சாக்கு குடோனில் புகுந்த 3 சாரை பாம்புகள்; பதறிபோன ஊழியர்கள்- மயிலாடுதுறையில் பரபரப்பு
மயிலாடுதுறை அருகே சாக்கு குடோனில் புகுந்த 3 சாரை பாம்புகளை 2 மணி நேர தேடலுக்குப் பிறகு பாம்புப்படி வீரர் பத்திரமாக பிடித்து பாதுகாப்பாக வனப்பகுதியில் விடுவித்துள்ளார்.
மயிலாடுதுறை அருகே சாக்கு குடோனில் புகுந்த 3 சாரை பாம்புகளை 2 மணி நேர தேடலுக்குப் பிறகு பாம்புப்படி வீரர் பத்திரமாக பிடித்து பாதுகாப்பாக வனப்பகுதியில் விடுவித்துள்ளார். மயிலாடுதுறை மாவட்டம் செம்பனார்கோவில் பரசலூர் சாலையில் உள்ள சாக்கு குடோன் ஒன்றில் 3 சாரைப் பாம்புகள் ஒரே இடத்தில் இருந்ததால் ஊழியர்கள் பீதி அடைந்துள்ளனர். சாக்கு குடோன் உட்புறம் பொருத்தியுள்ள சிசிடிவி பதிவினை நேற்று மாலை 3 மணியளவில் தற்செயலாக பார்வையிட்ட அதன் உரிமையாளர் அங்கு பாம்புகள் ஒன்றோடு ஒன்று இணைந்த படி கொஞ்சு குலாவிக்கொண்டிருந்த காட்சியைக் கண்டு பதறிப் போனார்.
இதனை அடுத்து, அங்கு பணியில் இருந்த ஊழியர்கள் உடனடியாக வெளியேற்றப்பட்டனர். தொடர்ந்து, சீர்காழி பகுதியைச் சேர்ந்த பாம்புப்பிடி வீரரான ஸ்னேக் பாண்டியன் என்பவருக்கு தகவல் தந்துள்ளார். இதனை தொடர்ந்து, ஒரு மணி நேரத்தில் அங்கு சென்ற பாண்டியன் சாக்கு குவியல் அனைத்திலும் தேடாமல் பாம்பு எங்கு மறைந்திருக்கும் என்று தனது அனுபவத்தால் உணர்ந்து, சில சாக்கு மூட்டைகளை மட்டும் விலக்கிப் பார்த்ததில் அந்த பாம்புகள் தென்பட்டன.
பின்னர் அவற்றை லாவமாக பிடித்தார் பாம்புப்பிடி வீரரான பாம்பு பாண்டியன். இதில், பெண் பாம்பு 6 அடி நீளம் கொண்ட சாரை என்பதும், ஆண் பாம்பில் ஒன்று 7 அடி நீளம் கொண்ட மஞ்சள் சாரை, மற்றொன்று 8 அடி நீளம் கொண்ட சாரை பாம்பு என்பது தெரியவந்தது. பிடிப்பட்ட 3 பாம்புகளையும் பத்திரமாக பிடித்த பாம்பு பாண்டியன், அவற்றை வனப்பகுதியில் கொண்டு சென்று விடுவித்தார். தற்போது பாம்புகள் ஒன்றோடு ஒன்று இணைந்த படி கொஞ்சு குலாவிக்கொண்டிருந்த காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாக உலாவி வருகிறது.