கும்பகோணம் அரசு கலைக்கல்லூரி நாட்டு நலப்பணித்திட்ட 7 நாள் சிறப்பு முகாம் துவக்க விழா
முகாமில் பங்கேற்கும் மாணவர்களின் ஒவ்வொரு நல்ல செயல்பாடும், பேரணிகளும், பொதுமக்களிடத்திலும், சமூகத்திலும் பெரிய மாற்றத்தினை ஏற்படுத்தும்.
தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அரசினர் கலைக்கல்லூரியின் (தன்னாட்சி) நாட்டு நலப்பணித்திட்ட ஏழு நாள் சிறப்பு முகாம் துவக்கவிழா நடைபெற்றது.
பாரதிதாசன் பல்கலைக்கழக நாட்டு நலப்பணித் திட்டம் மற்றும் கும்பகோணம் அரசினர் கலைக்கல்லூரியின் (தன்னாட்சி) நாட்டு நலப்பணித்திட்ட ஆறு அலகுகளின் சிறப்பு முகாம் (ஏழு நாள்) பெரும்பாண்டி ஊராட்சியில் நேற்று முன்தினம் தொடங்கப்பட்டது.
இம்முகாம் பெரும்பாண்டி ஊராட்சி, உள்ளூர் ஊராட்சி மற்றும் வார்டு எண்.11 ஆகிய இடங்களில் நேற்று முன்தினம் 27ம் தேதி முதல் வரும் ஏப்ரல் 02ம் தேதி வரை நடைபெற இருக்கிறது. இந்நிலையில் துவக்க விழாவிற்கு கல்லூரி முதல்வர் முனைவர் தனராஜன் தலைமை தாங்கினார். பெரும்பாண்டி ஊராட்சி மன்ற தலைவர் ஆர்.கே.பாஸ்கர், கும்பகோணம் மாமன்ற உறுப்பினர் சோடா.கிருஷ்ணமூர்த்தி, உள்ளூர் ஊராட்சி மன்ற தலைவர் செல்வக்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
திட்ட அலுவலர் முனைவர் ரமேஷ்குமார் வரவேற்றார். கல்லூரியின் மூத்த பேராசிரியர் வேதியியல் துறைத்தலைவர் மீனாட்சிசுந்தரம் வாழ்த்துரை வழங்கினார். முகாமில் கல்லூரி முதல்வர் தனது தலைமையுரையில் பேசியதாவது: முகாமில் பங்கேற்கும் மாணவர்களின் ஒவ்வொரு நல்ல செயல்பாடும், பேரணிகளும், பொதுமக்களிடத்திலும், சமூகத்திலும் பெரிய மாற்றத்தினை ஏற்படுத்தும். எனவே, நீங்கள் மக்களிடம் நெகிழி பயன்பாட்டினால் ஏற்படுகிற சுற்றுச்சூழல் மாசுபாடு குறித்த போதிய விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். நெகிழி பயன்பாட்டை தடுத்து பொதுமக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்த செய்ய வேண்டும் என்றார்.
இதனைத்தொடர்ந்து சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்ட ஆர்டிஓ பூர்ணிமா தனது சிறப்புரையில், அவருடைய கல்லூரிகால என்எஸ்எஸ் சிறப்புமுகாமை நினைவு கூர்ந்ததுடன், மாணவர்கள் இந்த சிறப்பு நாட்டு நலப்பணித்திட்ட முகாமை நல்ல முறையில் தங்களை புரிந்துகொள்ளவும், பொதுசுகாதாரத்தை பேணிக்காப்பது குறித்து போதிய விழிப்புணர்வு ஏற்படுத்தவேண்டும்.
மேலும், தமிழ்நாட்டின் மிகமுக்கிய நதியான காவிரி, நெகிழி குப்பைகளால் அதிக சீர்கேட்டிற்கு ஆளாகியுள்ளதால் மாணவர்கள் அதனை காக்க முன்வரவேண்டும் என்றார்.
நிகழ்ச்சிக்கான ஏற்பாட்டினை என்எஸ்எஸ் திட்ட ஒருங்கிணைப்பாளர் முனைவர் அன்புமணி, திட்ட அலுவலர்கள் முனைவர் தமிழ்வானன், முனைவர் செந்தில், பேராசிரியர் விஜி ஆகியோர் செய்திருந்தனர். நிகழ்ச்சியில் வழக்கறிஞர் கரிகாலன், கும்பகோணம் வட்டாட்சியர் வெங்கடேஷ்வரன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பூங்குழலி, சூரிய நாரயணன், பெரும்பாண்டி மற்றும் உள்ளூர் ஊராட்சி ஒன்றியக்குழு உறுப்பினர்கள், துணைத்தலைவர்கள், கிராம நிர்வாக அலுவலர்கள், செயலர் மற்றும் கல்லூரியின் அனைத்து துறைத்தலைவர்கள், பேராசிரியர்கள், மாணவ மாணவியர்கள் கலந்துகொண்டனர்.
இறுதியாக முனைவர் சாமுவேல் எபினேசர் நன்றி கூறினார். தொடர்ந்து அன்று மாலையில் சுற்றுச்சூழல் மேலாண்மை குறித்து புவியியல் துறைத்தலைவர் முனைவர் கோபு பேசினார். மேலும் மரக்கன்றுகள் நடுதல் மற்றும் தூய்மைப்பணியுடன் முதல்நாள் முகாம் முடிவுற்றது.