சீர்காழி அருகே நான்கு வழிச்சாலை பணியை தடுத்து நிறுத்திய கிராம மக்கள் - காரணம் இதுதான்
சீர்காழி அருகே நத்தம் கிராமத்தில் நான்கு வழி சாலை பணியை தடுத்து நிறுத்தி கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.
விழுப்புரம் முதல் நாகப்பட்டினம் வரை நான்கு வழி சாலை அமைக்கும் பணிகள் கடந்த சில ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது. இதன் ஒரு பகுதியாக மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் இருந்து தரங்கம்பாடி வரை சாலை அமைக்கும் பணிகள் தற்போது மிக தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்நிலையில் சீர்காழியில் இருந்து தரங்கம்பாடி செல்லும் சாலையில் நத்தம் கிராமத்தில் எஞ்சி இருந்த பகுதியில் சாலை அமைக்கும் பணிகள் இன்று காலை துவங்கியது.
இந்த நான்கு வழிச்சாலையின் ஒரு புறம் சித்தேரி கிராமமும், மறுபுறம் நத்தம் கிராமமும் அமைந்துள்ளது. அத்தியாவசிய தேவைகளுக்கு இரு கிராம மக்களும் எளிதில் சென்று வருவதற்காக இப்பகுதியில் சுரங்க வழிப்பாதை அமைத்து தர வேண்டுமென இரு கிராம மக்களும் நீண்ட நாட்களாக கோரிக்கை விடுத்து வருகின்றனர். இந்நிலையில் பொதுமக்களின் கோரிக்கையை கண்டு கொள்ளாமல் இன்று பலத்த போலீஸ் பாதுகாப்புடன் நான்கு வழிச்சாலை அமைக்கும் பணிகள் துவங்கியது.
இதனை அடுத்து தகவல் அறிந்து அங்கு திரண்ட இரு கிராம மக்கள் அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதுடன், பணிகளைத் தடுத்து நிறுத்தி சாலையின் குறுக்கே அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். போலீசார் மக்களை அப்புறப்படுத்த முயன்றும் அவர்களின் பேச்சுவார்த்தை ஏற்காத மக்கள் தொடர்ந்து சாலையின் குறுக்கே அமர்ந்தனர். இதனை அடுத்து வருவாய் கோட்டாட்சியர் அர்ச்சனா தலைமையில் பேச்சுவார்த்தை நடைபெற்றது.
பேச்சுவார்த்தையில் வருவாய் கோட்டாட்சியர் ஒருவார காலம் கால அவகாசம் கேட்டுகொண்டார். அதனைத் ஏற்று போராட்டத்தில் ஈடுபட்ட கிராம மக்கள் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். கிராம மக்களின் போராட்டத்தை தொடர்ந்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சீர்காழி காவல் துணை கண்காணிப்பாளர் லாமேக் தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டனர். இதனால் சீர்காழி பகுதியில் பெரும் பரபரப்பு நிலவியது.