செல்போனுக்கு ’குட் பாய்’..... வயல் வெளியில் களம் கண்ட பேரக் குழந்தைகள்! மயிலாடுதுறை சுவாரஸ்யம்!
மயிலாடுதுறை அருகே உழவுத் தொழிலின் முக்கியத்துவத்தை மூன்றாம் தலைமுறைக்கு கற்றுத்தரும் விதமாக விவசாயத்தை ஆர்வமாக கற்றுக்கொள்ளும் குழந்தைகள்.
உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார் மற்றெல்லாம் தொழுதுண்டு பின்செல்பவர்” என்கிறார் திருவள்ளுவர். ஒவ்வொருவரும் ஒவ்வொரு கைப்பிடி உணவை உண்ணுவதற்கு அதில் ஒவ்வொரு விவசாயிகளினுடைய உழைப்பு தங்கியிருக்கும். ஆதலால் தான் உலகத்தில் பல தொழில்கள் இருந்தாலும் உழவுத் தொழில் தலைசிறந்த தொழிலாக காணப்படுகிறது. விவசாயம் ஒன்றும் அத்தனை இலகுவான தொழில் கிடையாது. கஷ்டப்பட்டு நிலத்தை உழுது பண்படுத்தி வியர்வை சிந்தி பயிரிட்டு அதனை நீர் பாய்ச்சி பாதுகாத்து பசளையிட்டு நோய்களில் இருந்து காப்பாற்றி வெய்யிலில் காய்ந்து மழையில் நனைந்து விலங்குகள் பறவைகளில் இருந்து பயிரை காக்க காவல் இருந்து அறுவடை செய்யும் வரை விவசாயி பாடுபட்டு உழைத்தால் தான் விளைச்சலை பெற முடிகிறது. இந்த கஷ்ரங்களை பொருட்படுத்தாது மீண்டும் மீண்டும் அவர்கள் உழைத்து கொண்டிருப்பதால் தான் இவ்வுலகமே இயங்கி கொண்டிருக்கிறது என்றால் ஆச்சரியப்படுவதற்கில்லை. இதனையே திருவள்ளுவர் “சுழன்றும் ஏர்ப்பின்னது உலகம் அதனால் உழன்றும் உழவே தலை” என்கிறார்.
விவசாயம் என்பது ஒரு நாட்டினுடைய முதுகெலும்பு என்று கூறுவார்கள். ஒரு நாடு பொருளாதாரத்தில் தன்னிறைவு காணவேண்டுமாயின் அங்குள்ள மக்களுக்கு போதிய உணவு கிடைக்க வேண்டும். அப்போது தான் அந்த தேசம் உத்வேகத்துடன் இயங்க முடியும். பஞ்சம், பசி, பட்டினி என்பன இல்லாத தேசம் ஒன்று உருவாக வேண்டும் என்றால் அந்நாடு விவசாயத்தில் உச்சநிலை பெற வேண்டும். இல்லாவிடில் அந்த நாடு வளர்ச்சி பெறுவதென்பது இயலாத காரியமாகும். உலகத்தின் வளர்ச்சி அடைகின்ற, அடைந்த எல்லா தேசங்களும் விவசாயத்திற்கு அதிக முக்கியத்துவம் கொடுத்ததால் தான் அவை தன்னிறைவடைந்து காணப்படுகின்றன.
இந்த உலகில் பல தொழில்களை இருந்தாலும் விவசாயமே பிரதான தொழிலாக உள்ளது. இதனால்தான், இளைய சமுதாயத்தினர் கிராமப்புறங்களில் இருந்து நகரங்களில் குடியேறினாலும், படித்துமுடித்துவிட்டு சாப்ட்வேர் நிறுவனங்களில் வேலைபார்த்தாலும் உழவுத்தொழிலை செய்ய ஓய்வுகாலங்களிலாவது கிராமங்களை நோக்கிச் செல்கின்றனர். அவ்வகையில் உழவுத் தொழிலே பிரதானமானது என்று உணர்ந்த விவசாயி ஒருவர் தனது பேரக்குழந்தைகளுக்கு உழவுத் தொழிலை பழக்கி வருவது கிராமமக்களிடையே கவனத்தை ஈர்த்துள்ளது.
மயிலாடுதுறை மாவட்டம் மணல்மேட்டை அடுத்த வில்லியநல்லூர் கிராமத்தைச் சேர்ந்தவர் விவசாயி சாந்தி. இவரது மகள் சுகந்தி திருமணமாகி கணவர் கோவிந்தசாமியுடன் வெளியூரில் வசித்து வருகிறார். இவர்களுக்கு 13 வயதில் குகன் என்ற பேரனும், 9 வயதில் சுஜி என இரண்டு குழந்தைகள் உள்ளனர். இவர்கள் கோடை விடுமுறைக்காக சொந்த கிராமத்துக்கு வந்த சுகந்தியின் இரண்டு குழந்தைகளும் செல்போனிலேயே பொழுதைக் கழித்துள்ளனர். இதனை கண்ட சாந்தி, செல்போன் தொழில்நுட்பங்களை கற்றுக்கொண்டால் மட்டும் வயிறு நிறையாது. உணவுக்குத் தேவையான விவசாயத்தையும் கற்றுக்கொள்ளுங்கள் என்று கூறி விவசாய தொழிலாளர்களுடன் வயலுக்கு அனுப்பியுள்ளார்.
அவரது வயலில் தற்போது நாற்றாங்கால் தயாரிப்புப் பணி முடிந்து நடவுப் பணி நடைபெற்று வரும் நிலையில், குழந்தைகள் இருவரும் அதனை ஆர்வமுடன் கற்று செய்து பழகி வருகின்றனர். நாற்றாங்கால்களை வயலில் இழுத்துச் சென்று வைப்பது, வரப்புகளை சீர்செய்வது என குழந்தைகள் செய்யும் பணியை கிராம மக்களே ஆச்சரியத்துடன் கண்டு செல்கின்றனர். நகர்ப்புறங்களில் வாழும் பெற்றோர் தங்களது குழந்தைகள் மண் தரையில் இறங்கி விளையாடுவதைக் கூட கண்டிக்கும் நிலையில், தங்கள் பேர் பிள்ளைகளை உழவுத் தொழிலுக்கு பழக்கும் இந்த விவசாய குடும்பத்தினரை பலரும் பாராட்டி வருகின்றனர்.