இரவிலும் பறந்த தேசிய கொடி - தலைமை ஆசிரியர், இடைநிலை ஆசிரியர் பணியிடை மாற்றம்
அரசு பள்ளியில் தேசிய கொடியை இரவிலும் பறக்கவிட்ட விவகாரத்தில், தலைமை ஆசிரியர் , இடைநிலை ஆசிரியர் பணியிடை மாற்றம் செய்து மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் உத்தரவிட்டுள்ளார்

கடந்த ஜனவரி 26 ஆம் தேதி இந்தியாவின் 74 வது குடியரசு தின விழா நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட்டது. அதனைத் தொடர்ந்து அனைத்து அரசு அலுவலகங்கள், பள்ளி, கல்லூரிகள் என பல்வேறு இடங்களில் தேசியக்கொடி ஏற்றி குடியரசு தின விழாவை சிறப்பாக கொண்டாடினர். மேலும், குடியரசு தின கொண்டாட்டங்களின் போது, தேசியக் கொடியின் மாண்பு மற்றும் விதிகளின்படி அதற்கு தரவேண்டிய மரியாதையை, அதைப் பயன்படுத்தும் பொதுமக்கள் உட்பட அனைத்து தரப்பினரும் பின்பற்றுகின்றனரா என்பதை மாநில அரசுகள் கண்டிப்புடன் உறுதி செய்ய வேண்டும் என மத்திய அரசு உத்தரவிட்டிருந்தது.

தேசியக் கொடியை பயன்படுத்துவதற்கு என, தனியாக சட்ட விதிமுறைகள் உள்ளன. கொடியின் நீள, அகலங்கள், அதன் வடிவம், நிறங்களின் தன்மை உட்பட அனைத்துமே சரியான விகிதத்தில் இருக்க வேண்டும். இதை, விதிமுறைகளுக்கு உட்பட்டுத்தான் கையாள வேண்டுமே தவிர, யாரும் இஷ்டம்போல பயன்படுத்திவிட முடியாது. மீறினால், குற்றமாக கருதப்படும். இந்நிலையில், குடியரசு தின விழா கொண்டாட்டங்களின் போது, தேசியக் கொடியின் பயன்பாடு பிரதானமாக இருக்கும். கொண்டாட்ட நிகழ்வுகள் முடிந்ததும், தேசியக் கொடிகளை அப்படியே போட்டுவிடுவது, வீதிகளில் கிடப்பது, நிகழ்ச்சி நடந்த இடங்களில் அப்படியே விட்டு செல்வது என, அலட்சியமான செயல்கள் அரங்கேறுகின்றன. இவ்வாறு செய்வது, தேசியக் கொடியை அவமதிக்கக் கூடிய செயல் என்பது கூட தெரியாமலேயே பலர் இப்படி செய்துவிடுகின்றனர். இதை தடுக்கும் நோக்கில், அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேச அரசுகளுக்கு, மத்திய உள்துறை அமைச்சகம் சுற்றறிக்கை ஒன்றை குடியரசு தினத்திற்கு முன்பாகவே அனுப்பியது.

அதில் தேசியக் கொடி என்பது தேசத்தின் மரியாதை மட்டுமல்லாது, மக்களின் நம்பிக்கை மற்றும் நாட்டுப் பற்றை வெளிக்காட்டக்கூடியது. எனவே, அந்த கொடிக்கு உரிய மரியாதையை அளிக்க ஒவ்வொரு வரும் தவறக்கூடாது.பொதுமக்கள், அமைப்புகள், அரசு நிறுவனங்கள் என பல்வேறு தரப்பிலும், தேசியக் கொடியை கையாள்வது தொடர்பான விழிப்புணர்வு குறைவாக உள்ளது. எனவே, இதற்கான முக்கியத்துவத்தை இவர்களுக்கு உணர்த்த வேண்டும். இதற்காக, தேசிய மரியாதைக்குரிய சின்னங்கள் மற்றும் பொருட்கள் அவமதிப்பு தடுப்புச் சட்டம் மற்றும் தேசியக் கொடிக்கான விதிமுறைகள், 2002 -ம் ஆண்டு சட்டத் தில், சில திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டன.இந்த திருத்தச் சட்டத்தின்படி, இரண்டாவது பாகத்தில் உள்ள, பத்தி எண் 2.2ன், 10 வது ஷரத்தின்படி, சில விதிமுறைகள் சுட்டிக் காட்டப்பட்டுள்ளன.
இதில் குறிப்பிட்டுள்ள படி, தேசிய பொது முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்ச்சிகள், கலாசார நிகழ்வுகள் மற்றும் விளையாட்டு போட்டிகளின்போது பொது மக்களால் பயன்படுத்தப்படும் தேசியக் கொடி, காகிதத்தால் தயாரிக்கப்பட்டிருக்க வேண்டும். பயன்பாடு முடிந்ததும் அந்த கொடி கிழிக்கப்படுவதோ, வீசியெறியப்படுவதோ இல்லாது விழிப்புடன் கையாளப்பட வேண்டும். இதையும் மீறி தேசியக் கொடி அலட்சியமாக கையாளப்பட்டால், இந்த நிகழ்வு பொதுப்பார்வைக்கு வரும் முன், உடனடியாக விரைந்து செயல்பட்டு, தேசியக் கொடியின் மரியாதை நிலை நாட்டப்பட வேண்டும்.தேசியக் கொடிக்குரிய மரியாதையை தருவதற்கான விழிப்புணர்வை பொதுமக்கள் மத்தியில் ஏற்படுத்த, அமைச்சகங்கள் உள்ளிட்ட அனைத்து தரப்புமே இணைந்து, அச்சு மற்றும் காட்சி ஊடகங்கள் வாயிலாக பிரசாரம் செய்ய வேண்டும் என தெரிவித்திருந்தது.
இந்த சூழலில் இதற்கு மாறாக சம்பவம் ஒன்று அரங்கேறியுள்ளது மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே மாதானம் கிராமத்தில் அரசு ஆதிதிராவிடர் நலத் தொடக்கப்பள்ளி உள்ளது. இங்கு சுமார் 25 மாணவ, மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர். இந்நிலையில் குடியரசு தினத்தையொட்டி அப்பள்ளியில் தலைமை ஆசிரியை தேசியக் கொடியை ஏற்றிவைத்து மாணவ, மாணவிகளுக்கு, இனிப்புகள் வழங்கப்பட்டது. அதன் பின்னர், பள்ளிக்கூடம் மூடப்பட்டு மாணவ மாணவிகள் மற்றும் ஆசிரியர்கள் இல்லத்திற்கு திரும்பினார்.
ஆனால், ஏற்றப்பட்ட தேசியக்கொடி மாலை 6 மணிக்குள் இறக்கப்பட வேண்டும் என்ற மரபு இருந்தும், இரவாகியும் தேசியக்கொடி கம்பத்திலிருந்து இறக்கப்படாமல் பறந்தவாறு இருந்துள்ளது. அதனை பார்த்த அப்பகுதி பொதுமக்கள் தேசிய கொடியை அவமதித்த சம்பவம் குறித்த வீடியோவாக பதிவு செய்து அதனை சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளனர். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வைரல் ஆனது. இந்த சூழலில் அப்பள்ளியின் தலைமை ஆசிரியர் விஜயா மற்றும் இடைநிலை ஆசிரியர் பிரியதர்ஷினி, உள்ளிட்ட இரண்டு ஆசிரியர்களை நிர்வாக நலன் கருதி ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் வேறு பள்ளிக்கு பணியிடை மாற்றம் செய்ய உத்தரவிட்டார்.






















