மயிலாடுதுறையில் விமரிசையாக நடந்த புதுத்தெரு மகாகாளியம்மன் நடைபாவாடை திருவிழா
மயிலாடுதுறை புதுத்தெரு மகாகாளியம்மன், கொத்ததெரு பெரிய மாரியம்மன் கோயில் நடைபாவாடை ஐதீக திருவிழாவில் வெகு விமர்சையாக நடைபெற்றது.
மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை நகரம் 2 வது புதுத்தெருவில் பழைமையும், பிரசித்தியும் பெற்ற ஸ்ரீ மகா காளியம்மன் ஆலயம் அமைந்துள்ளது. ஶ்ரீ மகா காளியம்மனையும், இவ்வாலயத்தின் அருகில் உள்ள கொத்தத்தெரு ஸ்ரீ பெரிய மாரியம்மனையும் சகோதரியாக பாவித்து 1 முதல் 5 புதுத்தெரு வாசிகள் வணங்கி வருகின்றனர். மேலும் இரு அம்பிகைகளுக்கும் ஆண்டுதோறும் பங்குனி மாதம் நடைபெறும் கரக உற்சவமும், உற்சவத்தில் கரகங்கள் ஆலயம் வந்தடையும் போது பக்தர்கள் தங்களின் வேண்டுதலை நிறைவேற்றவும், வேண்டுதலை நிறைவேற்றி தந்த அம்மனுக்கு நடைபாவாடை விரித்து நேர்த்திக்கடன் செலுத்தும் ஐதீக திருவிழாவை ஆண்டுதோறும் பங்குனி மாதத்தில் கடந்த 100 ஆண்டுகளுக்கு மேலாக புதுத்தெருவாசிகள் நடத்தி வருகின்றனர்.
அந்த வகையில் இந்த ஆண்டு புதுத்தெரு ஶ்ரீ மகாகாளியம்மன் கரக உற்சவம் கடந்த 8 -ம் தேதி காளி ஆட்டத்துடன் துவங்கியது. பால்குடம், அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது. விழாவின் முக்கிய நிகழ்வான பூகரகங்கள் வீதியுலா மற்றும் ஐதீக விழாவான நடைபாவாடை திருவிழா நேற்றிரவு நடைபெற்றது. இதனை முன்னிட்டு காவிரி துலாக்கட்டத்தில் இரு அம்பிகைகளுக்கான சக்தி கரகங்கள் அலங்காரம் செய்யப்பட்டு மேளதாள வாத்தியங்கள் முழங்க வீதியுலா நடைபெற்றது.
அதனைத் தொடர்ந்து பக்தர்கள் வீடுகள் தோறும் அம்மனை வரவேற்று தீபாரதனை செய்து வழிபாடு நடத்தினர். இருஅம்பிகைகள் ஆலயம் வந்தடையும் நிகழ்ச்சியான நடைபாவாடை ஐதீக திருவிழா நடைபெற்றது. தங்கள் வேண்டுதலை நிறைவேற்றவும், வாழ்வு செழிக்க ஊர் சுபிட்சம் பெற பக்தர்கள் விரித்த நடைபாவாடையில் ஶ்ரீ மகாகாளியம்மன், பெரியமாரியம்மன் கரகங்கள் திருநடனம் ஆடியவாறு ஆலயம் வந்தடைந்தது. தொடர்ந்து நாதஸ்வர கலைஞர்களின் மல்லாரி, மகுடி, கும்மி, ஆனந்த பைரவி ராகங்களுக்கு ஏற்றவாறு கரகங்கள் திருநடனம் ஆடி ஆலயம் குடிபுகுந்தன. தொடர்ந்து மகாதீபாரதனை செய்யப்பட்டு பக்தர்களுக்கு பிரசாதங்கள் வழங்கப்பட்டது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்