கும்பகோணம் மாநகராட்சி கூட்டத்தில் மேயரை முற்றுகையிட்ட கவுன்சிலர்களால் பரபரப்பு
தீர்மானங்களை நிறைவேற்ற வலியுறுத்தி தஞ்சை மாவட்டம் கும்பகோணம் மாநகராட்சி கூட்டத்தில் மேயரை கவுன்சிலர்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
தஞ்சாவூர்: தீர்மானங்களை நிறைவேற்ற வலியுறுத்தி தஞ்சை மாவட்டம் கும்பகோணம் மாநகராட்சி கூட்டத்தில் மேயரை கவுன்சிலர்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் மாநகராட்சி கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு மாநகராட்சி மேயர் சரவணன் தலைமை வகித்தார். துணை மேயர் தமிழழகன், ஆணையர் லட்சுமணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டம் தொடங்கியவுடன் காலமான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைவர் சங்கரய்யா மற்றும் தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் ஆகியோருக்கு 5 நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது. தொடர்ந்து மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்ட சென்னை மற்றும் தென் மாவட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்கிய தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்துக் கொள்வது. மேலும் சென்னை மற்றும் தென் மாவட்டங்களுக்கு தூய்மை பணியாற்ற சென்ற 100-க்கும் மேற்பட்ட தூய்மை பணியாளர்களுக்கு பாராட்டுக்கள் தெரிவித்துக் கொள்வது ஆகிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
துணை மேயர் தமிழழகன்: தாராசுரம் காய்கறி மார்க்கெட் கடை வாடகை குறைக்க கோரி கோரிக்கை விடுத்திருந்தனர். அரசுக்கும் இழப்பீடு இல்லாமலும் மக்களுக்கு பாதிப்பு இல்லாமலும் இருக்க பரிசீலனை செய்து ஒரு சதுர அடிக்கு ரூ. 5 என்று இருந்ததை ரூ.3.26 ஆக குறைக்கப்பட்டுள்ளது.
கவுன்சிலர் ஆசைதம்பி: கும்பகோணம் மாநகராட்சியில் வடகிழக்கு பருவ மழையினால் வரக்கூடிய பாதிப்புகளை சரி செய்யும் வகையில் உத்தேச மதிப்பீடு தயார் செய்து மாமன்றத்தின் அனுமதி கேட்கப்படுகிறது. இந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை நிறைவு பெற்றுவிட்டது. தற்போது கொண்டு வந்துள்ள பொருள் அடுத்த ஆண்டுக்குரியதா?
தொடர்ந்து துணை மேயர் தமிழழகன் மற்றும் உறுப்பினர்கள், கூட்டத்தில் நிறைவேற்றுவதற்காக அனுப்பப்பட்ட பொருள்களில் 13 பொருள்களை கையெழுத்திடாமல் தாமதம் செய்தது ஏன் என கேள்வி எழுப்பினர்.
மேயர் சரவணன் பதிலளித்து பேசுகையில், 13 பொருட்களையும் பரிசீலனை வைத்துள்ளதாகவும் பரிசீலனை முடிந்த பிறகு நிறைவேற்றப்படுவதாகவும் தெரிவித்தார். இதனால் ஆத்திரமடைந்த மாநகராட்சி உறுப்பினர்கள் பொருள்களை பரிசீலனை செய்ய காரணம் என்ன? மேலும் பொருளில் உள்ள சந்தேகத்திற்கான காரணம் என்ன? என்று கூற வேண்டும் என வாக்குவாதம் செய்தனர்.
இதையடுத்து மேயர் சரவணன் ஆவேசமாக பொருள்கள் பரிசீலனையில் உள்ளதால் உடனே ஒப்புதல் தர முடியாது. மேலும் மாநகராட்சியில் நிதி பற்றாகுறை உள்ளது. அடுத்த மாதம் மன்றத்தில் ஒப்புதல் அளிக்கிறேன் என்றார்.
தொடர்ந்து துணை மேயர் பேசுகையில், மாநகராட்சி உறுப்பினர்கள் அனைவரும் ஒருமனதாக ஒப்புகொண்டு பொருள்கள் மீது கையெழுத்து போட்டுள்ளனர். இதனை நிராகரிக்க காரணம் என்ன?. எம்.எல்.ஏ. தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் கொடுக்கப்பட்ட திட்டங்களுக்கான பொருள்களை ஏன் அனுமதி கிடைக்க வில்லை என்று கேள்வி எழுப்பினார்.
தொடர்ந்து எந்த பதிலும் கூறாமல் மேயர் சரவணன் கூட்டம் நிறைவு பெற்றதாக தெரிவித்துவிட்டு அங்கிருந்து வெளியே செல்ல முயன்றார். இதனால் மாநகராட்சி உறுப்பினர்கள் மேயரை வெளியே செல்ல விடாமல் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டு கோஷங்கள் எழுப்பினர். இதனால் மாநகராட்சி கூட்டம் பரபரப்பு ஏற்பட்டது.
முற்றுகை போராட்டத்தை தொடர்ந்து காங்கிரஸ் உறுப்பினர்அய்யப்பன் தலைமையில் கூட்டணி கட்சி உறுப்பினர்கள் மேயர் சரவணனிடம் பொருள்களை நிறைவேற்றி தரக் கோரி கேட்டனர். தன்னுடைய கட்சிக்காரரே தீர்மானத்திற்கு ஆதரவாக கோரிக்கை விடுத்ததால், பதில் கூற முடியாமல் மேயர் சரவணன் திகைப்படைந்தார்.
தொடர்ந்து துணை மேயர், ஆணையர் 2 பேரும் விவாதித்து விட்டு வந்து அதனை மேயரிடம் தெரிவித்தனர். ஆனால் அதற்கு மேயர் ஒப்புகொள்ளாததால், அந்த தீர்மானங்களை அரசு சார்பில் பணிகளை செய்து தருமாறு ஆணையரிடம் மனுவாக கொடுத்தனர். பின்னர் அங்கிருந்து அனைத்து உறுப்பினர்களும் கலைந்து சென்றனர். இந்த முற்றுகை போராட்டம் சுமார் 4 மணி நேரம் நடந்தது.