Happy New Year 2025: "இனி உச்சம்தான்" பிறந்தது புத்தாண்டு! ஆடிப்பாடி ஆனந்தமாய் வரவேற்ற மக்கள்!
2025ம் ஆண்டு இன்று பிறந்துள்ளதை முன்னிட்டு மக்கள் உற்சாகமாக புத்தாண்டை வரவேற்றனர். கோயில்களிலும், தேவாலயங்களிலும் பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது.
உலகம் முழுவதும் ஆவலுடன் எதிர்பார்த்த 2025ம் ஆண்டு நள்ளிரவு பிறந்தது. இதை உலக நாடுகள் முழுவதும் உற்சாகத்துடன் கொண்டாடி மகிழ்ந்தனர். அமெரிக்கா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, இங்கிலாந்து போன்ற உலக நாடுகளிலும் புத்தாண்டு மிகச்சிறப்பாக கொண்டாடப்பட்டது. பல ஏற்றங்களையும், சறுக்கல்களையும் கலவையாக தந்த 2024ம் ஆண்டு முடிந்து புத்தாண்டு பிறந்துள்ளதால் மக்கள் மகிழ்ச்சியுடன் உள்ளனர்.
பிறந்தது புத்தாண்டு:
தமிழ்நாட்டிலும் புத்தாண்டு கோலாகலமாக கொண்டாடப்பட்டு வரவேற்கப்பட்டது. புத்தாண்டு கொண்டாட்டத்தை முன்னிட்டு தேவாலயங்களில் நேற்று இரவு முதலே சிறப்பு பிரார்த்தனை நடைபெற்று வருகிறது. இதனால், தேவாலயங்களில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. இன்று காலையும் தேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனை நடைபெறும் என்பதால் இன்றும் பக்தர்கள் கூட்டம் அதிகளவு இருக்கும். புகழ்பெற்ற சாந்தோம், வேளாங்கண்ணி போன்ற தேவாலயங்களில் நேற்று மாலை முதலே ஆயிரக்கணக்கில் பக்தர்கள் கூட்டமாக காணப்பட்டனர்.
தேவாலயங்கள், கோயில்களில் அலைமோதும் பக்தர்கள்:
கிறிஸ்தவ தேவாலயங்கள் மட்டுமின்றி கோயில்களிலும் இன்று புத்தாண்டை முன்னிட்டு சிறப்பு பூஜைகளும், வழிபாடுகளும் நடைபெற உள்ளது. இன்று புதன்கிழமை என்பதாலும், புத்தாண்டு என்பதாலும் காலை முதலே கோயில்களில் பக்தர்கள் கூட்டம் அலைமோதி வருகிறது.
புகழ்பெற்ற திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில், திருச்சி உச்சிபிள்ளையார் கோயில், பிள்ளையார்பட்டி கோயில், திருச்செந்தூர் முருகன் கோயில் உள்ளிட்ட முருகனின் அறுபடை வீடுகளில் பக்தர்கள் கூட்டம் நேற்று முதலே அதிகளவு காணப்படுகிறது.
புத்தாண்டை முன்னிட்டு பக்தர்கள் அதிகளவு வரும் கோயில்கள், தேவாலயங்களில் பக்தர்களின் வசதிக்காக சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருப்பதுடன் போலீஸ் பாதுகாப்பும் அதிகளவு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும் இன்று புத்தாண்டு என்பதால் பள்ளி, கல்லூரிகள் உள்ளிட்ட கல்வி நிலையங்கள், அரசு அலுவலகங்கள், பெரும்பாலான தனியார் நிறுவனங்கள் விடுமுறை என்பதால் வணிக வளாகங்கள், பொழுதுபோக்கு மையங்கள், திரையரங்குகளில் அதிகளவு மக்கள் கூட்டம் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால், மக்களின் பாதுகாப்பிற்காக இன்று வழக்கத்தை விட அதிகளவு போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
நள்ளிரவில் கொண்டாட்டம்:
மேலும், புத்தாண்டு கொண்டாட்டம் காரணமாக சென்னை உள்ளிட்ட பெருநகரங்களில் மக்கள் ஆடிப்பாடி உற்சாகமாக புத்தாண்டை வரவேற்றனர். மெரினா, பெசன்ட் நகர் உள்ளிட்ட கடற்கரைகளில் ஆயிரக்கணக்கில் மக்கள் குழுமியிருந்தனர்.
மக்கள் கடலில் இறங்கவும், குளிக்கவும் தடை விதிக்கப்பட்டிருந்தது. புத்தாண்டு கொண்டாட்ட பாதுகாப்பு பணியில் மட்டும் 19 ஆயிரம் போலீசார் சென்னையில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர். 2025ம் ஆண்டு அனைவருக்கும் நல்ல வளத்தையும், எதிர்காலத்தையும் வழங்க வேண்டும் என்று அரசியல் தலைவர்களும், பிரபலங்களும் மக்களுக்கு வாழ்த்து கூறியுள்ளனர. ஏபிபி நாடு சார்பிலும் மக்களுக்கு புத்தாண்டு வாழ்த்துகள்.