விவசாயிகளை விடுதலை போராளிகளாக அறிவிக்க கோரி நெல்மணிகளை சாலையில் கொட்டி போராட்டம்
போராட்டத்தில் உயிரிழந்த 750 விவசாயிகளின் குடும்பத்திற்கு தகுதியின் அடிப்படையில் மத்திய அரசு பணி வழங்க கோரிக்கை
தஞ்சாவூர் மாவட்ட கும்பகோணத்தை அடுத்த ஏராகரம் கிராமத்தில் வேளாண் விளை பொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலையை உத்தரவாதப்படுத்திட சட்ட உரிமை வழிவகை செய்திட வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறித்தி மின் மோட்டார் பம்பு செட்டுகளில் கருப்பு கொடியேற்றியும், நெல் மணிகளை வயல் வெளிகளில் கொட்டி , தஞ்சாவூர் மாவட்ட காவிரி விவசாயிகள் சங்கம் சார்பில் நுாதன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு பழவாறு பாசனதாரர் சங்க தலைவர் ஏராகரம் சாமிநாதன் தலைமை வகித்தார். செயலாளர் சுவாமிமலை சுந்தரவிமலநாதன் கண்டன உரையாற்றினார். இதில் ஏராளமான விவசாயிகள், கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன கோஷங்களிட்டனர்.
ஆர்ப்பாட்டத்தில், மத்திய அரசு உழவர்களின் நலனிற்கு எதிராக 2020 ஆம் ஆண்டு கொண்டு வந்த மூன்று வேளாண் கருப்புச் சட்டங்கள், புதிய மின் திருத்த சட்ட மசோதா ஆகியவற்றை ரத்து செய்யக் கோரியும் வேளாண் விளைபொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலையை உத்தரவாதப்படுத்திட சட்ட உரிமை வழிவகை செய்திட கோரியும் கடந்த ஆண்டு 21.11.2020 டெல்லி எல்லையில் தொடங்கிய விவசாயிகளின் அமைதி வழி அறப்போராட்டத்தில் 750 இன்னுயிர்களை ஈகிய விவசாயிகளுக்கு மெழுகுவர்த்தி ஏந்தி, வீரவணக்க நினைவேந்தல் உறுதிமொழி ஏற்பு நடைபெற்றது. 750 விவசாயிகளின் குடும்பத்திற்கு மத்திய அரசு பணிகளில், தகுதியின் அடிப்படையில், ஒருவருக்கு அரசு வேலையும், உயிரிழந்த விவசாயிகளுக்கு ரூ. 50 லட்சம் வழங்கிட வேண்டும், உயிரழந்த விவசாயிகளை விடுதலைப் போராளிகளாக இந்திய அரசு அறிவிக்க வேண்டும், இந்திய விவசாயிகள் மட்டுமல்லாது, அனைத்து ஏழைகள் நடுத்தர வர்க்கத்தினரையும், மின் துறையில் பணிபுரியும் அனைத்து ஊழியர்களின் நலனிற்கு முழு விரோதமான 2020 புதிய திருத்த சட்ட மசோதாவை ரத்து செய்ய வலியுறுத்தியும், விவசாய மின் மோட்டார் செட்டுகள், மின் தண்ணீர் இறைப்பான்ளிலும் கருப்புக் கொடிகளை பறக்கவிட்டும், அனைத்து வேளாண் உற்பத்திப் பொருட்களுக்கு குறைந்த பட்ச ஆதார விலை சட்டப்பூர்வமாக்கிட வேண்டும் என்பதை வலியுறுத்தி, விவசாயிகள் நெல் மணிகளை வயல்களில் வெளிகளில் கொட்டி நுாதன முறையில் கவன ஈர்ப்பு போராட்டம் நடைபெற்றது. இதில் விவசாயிகள் கலந்து கொண்டு கண்டன கோஷங்களிட்டனர்.
இதனை தொடர்ந்து, உலக வரலாற்றில் விவசாயிகளின் உரிமைகளுக்காக ஓராண்டாக போராடியும், 750 இன்னுயிர்களை ஈகிய இந்திய விவசாய விடுதலை போராளியின் குடும்பத்தாரை நேரில் சந்தித்து இரங்கல் தெரிவித்து, தமிழ்நாட்டு விவாசாயிகள் சார்பில் ஆறுதல் கூறிடவும் லட்சக்கணக்கான விவசாயிகளை ஒருங்கிணைத்து அமைதி வழியில், சத்தியாகிரக போராட்டம் நடத்தி, விவசாயிகளின் உரிமைகளை உலகறியச் செய்து, நிலைநாட்டிய விவசாய வீர வரலாற்று போரினை தலைமையேற்று போராடி வரும், சம்யுக்தா கிஸ்சான் மோச்சா, ஐக்கிய உழவர் முன்னணி மற்றும் அகில இந்திய விவசாயிகள் போராட்ட ஒருங்கிணைப்பு குழுவின் தலைவர்கள், பல்வேறு சமூக செயற்பாட்டாளர்கள், போராட்ட முழுவெற்றிக்கு பெறும் முயற்சிக்க காரணமாயிருந்த, பஞ்சாப், அரியானா, உத்திரபிரதேசம், மத்திய பிரதேசம் உள்ளிட்ட வட மாநில விவசாயிகளுக்கு நேரில் சென்று நன்றி தெரிவிக்கும் வகையில், தஞ்சை மாவட்ட காவிரி விவசாயிகள் சங்கம் சார்பில் விவசாயிகளான சுவாமிமலை சுந்தரவிமலநாதன், ஆதிகலிய பெருமாள், முருகானந்தம், ராஜா, ஸ்டாலின் ஆகிய 5 பேர், டெல்லிக்கு தென்னங்கன்றுடன் புறப்பட்டு சென்றனர். அங்கு விவசாயிகளின் போராட்டத்தை ஒருங்கிணைத்த 9 தலைவர்களுக்கு, தமிழ்நாட்டு விவசாயிகள் சார்பில் தென்னங்கன்று வழங்கப்படவுள்ளது.