அனைத்து ஊராட்சிகளும் முன்மாதிரியான ஊராட்சியாக மாற்றப்படும் - மயிலாடுதுறை ஆட்சியர் உறுதி
மணக்குடி கிராம ஊராட்சி தன்னிறைவு பெற்ற கிராம ஊராட்சியாக உருவாக்கும் நோக்கில் ஆய்வு செய்த மாவட்ட ஆட்சியர் மாவட்டத்தின் அனைத்து ஊராட்சிகளும் முன்மாதிரியான ஊராட்சியாக மாற்றப்படும் என தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடில் கடைசி 38 வந்து மாவட்டமாக பிரிக்கப்பட்டது மயிலாடுதுறை மாவட்டம். இந்த மாவட்டத்தில் மொத்தம் 241 கிராம ஊராட்சிகள் உள்ளன. அதில் மயிலாடுதுறை ஒன்றியத்திற்குட்பட்ட மணக்குடி கிராம ஊராட்சி தன்னிறைவு பெற்ற கிராம ஊராட்சியாக உருவாக்குவதற்காக தேர்வு செய்யப்பட்டுள்ளது. மணக்குடி கிராம ஊராட்சி கடந்த 2006 -ஆம் ஆண்டு அகில இந்திய அளவில் மத்திய அரசின் நிர்மல் கிராம் புரஸ்கார் விருது பெற்றுள்ளது. அதனால் மாவட்டத்தில் இந்த ஊராட்சியை முதலில் முன்மாதிரியான ஊராட்சியாக உருவாக்குவதற்காக மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் மகாபாரதி நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
ஊராட்சி தலைவர் மற்றும் பொதுமக்களை நேரில் சந்தித்து அவர்களுடைய கோரிக்கைகளை கேட்டறிந்தார். அப்போது, மணக்குடியில் பழுதடைந்த 5 சாலைகள் செப்பனிட வேண்டும், இடிந்து விழும் நிலையில் உள்ள 2500 மக்களுக்கு குடிநீர் ஆதாரமாக உள்ள மேல்நிலை நீர்தேக்க தொட்டியை புதுப்பிக்க வேண்டும், கால்நடை மருத்துவமனை அமைத்து தரவேண்டும், இடிக்கப்பட்ட அங்கன்வாடிக்கு புதிய கட்டிடம் கட்டித்தர வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்றி தர ஊராட்சி மன்ற தலைவர் வீரமணி மற்றும் அப்பகுதி பொதுமக்கள் ஆட்சியரிடம் கோரிக்கை வைத்தனர்.
மணக்குடி ஊராட்சியை முன்மாதிரியான ஊராட்சியை உருவாக்குவதற்காக அனைத்து நடவடிக்கைகளும் இன்று முதல் மேற்கொள்ள மாவட்ட நிர்வாகம் முழு ஒத்துழைப்பு அளிக்கும் என்றும், பொதுமக்களின் கோரிக்கைகள் முன்னுரிமை அடிப்படையில் உடனடியாக நிறைவேற்ற தருவதற்கு அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும் எனவும், மணக்குடி கிராம ஊராட்சியை தொடர்ந்து மாவட்டத்தில் உள்ள அனைத்து கிராம ஊராட்சிகளும் முன்மாதிரியான கிராம ஊராட்சியாக மாற்றுவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என மாவட்ட ஆட்சியர் மகாபாரதி உறுதியளித்தார். ஆய்வின் போது மணக்குடி ஊராட்சி தலைவர் வீரமணி மற்றும் ஊர் பொதுமக்கள் உடனிருந்தனர்.