இறப்பிலும் ஒன்றிணைந்த கணவன், மனைவி - மயிலாடுதுறையில் நெகிழ்ச்சி
மயிலாடுதுறையில் மனைவி இறந்த இரண்டு தினங்களில் கணவரும் உயிரிழந்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மயிலாடுதுறை மாவட்டம் திருஇந்தளூர் பகுதியைச் சேர்ந்தவர் கண்ணன். 1915ஆம் ஆண்டு பிறந்தவர் இவருக்கு தற்போது 108 வயது ஆகிறது. இந்தநிலையில் கண்ணன் நேற்று இரவு திடீரென உயிரிழந்தார். இவரது மனைவி பழனியம்மாள், 85 வயதான இவர் கடந்த புதன்கிழமை இரவு உடல் நலக்குறைவால் காலமான நிலையில், கண்ணன் இரண்டு தினங்களாக படுக்கையில் படுத்தபடி சோகமாக உணவு சரியாக அருந்தாமல் இருந்திருக்கிறார். இந்நிலையில் நேற்று இரவு மனைவியை தொடர்ந்து இவரும் இயற்கை எய்தினார்.
1953 -ஆம் ஆண்டு கண்ணன்- பழனியம்மாள் தம்பதிக்கு திருமணம் நடைபெற்று நான்கு பெண் பிள்ளை, இரு ஆண் மகன் என்று ஆறு பிள்ளைகளும், 15 பேரக்குழந்தைகள் 8 கொள்ளு பேரன்கள் என்று ஆலமர விருட்சமாய் இவர்களது குடும்பம் வளர்ந்தது. அறுபதாம் திருமணம், 80 ஆம் திருமணம் என்று விமரிசையாக கொண்டாடி வந்த இந்த ஜோடி மிகவும் அன்னியோன்யமாக இருந்து வந்ததாகவும், இருவருக்கும் மன வருத்தங்கள் இன்றி ஜோடி புறா போன்று வாழ்ந்து வந்ததாகவும் இவரது உறவினர்கள் தெரிவிக்கின்றனர்.
கணவன், மனைவி இருவரும் ஒருவர் மீது ஒருவர் மிகுந்த அன்புடனும், அதீத பாசத்துடனும் இருந்து வந்துள்ளனர். திருமண ஆன நாள் முதல் இதுவரை 65 ஆண்டுகளாக இருவருக்கும் இடையே பெரிய அளவில் சண்டை சச்சரவுகள் ஏதும் வந்தது கிடையாது என அவரது உறவினர்கள் தெரிவிக்கின்றனர். அந்த அளவுக்கு இணைபிரியாத தம்பதிகளாக வாழ்ந்து வந்துள்ளனர். தன்னுடன் குடும்பம் நடத்தி வந்த தனது மனைவி பிரிந்த துக்கம் தாங்காமல் அவரது கணவர் கண்ணன் தற்போது உயிரிழந்துள்ளார். மனைவி இறந்த துக்கத்தில் இரண்டே நாட்களில் 108 வயது முதியவரும் மரணமடைந்த செய்தி கேட்டு உறவினர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இச்சம்பவம் மயிலாடுதுறை பகுதியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.