சுதந்திர தின கொண்டாட்டம்: தஞ்சாவூர், திருச்சி, அரியலூரில் உற்சாகம்!
தஞ்சாவூர் ஆயுதப்படை மைதானத்தில் 79வது சுதந்திர தினத்தை முன்னிட்டு மாவட்ட கலெக்டர் பிரியங்கா பங்கஜம் தேசிய கொடி ஏற்றினார்.

நாட்டின் 79-வது சுதந்திர தினவிழா இன்று கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதன்படி தஞ்சாவூர் ஆயுதப்படை மைதானத்தில் சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது. விழாவில் கலெக்டர் பிரியங்காபங்கஜம் தேசிய கொடி ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார். தொடர்ந்து மூவர்ண பலூன்களையும், வெண் புறாக்களையும் பறக்க விட்டார் . இதையடுத்து அவர் திறந்தவெளி ஜீப்பில் சென்று அணிவகுப்பை பார்வையிட்டு போலீசாரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார்.

அப்போது மாவட்ட எஸ்பி ராஜாராம் உடன் இருந்தார். தொடர்ந்து கலெக்டர் சுதந்திரப் போராட்ட தியாகிகள் மற்றும் அவர்களது வாரிசுகளுக்கு கதர் ஆடை அணிவித்து கௌரவித்தார். பின்னர் முன்னாள் படைவீரர் நலத்துறை, தோட்டக்கலைத்துறை, வேளாண் துறை, வருவாய் பேரிடர் மேலாண்மை துறை உள்ளிட்ட பல்வேறு அரசு துறைகளின் சார்பில் 32 பயனாளிகளுக்கு ரூ 2.03 கோடி மதிப்பில் நலத்திட்ட உதவிகளை வழங்கினார் .
தொடர்ந்து மாவட்டத்தில் சிறப்பாக பணியாற்றிய 364 அரசு அலுவலர்கள் மற்றும் ஊழியர்களுக்கு பாராட்டு சான்றிதழ்களை வழங்கினார். இதையடுத்து பள்ளி மாணவ- மாணவிகளின் பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
திருச்சியில்...
சுதந்திர தினத்தை ஒட்டி திருச்சியின் முக்கிய அரசு கட்டிடங்கள் அனைத்தும் தேசியக் கொடியின் மூவர்ணத்தை பிரதிபலிக்கும் மின் விளக்குகளால் பிரகாசமாக அலங்கரிக்கப்பட்டன.
மாவட்ட கலெக்டர் அலுவலகம், தலைமை தபால் நிலையம், திருச்சி ரயில் நிலையம் உள்ளிட்ட முக்கிய அடையாளக் கட்டிடங்கள், மாலையிலிருந்து மின்னும் மூவண்ண ஒளியால் கண்கவர் தோற்றமளித்தன. பொதுமக்கள், பண்டிகை போல் மிளிரும் இந்த ஒளி அலங்காரங்களை ரசித்து, புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை சமூக வலைதளங்களில் பகிர்ந்து மகிழ்ந்தனர்.
தேசப்பற்று உணர்வையும் தேசிய ஒற்றுமையையும் ஊட்டும் இந்த வண்ணமயமான அலங்காரங்கள், திருச்சியின் சுதந்திர தின கொண்டாட்டத்திற்கு சிறப்பூட்டின.
அரியலூரில்...
அரியலூர் மாவட்ட விளையாட்டு அரங்கில் மாவட்ட கலெக்டர் ரத்தினசாமி தேசியக் கொடியேற்றி வைத்து மரியாதை செய்தார்.
பின்னர் திறந்த ஜீப்பில் மாவட்ட கலெக்டர் ரத்தினசாமி மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆகியோர் சென்று காவலர்களின் அணிவகுப்பு மரியாதையை பார்வையிட்டு, காவலர்கள் அளித்த அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டனர். பின்னர் உலகெங்கும் சமாதானம் நிலவ வேண்டும் என்பதை வலியுறுத்த வகையில் வெள்ளை புறாக்களை பறக்க விட்டும் இந்திய தேசிய கொடியின் மூவர்ண நிறத்தைக் குறிக்கும் வகையில் பலூன்களை மாவட்ட கலெக்டர் மற்றும் காவல் கண்காணிப்பாளர் பறக்க விட்டனர்.
இதனையடுத்து சிறப்பாக பணிபுரிந்த 200 அரசு அலுவலர்கள், காவலர்கள் மற்றும் ஊழியர்களுக்கு பாராட்டு சான்றிதழ்களை மாவட்ட ஆட்சியர் இரத்தினசாமி வழங்கினார். இதன் பின்னர் 53 பயனாளிகளுக்கு 2 கோடியே 63 லட்சத்து 69 ஆயிரத்து 733 ரூபாய் மதிப்புள்ள நலத்திட்ட உதவிகளை மாவட்ட கலெக்டர் ரத்தினசாமி வழங்கினார். விழாவில் தேசியப்பற்றை விளக்கும் வகையில் பள்ளி மாணவ, மாணவியர்களின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. மேலும் சுதந்திர தினத்தை கொண்டாடும் வகையில் அரியலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகம் முழுதும், மூவர்ண கொடியினை குறிக்கும் வகையில் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தது பொதுமக்களை மிகவும் கவர்ந்தது.





















