"சாதாரண குடும்பத்தை சேர்ந்த என்னை வெற்றி பெற செய்யுங்கள்" தஞ்சை தி.மு.க. வேட்பாளர் பரப்புரை
சாதாரண குடும்பத்தைச் சேர்ந்தவனான என்னை வெற்றி பெறச் செய்யுங்கள் என்று கிராமங்கள் தோறும் சூறாவளி போல் பிரச்சாரம் மேற்கொள்ளும் திமுக வேட்பாளர் முரசொலி மக்களிடம் வாக்கு சேகரித்து வருகிறார்.
தஞ்சாவூர்: சாதாரண குடும்பத்தைச் சேர்ந்தவனான என்னை வெற்றி பெறச் செய்யுங்கள் என்று கிராமங்கள் தோறும் சூறாவளி போல் பிரச்சாரம் மேற்கொள்ளும் திமுக வேட்பாளர் முரசொலி மக்களிடம் வாக்கு சேகரித்து வருகிறார்.
தீவிரமாக வாக்கு சேகரிக்கும் தி.மு.க. வேட்பாளர்:
இந்தியா கூட்டணி சார்பில், தஞ்சாவூர் நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் முரசொலி பேராவூரணி நகர் பகுதி, அண்ணா சிலை, பேராவூரணி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட நம்பிவயல், நடுவிக்கோட்டை, கொண்டிக்குளம், கழுகப்புலிக்காடு, பில்லங்குழி, பண்ணவயல், சுந்தர்ராஜபுரம், கூத்தாடி வயல், கார்காவாயல், கோட்டாக்குடி ,படாடியலில், உள்ளவாறு உள்ளிட்ட பல்வேறு இடங்களில் தீவிர வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டார்.
சாதாரண குடும்பத்தை சேர்ந்தவன் நான்
அப்போது அவர் மக்கள் மத்தியில் பேசியதாவது: "சாதாரண ஏழை, எளிய குடும்பத்தை சேர்ந்தவனான என்னை பாராளுமன்ற வேட்பாளராக நிறுத்தி அழகு பார்த்தவர் தலைவர் தளபதி முதல்வர் ஸ்டாலின். நானும் உங்களைப் போன்ற சாதாரண குடும்பத்தைச் சேர்ந்தவன். உங்கள் சிரமங்களை நன்கு உணர்ந்தவன். தமிழ்நாடு அரசு மக்களுக்கான பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. உங்கள் பகுதிகளுக்கு தேவையான பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகளை கொண்டு வருவேன். வாக்களித்த மக்களுக்கு விசுவாசமாக இருக்க வேண்டும் என்ற தலைவர் தளபதியின் உத்தரவின் படி என்றும் உங்களுக்கு விசுவாசமாக இருப்பேன்.
மத்திய அரசு நிதி விடுவிக்க மறுக்கிறது
மகளிர் உரிமைத்தொகை 90 விழுக்காடு பொதுமக்களுக்கு கிடைத்துள்ளது. 10 விழுக்காடு மக்களுக்கு கிடைக்கவில்லை என்ற குறை உள்ளது. அதனை தேர்தல் முடிந்த பிறகு மூன்று மாத காலத்திற்குள் சரி செய்து தருவோம் என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அறிவித்துள்ளார். எனவே, தகுதியுள்ள அனைவருக்கும் மகளிர் உரிமைத் தொகை விடுபடாமல் வழங்கப்படும். தமிழக அரசு பல்வேறு நலத்திட்டங்களை நிறைவேற்றி வந்தாலும், மத்திய அரசு நமக்கான நிதியை விடுவிக்க மறுக்கிறது.
எனவே, தமிழகத்திற்கு நல்ல பல திட்டங்களை செயல்படுத்த, நமக்கு ஆதரவான மத்திய அரசு அமைய வேண்டும். அதற்கு நீங்கள் அனைவரும் உதயசூரியன் சின்னத்தில் ஆதரித்து, என்னை வெற்றி பெறச் செய்ய வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
அனல்பறக்கும் பரப்புரை:
பிரச்சாரப் பயணத்தில், திமுக தஞ்சை தெற்கு மாவட்டச் செயலாளரும், பட்டுக்கோட்டை எம்எல்ஏவுமான கா.அண்ணாதுரை, தலைமைச் செயற்குழு உறுப்பினரும், பேராவூரணி எம்எல்ஏவுமான நா.அசோக்குமார், திமுக பேராவூரணி தொகுதி பார்வையாளர் நாகை மனோகரன், பட்டுக்கோட்டை தொகுதி பார்வையாளர் புதுக்கோட்டை சரவணன், பொதுக்குழு உறுப்பினர் அ.அப்துல் மஜீத், ஒன்றியச் செயலாளர்கள், நகரச்செயலாளர்கள், கூட்டணிக் கட்சிகளின் தலைவர்கள், நிர்வாகிகள், பல்வேறு அணிகளின் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
கிராமங்கள் தோறும் தீவிர வாக்குசேகரிப்பில் ஈடுபட்டுள்ள திமுக வேட்பாளர் முரசொலிக்கு மக்கள் மத்தியில் உற்சாக வரவேற்பு கிடைத்துள்ளது. மக்களுடன் மக்களாக இறங்கி பழகி தனக்கு வாக்கு சேகரித்து வருகிறார். முக்கியமாக தமிழக அரசு செய்த பல்வேறு நலத்திட்டங்களை விளக்கி கூறி மக்கள் மத்தியில் வாக்கு சேகரிக்கிறார்.