Mayiladuthurai: சூரிய ஒளி மூலம் திருக்குறள் எழுதி மயிலாடுதுறை இளைஞர் உலக சாதனை
பர்னிங் வுட் ஆர்ட் என்ற ஓவியக் கலை மூலம் ஒரு மணி நேரத்தில் 70 வார்த்தைகள் 577 எழுத்துக்கள் கொண்ட பத்து திருக்குறள்களை மரக்கட்டையில் சூரிய ஒளி மூலம் எரித்து வரைந்து இளைஞர் உலக சாதனை படைத்துள்ளார்.
பர்னிங் வுட் ஆர்ட் என்ற மேற்கத்திய ஓவியக் கலையில், ஒரு மணி நேரத்தில் 70 வார்த்தைகள் 577 எழுத்துக்கள் கொண்ட பத்து திருக்குறள்களை மரக்கட்டையில் சூரிய ஒளி மூலம் எரித்து வரைந்து மயிலாடுதுறை சார்ந்த விக்னேஷ் என்ற இளைஞர் உலக சாதனை படைத்துள்ளார். மயிலாடுதுறை மாவட்டம் தோப்புத்தெருவை சேர்ந்தவர் விக்னேஷ். இவர் வெளிநாடுகளில் புகழ்பெற்ற கலையாக விளங்கும் சன் லைட் பர்னிங் வுட் ஆர்ட் என்ற கலையை ஆசியாவிலேயே முதல்முறையாக இந்தியாவில் அரங்கேற்றி வருகிறார்.
மரக்கட்டைகளில் லென்ஸ் மூலம் சூரிய கதிர்களை ஒரே இடத்தில் குவித்து அதில் தோன்றும் நெருப்பு மூலம் ஓவியம் வரைவது பர்னிங் வுட் ஆர்ட் ஆகும். இளைஞர் விக்னேஷ் ஏற்கனவே இது போன்று பர்னிங் வுட் ஆர்ட் மூலம் விராட் கோலி, தோனி சந்திராயன் 3 விண்கலம், கடல் கொள்ளையன் ஜாக் ஸ்பேரோ, கடவுள் படங்கள், பெரியார், திருவள்ளுவர் படங்கள் உள்ளிட்ட நூற்றுக்கு மேற்பட்ட ஓவியங்களை வரைந்து பிரபலமானவர்.
இந்நிலையில் அவர் மயிலாடுதுறை மாயூரநாதர் ஆலயத்தில் ஒரு மணி நேரத்தில் 10 திருக்குறள்களை அதில் உள்ள 70 வார்த்தைகள் 577 எழுத்துக்களை சூரிய ஒளி மூலம் எரிப்பதன் மூலம் வரைந்து உலக சாதனை படைத்துள்ளார். இதற்காக கடும் வெயிலில் லென்ஸ் மூலம் சூரிய கதிர்களை குவித்து பொறுமையாக ஓவியம் வரைந்தார். ஐன்ஸ்டீன் வேர்ல்ட் ரெக்கார்ட் என்ற அமைப்பு இதனை உலக சாதனையாக அங்கீகரித்து அவருக்கு சான்றிதழ் வழங்கி பாராட்டியது. இவரின் இந்த சாதனை நிகழ்வை மயிலாடுதுறை சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து ஏராளமான பார்வையாளர்கள் வியப்புடன் பார்த்து சென்றனர்.