Thanjavur Murder: பழிக்குப்பழி..! ஜிகர்தண்டா கடை ஊழியர் ஓட ஓட விரட்டி வெட்டிக் கொலை - தஞ்சாவூரில் பரபரப்பு
Thanjavur Murder: தஞ்சாவூரில் இளைஞர் ஒருவர் ஓட ஓட விரட்டி வெட்டிக் கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Thanjavur Murder: தஞ்சாவூரில் இளைஞர் வெட்டிக் கொல்லப்பட்ட, வழக்கில் குற்றவாளிகளை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
ஓட, ஓட விரட்டி வெட்டப்பட்ட இளைஞர்:
தஞ்சாவூர் அருகே களிமேடு கிராமத்தைச் சேர்ந்தவர் ஸ்ரீராம் (22). அவர் மருத்துவக்கல்லூரி சாலையிலுள்ள மங்களபுரம் பகுதியில் அமைந்துள்ள, ஒரு ஜிகர்தண்டா கடையில் வேலை பார்த்து வந்தார். வழக்கம்போல நேற்று இரவு கடையில் வேலை பார்த்துக் கொண்டிருந்தபோது, அக்கடை முன் பைக்குகளில் 6 மர்ம நபர்கள் வந்துள்ளனர். அவர்களை பார்த்ததும் ஸ்ரீராம் கடையில் இருந்து வெளியே வந்து தப்பியோட முயன்றார். ஆனால் அந்த மர்ம நபர்கள் கடையிலிருந்து சில அடி தூரத்திலேயே ஸ்ரீராமை சுற்றி வளைத்து சரமாரியாக அறிவாளால் வெட்டினர். இதில் படுகாயம் அடைந்த ஸ்ரீராம் சம்பவ இடத்திலேயே இறந்தார். போக்குவரத்து மிகுந்த மருத்துவக் கல்லூரி சாலையில் இந்த படுகொலை சம்பவம் நடந்ததை கண்டு பொதுமக்கள் அச்சத்தில் அலறிக் கொண்டு தெறித்து ஓடினர்.
சிகிச்சை பலனின்றி இளைஞர் உயிரிழப்பு:
படுகாயமடைந்த ஸ்ரீராம் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தர். அவரது உயிர் பிரிந்தது என்பது உறுதிபடுத்திக் கொண்ட பிறகு, தாக்குதல் நடத்திய அந்த கும்பல் தாங்கள் வந்த பைக்குகளில் ஏறி தப்பிச் சென்றனர். ஸ்ரீராமின் உடல் கிடந்ததால் அந்தப் பகுதியில் போக்குவரத்து ஸ்தம்பித்தது. தகவலறிந்த எஸ். பி.,ஆஷிஷ் ராவத், டவுன் டி எஸ் பி ராஜா, வல்லம் டிஎஸ்பி நித்யா உள்ளிட்டோர் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். தொடர்ந்து, ஸ்ரீராம் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக, தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
ஸ்ரீராம் கொல்லப்பட்டது ஏன்?
ஸ்ரீராம் கொலை தொடர்பாக மருத்துவக்கல்லூரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். முதல்கட்ட விசாரணையில், தஞ்சாவூர் அருகே மாதாகோட்டை பகுதியை சேர்ந்த பிரின்ஸ் லாரா (எ) சின்னா (28), கடந்த 2022ம் ஆண்டில் கொலை செய்யப்பட்டார். இந்த கொலை வழக்கில் ஸ்ரீராம் உட்பட சிலரை வல்லம் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த வழக்கில் ஜாமீனில் வெளியே வந்து வேலை பார்த்துக் கொண்டிருந்த நிலையில் ஸ்ரீராம் கொலை செய்யப்பட்டுள்ளார். எனவே, பிரின்ஸ் லாரா கொலைக்கு பழிவாங்கும் நோக்கில் ஸ்ரீராம் கொலை செய்யப்பட்டாரா? அல்லது வேறு ஏதாவது காரணமா என்பது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.
தஞ்சையில் மக்கள் அச்சம்:
தஞ்சாவூரில் சமீப காலமாக அரிவாள் கலாச்சாரம் அதிகரித்து வருகிறது. முக்கியமாக போக்குவரத்து மிகுந்த பகுதியிலேயே கொலை சம்பவங்கள் நடக்கிறது. கடந்த மாதத்தில் மாரியம்மன் கோயிலுக்கு, காரில் வந்த ஒருவர் மதிய வேளையில் அரிவாளால் வெட்டிக் கொல்லப்பட்டார். தற்போது இரவில் ஸ்ரீராம் ஓட ஓட விரட்டி கொலை செய்யப்பட்ட சம்பவமும் நடந்துள்ளது. இதுபோன்று அடுத்தடுத்து நடைபெற்று வரும் படுகொலைகள் தமிழகம் மட்டுமின்றி, ஒட்டுமொத்த தமிழகத்தையே அதிர்ச்சியடைய செய்துள்ளது.