத்தில் சம்மந்தப்பட்ட துறை அலுவலர்கள் தெரிவிக்க வேண்டும். மேலும் நிலுவையில் உள்ள அனைத்து திட்டப் பணிகளையும் விரைவாக தரமாகவும் முடித்திட சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.
இதில் கும்பகோணம் சார் ஆட்சியர் ஹிருத்யா விஜயன், வருவாய் கோட்டாட்சியர்கள் இலக்கியா (தஞ்சாவூர்), ஜெயஸ்ரீ (பட்டுக்கோட்டை) ஒன்றியக் குழுத் தலைவர்கள், பேரூராட்சித் தலைவர்கள் மற்றும் அனைத்துத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.