கும்பகோணம் ஆட்டோ ஓட்டுநருக்கு மதுரையில் அபராதம்-ஹெல்மெட் போடவில்லை என்ற குறுந்தகவலால் அதிர்ச்சி
’’முறையான ஆவணங்கள் இல்லை எனவும், ஹெல்மெட் போடவில்லை எனவும், போக்குவரத்து போலீசார், 200 அபராதம் விதித்து நோட்டீஸ்’’
தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம், மேட்டு தெருவை சேர்ந்தவர் குருநாதன் (40). ஆட்டோ டிரைவரான இவர், கடந்த 20 ஆண்டாக கும்பபேகாணத்தில் ஆட்டோ ஓட்டி வருகிறார். குருநாதன், கடந்த 7 ஆண்டுக்கு முன்பு சொந்தமாக ஆட்டோவை வாங்கி ஒட்டி வருகின்றார். இவர் வருடந்தோறும் இன்ஸ்சுரன்ஸ், சாலை உள்ளிட்ட அனைத்து வரிகளையும், முறையாக அனைத்து ஆவணங்களை பராமரித்து வருகிறார். இந்நிலையில், அக்டோபர் 5 ஆம் தேதி இரவு சுமார் 7 மணிக்கு, குருநானுக்கு ஒரு எஸ்எம்எஸ், வந்துள்ளது. அதில், மதுரை, ஒத்தக்கடை பகுதியில் சென்றதாகவும், வாகனத்திற்கு முறையான ஆவணங்கள் இல்லை எனவும், ஹெல்மெட் போடவில்லை எனவும், போக்குவரத்து போலீசார், 200 அபராதம் விதித்து நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது எனது குறுந்தகவல் பதிவாகியிருந்தது.
இதனால், அதிர்ச்சியடைந்த குருநாதன், சக ஆட்டோ டிரைவர்களிடம் தெரிவித்துள்ளார். மேலும், சிஐடியு, தொழிற்சங்கத்தில் முறையிட்டுள்ளார். அவர்கள் கும்பகோணம் போக்குவரத்து போலீசாரிடம், முறையிட்டுள்ளனர். மேலும், சம்மந்தப்பட்ட குறுந்தகவலை ஆய்வு செய்து உயர் அதிகாரிகளுக்கு தெரிவிப்பதாக போலீசார் தெரிவித்துள்ளனர். அத்துடன், மதுரை ஒத்தக்கடை போக்குவரத்து போலீசார், பொய்யாக போடப்பட்ட வழக்கையும், அபாரத தொகையையும் ரத்து வேண்டும் என, ஆட்டோ டிரைவர் குருநாதன் கோரிக்கை விடுத்துள்ளனர். இது குறித்து ஆட்டோ டிரைவர் குருநாதன் கூறுகையில்,
நான் கடந்த 5 ஆம் தேதி கும்பகோணத்தில் தான் இருந்தேன். எனது ஆட்டோ நம்பரான டிஎன் 68 எல் 1374 பதிந்து, எனது செல்போன் நம்பருக்கு குறுந்தகவல் வந்திருந்தது. இதனை பார்த்ததும் அதிர்ச்சியானேன். எனது ஆட்டோ நம்பர், செல்போன் நம்பர் சரியாக உள்ளதால், எனக்கு குழப்பம் ஏற்பட்டது. உடனே, கும்பகோணம் போக்குவரத்து போலீசாரிடம் இது குறித்து தெரிவித்துள்ளேன். நான் பல வருடங்களாக ஆட்டோ ஒட்டி வருவதால், அனைத்து ஆவணங்களையும் முறையாக பராமரித்து வருவேன். இப்போது வந்துள்ள குறுந்தகவலால் எனக்கு மன உளைச்சல் ஏற்பட்டுள்ளது. போலீசாரின் அலட்சியத்தால், இது போன்ற சம்பவங்கள் நடந்துள்ளதா அல்லது எனது வாகன நம்பருடன், சென்றவர், போலீசாரிடம் சிக்கி கொண்டு, எனது செல்போன் நம்பரை கொடுத்து விட்டார்களா என்பது கேள்வி குறியாகியுள்ளது.
நான் 5ஆம் தேதி கும்பகோணத்தில் இருந்ததற்கான ஆதாரங்கள் இருப்பதால், மதுரை ஒத்தகடை போக்குவரத்து போலீசார், உடனடியாக எனக்கு வந்த குறுந்தகவலை திரும்ப பெற வேண்டும். அபராதத்தை தொகையை திரும்ப பெற வேண்டும். என் மேல் எந்த விதமான வழக்குகளும் பதிவு செய்யவில்லை என்று எழுதி கொடுக்க வேண்டும். தவறும் பட்சத்தில், சங்கத்தின் சார்பில் சென்னையிலுள்ள உயரதிகாரிகளுக்கு புகார் அளிக்கப்படும். எங்களது புகாருக்கு உரிய நடவடிக்கை எடுக்காவிட்டால், ஆட்டோ டிரைவர்களை ஒன்றிணைத்து போராட்டம் செய்யப்படும் என்றார்.