மிகச் சிறப்பு வாய்ந்த புதன் பிரதோஷத்தில் தஞ்சை பெரிய கோயிலில் வழிபாடு நடத்த உள்ள கவர்னர் ஆர்.என்.ரவி
விநாயகர், பெருமாள், சிவனுக்கு உகந்த புதன் நாளில் வரும் பிரதோஷத்தில் கவர்னர் ஆர்.என்.ரவி, உலக புகழ்பெற்ற பெரிய கோயிலில் பிரதோஷத்திற்காக பங்கேற்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
தஞ்சாவூர்: தஞ்சாவூருக்கு இன்று (13ம் தேதி) தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி வருகை புரிகிறார். இதற்காக பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி இன்று (புதன்கிழமை) தஞ்சாவூருக்கு வருகிறார். இதற்காக சென்னையில் இருந்து காலை விமானம் மூலம் திருச்சிக்கு வருகிறார். பின்னர் அவர் அங்கிருந்து சாலை மார்க்கமாக காரில் தஞ்சாவூருக்கு வருகிறார். தொடர்ந்து தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி மதியம் 12 மணியளவில் தஞ்சை சரஸ்வதி மகாலுக்கு செல்கிறார். அங்கு ஓலைச்சுவடிகள், அருங்காட்சியகத்தை பார்வையிடுகிறார்.
இதையடுத்து அங்கிருந்து புறப்பட்டு தஞ்சை சுற்றுலா மாளிகைக்கு செல்கிறார். அங்கு மதிய உணவு சாப்பிட்டு விட்டு சிறிது நேரம் ஓய்வு எடுக்கிறார். பின்னர் மாலை 4 மணி அளவில் தஞ்சை பெரிய கோயிலில் நடக்கும் பிரதோஷ விழாவில் பங்கேற்கிறார். அங்கு சிறப்பு வழிபாடுகளில் பங்கேற்ற பின்னர் காரில் புறப்பட்டு மீண்டும் சுற்றுலா மாளிகைக்கு வருகிறார்.
தொடர்ந்து சிறிது நேரம் ஓய்வெடுத்து விட்டு காரில் புறப்பட்டு திருச்சி செல்லும் அவர் அங்கிருந்து விமானம் மூலம் சென்னைக்கு செல்கிறார். தஞ்சைக்கு கவர்னர் வருகையை முன்னிட்டு சரஸ்வதி மகால், சுற்றுலா மாளிகை சாலை, பெரிய கோயில் உட்பட பல்வேறு பகுதிகளிலும் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
ஒவ்வொரு கிழமையிலும் வரும் பிரதோஷத்திற்கு ஒரு தனிச்சிறப்பு உண்டு. நாளை புதன்கிழமையில் வரும் பிரதோஷமாகும். புதன்கிழமை என்பது புதன் பகவானுக்குரிய நாளாகும். இவரே கலைகள், ஞானம், புத்திகூர்மை ஆகியவற்றிற்கு காரணமாக கிரகம் ஆவார். இவரது அதிதேவதை பெருமாள் என்பதால் தான் புதன்கிழமை பெருமாள் வழிபாட்டிற்கு உரிய நாளாகவும் சொல்லப்படுகிறது.
அதே போல் புதன்கிழமை, ஞானமுதல்வனான விநாயகப் பெருமானின் வழிபாட்டிற்கும் ஏற்ற நாளாகும். பெருமாளுக்கும், விநாயகருக்கும் உரிய நாளில் சிவ பெருமானுக்குரிய வழிபாட்டு நாளான பிரதோஷம் அமைவது மிகவும் சிறப்பானதாகும். இந்த நாளில் கவர்னர் ஆர்.என்.ரவி, உலக புகழ்பெற்ற பெரிய கோயிலில் பிரதோஷத்திற்காக பங்கேற்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
சென்னை தொலைக்காட்சி நிலையத்தின் பொன்விழா மற்றும் ‘இந்தி மாத’ நிறைவு விழா நிகழ்ச்சியில் கடந்த அக்டோபர் மாதம் நடந்தது. இந்த விழாவுக்கு தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி தலைமை தாங்கினார். இந்த விழாவில் இசைக்கப்பட்ட தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடல் பாடியபோது, ‘தெக்கணமும் அதிற்சிறந்த திராவிட நல் திருநாடும்’ என்ற வரிகள் மட்டும் பாடப்படவில்லை. இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. தமிழகத் தலைவர்கள் பலரும் கண்டனம் தெரிவித்தனர்.
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது சமூக வலைதளப் பக்கத்தில், “ஆளுநரா? ஆரியநரா? திராவிடம் என்ற சொல்லை நீக்கி, தமிழ்த்தாய் வாழ்த்தைப் பாடுவது தமிழகத்தின் சட்டத்தை மீறுவதாகும். சட்டப்படி நடக்காமல், இஷ்டப்படி நடப்பவர் அந்தப் பதவி வகிக்கவே தகுதியற்றவர். இந்தியைக் கொண்டாடும் போர்வையில் நாட்டின் ஒருமைப்பாட்டையும் இந்த மண்ணில் வாழும் பல்வேறு இன மக்களையும் இழிவுபடுத்துகிறார் ஆளுநர் என்று தன் கண்டனத்தை பதிவு செய்தார்.
இந்த சம்பவத்திற்கு பின்னர் 2 நாளில் தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் நடந்த பட்டமளிப்பு விழாவில் தமிழக கவர்னர் பங்கேற்றார். அப்போது விழாவில் இணை வேந்தராக உள்ள தமிழக அமைச்சர் பங்கேற்கவில்லை. அன்றைய விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்து முழுமையாக பாடப்பட்டது. அதற்கு பிறகு நாளை தஞ்சைக்கு வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்க ஒன்று.