பல லட்சம் ரூபாய் மோசடி செய்ததாக திமுக ஊராட்சி மன்ற தலைவர் மீது புகார் - சீர்காழி அருகே பரபரப்பு
தில்லைவிடங்கன் ஊராட்சி மன்ற துணை தலைவர் கையெழுத்தை வங்கி காசோலையில் போலியாக பயன்படுத்தி நிதி பரிவர்த்தனை செய்து மோசடியில் ஈடுபட்டதாக பஞ்சாயத்து தலைவர் மீது காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்டது தில்லைவிடங்கன் ஊராட்சி. இந்த ஊராட்சி மன்ற தலைவராக திமுகவை சேர்ந்த சுப்ரவேல் என்பவர் பதவி வகித்து வருகிறார். இதேபோல் திமுக கட்சியை சேர்ந்த கார்த்திகா ரமேஷ் என்பவர் துணைத் தலைவராக இருந்து வருகிறார். இதனிடையே ஊராட்சியில் மின் விளக்கு, குடிநீர் உள்ளிட்ட மக்களின் அடிப்படை தேவைகள் பூர்த்தி செய்வதற்கு அரசு வழங்கிடும் நிதியினை ஊராட்சி மன்ற தலைவர் சுப்ரவேல், துணைத் தலைவர் கார்த்திகா ரமேஷ் ஆகியோர் கையொப்பமிட்ட காசோலை மூலம் வங்கி பரிவர்த்தனை மூலம் பணம் பெற்று பணிகள் மேற்கொள்ளப்படுவது வழக்கம்.
இந்நிலையில், இந்த தில்லைவிடங்கன் ஊராட்சிக்கு சீர்காழி தென்பாதியில் உள்ள இந்தியன் வங்கியில் ஊராட்சி சார்ந்த 9 கணக்குகள் உள்ளன. கடந்த ஜனவரி மாதம் முதல் 8 மாதங்களாக ஊராட்சி மன்ற துணைத் தலைவர் கார்த்திகா ரமேஷிடம் எந்த ஒரு வங்கி காசோலையிலும் கையெழுத்து பெறாமல், வங்கியில் துணைத் தலைவர் கையொப்பமிட்ட காசோலைகள் பணப்பரிவர்த்தனை செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. நேற்று முன்தினம் மாலையும் இதே போல் ஊராட்சி மன்ற துணைத் தலைவர் கார்த்திகா ரமேஷ் கையெழுத்தை மோசடியாக போடப்பட்ட காசோலையும் வங்கிக்கு பணப்பரிவர்த்தனைக்கு வந்ததாக வங்கி நிர்வாகம் சார்பில் வாய்மொழியாக துணைத்தலைவர் கார்த்திகா கூறப்பட்டதாக சொல்லப்படுகிறது.
Chandrayaan 3: இறுதிக்கட்ட பணியில் சந்திரயான் 3 விண்கலம்.. இம்முறை சாதனை படைக்குமா இஸ்ரோ?
இதனை கேட்ட அதிர்ச்சி அடைந்த ஊராட்சி மன்ற துணைத் தலைவர் கார்த்திகா ரமேஷ், ஊராட்சி மன்ற தலைவர் சுப்ரவேல் மோசடியாக தனது கையெழுத்தை காசோலையில் போட்டு பண பரிவர்த்தனை செய்து மோசடி நடைபெற்றுள்ளதாக குற்றம் சாட்டி சீர்காழி காவல் நிலையத்தில் புகார் மனு அளித்துள்ளார். மேலும், சீர்காழி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஒன்றிய ஆணையரிடமும் இதுகுறித்து புகார் அளித்து துறை ரீதியாக விசாரணை செய்யப்படவில்லை எனவும், இதனால் மாவட்ட ஆட்சியரின் கவனத்திற்கு கொண்டு சென்று தற்போது காவல் நிலையத்தில் தலைவர் சுப்ரவேல், ஊராட்சி செயலர் பக்கிரிசாமி ஆகியோர் மீது புகார் தெரிவித்துள்ளதாக துணைத் தலைவர் கார்த்திகா ரமேஷ் கூறினார்.
மக்கள் பணத்தை மோசடி செய்ததாக ஊராட்சி மன்ற தலைவர் மீது ஊராட்சி மன்ற துணை தலைவர் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ள சம்பவம் சீர்காழியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் இந்த குற்றச்சாட்டு குறித்து அவர் தரப்பு விளக்கம் கேட்க தில்லைவிடங்கன் ஊராட்சி மன்ற தலைவர் சுப்ரவேலுவை தொடர்பு கொண்ட போது அவர் நமது அழைப்பை ஏற்கவில்லை.