மணக்கும் கும்பகோணம் வெற்றிலைக்கு புவிசார் குறியீடு... மற்றொன்றுக்கும் கிடைத்துள்ளது அது என்ன?
மருத்துவ குணமும், தனிச்சிறப்பும் பெற்ற கும்பகோணம் வெற்றிலைக்கு புவிசார் குறியீடு கிடைத்துள்ளது.

தஞ்சாவூர்: மங்கள நிகழ்வுகளில் முக்கிய இடம் கிடைக்கும் கும்பகோணம் வெற்றிலைக்கு புவிசார் குறியீடு கிடைத்துள்ளது.
ஏர் பூட்டி உழைக்கும் விவசாயிகளிடம் இருந்து மங்கள நிகழ்வு வரை வெற்றிலை முக்கியப் பங்கு வகிக்கிறது. வெற்றிலை நிறைய மருத்துவ குணங்களைக் கொண்டுள்ளது. வெற்றிலை ஒரு சில மாவட்டங்களில் சாகுபடி செய்யப்பட்டு வந்தாலும், காவிரி ஆற்றுப் படுகையில் விளைவதால் கும்பகோணம் வெற்றிலை தனி சிறப்பைப் பெற்று விளங்குகிறது. இதனாலேயே தனிச் சுவையும் மணமும் கொண்டதாக இருக்கிறது.
ஒரு காலத்தில் வட இந்திய மாநிலங்களுக்கு இங்கிருந்து அதிகளவில் வெற்றிலை ஏற்றுமதி செய்யப்பட்டது. இதன் பெருமையைப் பறைசாற்றும் விதமாக்கப் பாரதியார் பாடிய "சிந்து நதியின் மிசை நிலவினிலே, சேரநன்னாட்டிளம் பெண்களுடனே" பாடலில் காவிரி வெற்றிலையைப் பற்றி "கங்கை நதிபுரத்து கோதுமை பண்டம். காவிரி வெற்றிலைக்கு மாறுக் கொள்வோம்” என்ற வரிகள் கப்பலோட்டிய தமிழன் திரைப்படத்தில் இடம் பெற்றிருக்கும்.
இப்படி மருத்துவ குணமும், தனிச்சிறப்பும் பெற்ற கும்பகோணம் வெற்றிலைக்கு புவிசார் குறியீடு கிடைத்துள்ளது.
அரசு வழக்கறிஞர் சஞ்சய் காந்தி இன்று தஞ்சையில் நிருபர்களிடம் கூறியதாவது: தஞ்சாவூர் மாவட்டத்தில் திருவையாறு, பாபநாசம், கும்பகோணம் உள்ளிட்ட காவேரி படுகைகளில் மட்டுமே விளையக்கூடிய கும்பகோணம் வெற்றிலைக்கும், அரபிக்கடலும் வங்ககடலும் சங்கமிக்கும் கன்னியாகுமரி மாவட்டத்தில் மட்டுமே செய்யக்கூடிய தோவாளை மாணிக்க மாலை ஆகிய இரண்டுக்கும் புவிசார் குறியீடு கிடைத்துள்ளது. தமிழகத்தில் இதுவரை 62 புவிசார் குறியீடு பொருட்கள் பெறப்பட்டு இந்திய அளவில் இரண்டாவது இடத்தில் தமிழகம் விளங்கி வருகிறது.
இதே போல் தமிழகத்தில் 11 பொருட்களுக்கு புவிசார் குறியீடு பெற்று மாநிலத்தில் முதல் மாவட்டமாக தஞ்சை விளங்கி வருகிறது. தஞ்சை மாவட்டத்தில் தலையாட்டி பொம்மை, திருபுவனம் பட்டு, நெட்டிமாலை உள்ளிட்ட பத்து பொருள்களுக்கு புவிசார் குறியீடு பெற்றுள்ள நிலையில், மாவட்டத்தில் முதல் முறையாக வேளாண் பொருளுக்கு புவிசார் குறியீடு பெறுவது இதுவே முதல்முறை. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

