கார், ஸ்கூட்டர் கழுவ குடிநீரா? ஸ்மார்ட் மீட்டர் பொருத்தும் பணிகள் திருச்சியில் தீவிரம்
வார்டு எண்கள் 55 மற்றும் 56-ல் உள்ள சொசைட்டி காலனி, கருமண்டபம் மற்றும் பாரதி யார் சாலை போன்ற பகுதிகளில் 750 வீடுகளுக்கு குடிநீர் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன.

தஞ்சாவூர்: கிடுகிடுவென்று நடந்த பணிகளில் சுணக்கம் ஏற்பட்டு தற்போதும் மீண்டும் வேகம் பிடித்துள்ளது. இருப்பினும் குடிநீருக்கான ஸ்மார்ட் மீட்டரை பொருத்துவதில் தீவிரம் காட்டி வருகிறோம் என்று திருச்சி மாநகராட்சி நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
திருச்சி மாநகராட்சி, ஒரு சில வார்டுகளில் 24x7 குடிநீர் விநியோகத்திற்காக ஸ்மார்ட் மீட்டர்களைப் பொருத்தும் பணியை வேகப்படுத்தியுள்ளது. இதன் மூலம், குடிநீர் எவ்வளவு பயன்படுத்தப்படுகிறது என்பதை துல்லியமாகக் கணக்கிட்டு, அதற்கேற்ப கட்டணம் வசூலிக்கப்படும். இந்த 24x7 குடிநீர் திட்டம் , அம்ருத் 2.0 திட்டத்தின் கீழ், ரூ.38.49 கோடி செலவில் செயல்படுத்தப்படுகிறது. இந்தத் திட்டம் வார்டு எண்கள் 51 முதல் 56 வரை உள்ள பகுதிகளை உள்ளடக்கியது. இதில் கண்டோன்மென்ட், ரயில்வே ஜங்ஷன், பொன்னகர், ஜெயா நகர், விஸ்வாஸ் நகர், கருமண்டபம் மற்றும் ஐஓபி காலனி போன்ற பகுதிகளும் அடங்கும்.
இத்திட்டத்தின் கீழ் மொத்தம் 14 ஆயிரத்து 819 வீடுகள் மற்றும் வணிக நிறுவனங்களுக்கு குடிநீர் இணைப்புகள் வழங்கப்பட உள்ளன. இதுவரை, வார்டு எண்கள் 55 மற்றும் 56-ல் உள்ள சொசைட்டி காலனி, கருமண்டபம் மற்றும் பாரதி யார் சாலை போன்ற பகுதிகளில் 750 வீடுகளுக்கு குடிநீர் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன. இது முழுமையாகச் செயல்படத் தொடங்கியதும், ஒரு நாளைக்கு 19.51 மில்லியன் லிட்டர் (MLD) குடிநீர், 1,25,902 மக்களுக்கு விநியோகிக்கப்படும் என்று தெரிய வந்துள்ளது.
ஸ்மார்ட் மீட்டர் பொருத்தும் பணிகள் மும்முரம்
ஸ்மார்ட் மீட்டர் பொருத்தும் பணி சில மாதங்களுக்கு முன்பே தொடங்கி விட்டது. குழாய் இணைப்புகள் கொடுக்கப்பட்டுள்ள இடங்களில் பணியை விரைவுபடுத்துமாறு ஊழியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இருப்பினும் பல்வேறு இடையூறுகளால் பணிகளில் தொய்வு ஏற்பட்டு வந்துள்ளது. முக்கியமாக ஆட்கள் பற்றாக்குறையும் ஒன்று என்று கூறப்படுகிறது. தற்போது வால்வுகள் பொருத்தும் பணியும், குழாய்கள் அமைக்கும் பணியும் தீவிரமாக நடந்து வருகிறது. திட்டமிட்ட காலத்திற்கு முன்பே இத்திட்டத்தை முடித்துவிட வேண்டும் என்று மாநகராட்சி நிர்வாகம் பணிகளை முடுக்கி விட்டுள்ளதாக கூறப்படுகிறது. பணிகள் நிறைவடைந்த பின்னர் ஒரு சோதனை ஓட்டம் நடத்தப்படும் என்ற எதிர்பார்ப்பு உள்ளது_
தற்போது, திருச்சி நகரில் 1.2 லட்சத்திற்கும் அதிகமான குடிநீர் இணைப்புகள் உள்ளன. இதற்காக, மாநகராட்சி நிர்வாகம் வீடுகளுக்கும், வணிக நிறுவனங்களுக்கும் தனித்தனி கட்டண விகிதங்களில் தண்ணீர் வரி வசூலித்து வருகிறது. தற்போது, ஊழியர்கள் கைகளால் மீட்டரில் உள்ள அளவுகளைப் பதிவு செய்கிறார்கள். மேலும், இந்த வேலைக்கு ஆட்கள் பற்றாக்குறையும் நிலவுகிறது. இந்த ஸ்மார்ட் மீட்டர் திட்டத்தின் முக்கிய நோக்கம், தண்ணீரைச் சேமிப்பதுதான்.
தண்ணீரை சிக்கனமாக மக்கள் பயன்படுத்துவாங்க
மீட்டரில் அளவிடப்படும் பயன்பாட்டிற்கு ஏற்ப கட்டணம் வசூலிக்கும்போது, மக்கள் தண்ணீரைச் சிக்கனமாகப் பயன்படுத்துவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதுகுறித்து மாநகராட்சி அதிகாரிகள் தரப்பில் கூறுகையில், சில குடியிருப்புகளில் குடிநீரை வாகனங்களைக் கழுவவும், கால்நடைகளைக் குளிப்பாட்டவும் பயன்படுத்துவதாகப் புகார்கள் தொடர்ந்து வந்தன. திருச்சி நகரின் உண்மையான குடிநீர் தேவை ஒரு நாளைக்கு சுமார் 90 மில்லியன் லிட்டர் (MLD) ஆக இருந்தாலும், விநியோகம் சராசரியாக ஒரு நாளைக்கு 156 மில்லியன் லிட்டர் ஆக உள்ளது. இருந்தபோதிலும், தண்ணீர் வீணடிக்கப்படுவதால் நகரின் சில பகுதிகளில் தண்ணீர் பற்றாக்குறை நிலவுகிறது. இந்த ஸ்மார்ட் மீட்டர் பொருத்தப்பட்டால் அதற்கு தகுந்தார்போல் கட்டணம் வசூலிக்கப்படும். இதனால் பொதுமக்கள் குடிநீரின் தேவையை உணர்ந்து கார் மற்றும் இருசக்கர வாகனங்களை கழுவுவதை நிறுத்துவார்கள். இதனால் குடிநீர் வீணாகாது. மேலும் நகரின் குடிநீர் தேவையும் முழுமையாக பூர்த்தி செய்யப்படும். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
பயன்படுத்தும் குடிநீருக்கு மட்டுமே கட்டணம்
இந்த ஸ்மார்ட் மீட்டர் ஒரு டிஜிட்டல் கருவி. வீட்டில் எவ்வளவு தண்ணீர் பயன்படுத்தப்படுகிறது என்பதை இது துல்லியமாக அளவிடும். முன்பு போல, ஊழியர்கள் வந்து மீட்டர் அளவைப் பார்த்து குறிப்பெடுக்கத் தேவையில்லை. இந்த மீட்டர், பயன்படுத்திய தண்ணீரின் அளவை நேரடியாக மாநகராட்சிக்குத் தெரிவித்துவிடும். இதனால் நீங்கள் எவ்வளவு தண்ணீர் பயன்படுத்துகிறீர்களோ, அதற்கு மட்டும் கட்டணம் செலுத்தினால் போதும். இது ஒருவகையில் நியாயமான முறைதான். மேலும் வாகனங்களை குடிநீரில் கழுவுவதும் குறைந்து விடும்.





















