15 ஆயிரம் கொடுத்தால் தான் நெல்லை கொள்முதல் செய்வேன் என மிரட்டல் - தற்கொலை செய்து கொள்ளபோவதாக விவசாயி கதறல்
மூட்டை ஒன்றுக்கு தனியாக 50 ரூபாயும், அங்கு பணிபுரியும், மற்ற ஊழியர்களுக்கு ஐந்தாயிரம் ரூபாய் என மொத்தம் 15, 000 ஆயிரம் ரூபாய் லஞ்சம் கேட்டதாக குற்றச்சாட்டு
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே குன்னம் கிராமத்தை சேர்ந்த ராசமாணிக்கம் என்பவரின் மகன்கள், கோபால கண்ணன் மற்றும் அருள்குமார். விவசாயிகளான இவர்கள் இருவரும் தங்கள் சொந்த கிராமத்தில் உள்ள 5 ஏக்கர் நிலத்தில் நெல் சாகுபடி செய்து வருகின்றனர்.
இந்த நிலையில் மயிலாடுதுறை மாவட்டம் பருவமழை பாதிப்பால் கடும் இன்னல்களுக்கு உள்ளான நிலையில், கடன்பட்டு தங்களது 5 ஏக்கர் நிலத்தில் சம்பா பயிரை சாகுபடி செய்து தற்போது அறுவடை செய்துள்ளார். வழக்கமாக 5 ஏக்கர் நிலத்தில் 250 முதல் 300 மூட்டைகள் வரை விளையக்கூடிய நிலத்தில் இம்முறை வெறும் 100 மூட்டைகள் மட்டுமே விளைந்துள்ளது. இதனால் கடும் நஷ்டத்தை சந்தித்துள்ளார். இந்த சூழலில் தான் விளைவித்த நெல்லை குன்னம் கிராமத்தில் தமிழ்நாடு வாணிப கழக சார்பில் செயல்பட்டு வரும் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் விற்பனை செய்ய விவசாயி அருள்குமார் ஆன்லைன் மூலம் விண்ணப்பித்து நெல் மூட்டைகளை கொண்டு சென்றுள்ளார்.
அப்போது நேரடி நெல் கொள்முதல் நிலையம் அலுவலர் அவரது நெல்லை கொள்முதல் செய்ய 5000 ரூபாய் லஞ்சமாக தர வேண்டும் என்றும், மேலும், மூட்டை ஒன்றுக்கு தனியாக 50 ரூபாயும், அங்கு பணிபுரியும், மற்ற ஊழியர்களுக்கு ஐந்தாயிரம் ரூபாய் என மொத்தம் 15, 000 ஆயிரம் ரூபாய் லஞ்சம் கேட்டதாகவும், அதை தர மறுப்பதால், தனது நெல் தரம் சரியில்லை எனக் கூறி கடந்த 15 நாட்களாக கொள்முதல் செய்யாமல் கிடப்பில் போட்டு வைத்துள்ளதாக குற்றம் சாட்டி உள்ளார். தனது நெல்லை அதிகாரிகள் லஞ்சம் பெறாமல் இரண்டு தினங்களுக்குள் கொள்முதல் செய்யவில்லை என்றால், அரும்பாடு பட்டு விளைவித்த நெல்மணிகளை ஆற்றில் கொட்டிவிட்டு, கடனில் இருந்து மீள தற்கொலை செய்து கொள்ளப்போவதாக தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து இப்பகுதி விவசாயிகள் சிலர் கூறுகையில், இந்த நெல் கொள்முதல் நிலையத்தில், லஞ்சம் கொடுத்தால் மட்டுமே தங்களது நெல்லை கொள்முதல் செய்வதாகும், நெல்லின் தரம் முழுமையாக இருந்தாலும் மூட்டை ஒன்றுக்கு 50 ரூபாய் வசூலிக்கப் படுவதாகவும், இதுபோன்று மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களிலும் மூட்டை ஒன்றுக்கு 50 ரூபாய் கமிஷனாக பெறும் நிகழ்வு தொடர்கதையாக இருந்து வருவதாக குற்றச்சாட்டை தெரிவித்தனர்.