தஞ்சை அருகே எதிரில் வந்த லாரிக்கு வழிவிட ஒதுங்கியபோது அரசு பஸ் கவிழ்ந்து விபத்து - 10 பேர் காயம்
தஞ்சை நோக்கி வந்த அரசு பேருந்து செக் போஸ்ட் அருகில் எதிரில் வந்த லாரிக்கு வழி விடுவதற்காக ஒதுங்கும் போது நிலைதடுமாறி சாலையோரம் கவிழ்ந்தது
திருச்செந்தூரில் இருந்து தஞ்சை நோக்கி வந்த அரசு பேருந்து திருக்கானூர்பட்டி சாலை அற்புதாபுரம் செக் போஸ்ட் அருகில் எதிரில் வந்த லாரிக்கு வழி விடுவதற்காக ஒதுங்கும் போது நிலைதடுமாறி சாலையோரம் கவிழ்ந்தது. இதில் 10 பேர் காயமடைந்தனர். பஸ்சை கண்டக்டர் ஓட்டி வந்ததாக கூறப்படுகிறது.
திருச்செந்தூரில் இருந்து தஞ்சை நோக்கி அரசு பஸ் ஒன்று வந்து கொண்டிருந்தது. பஸ்சை டிரைவர் நன்னிலம் பகுதியை சேர்ந்த சிவா (38) என்பவர் ஓட்டி வந்தார். அம்மாப்பேட்டையை சேர்ந்த பாலமுருகன் (42) கண்டக்டர் பணியில் இருந்தார். இந்நிலையில் அதிகாலை 5 மணியளவில் தஞ்சை அருகே திருக்கானூர்பட்டி சாலை அற்புதாபுரம் செக்போஸ்ட் அருகில் எதிரில் வந்த லாரிக்கு வழிவிடுவதற்காக பஸ் சாலையோரம் ஒதுங்கியபோது நிலைதடுமாறி ஒருபக்கமாக கவிழ்ந்தது. இதனால் பஸ்சில் பயணம் செய்தவர்கள் கத்தினார்.
பயணிகள் அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் ஓடிவந்தனர். உடன் வல்லம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த வல்லம் போலீசார் லேசாக காயமடைந்திருந்த டிரைவர் சிவா, கண்டக்டர் பாலமுருகன் மற்றும் தஞ்சை பகுதியை சேர்ந்த வெங்கடேஷ், பாலா, சுப்பிரமணியம், மணிராஜ், கிருத்திகா உட்பட 10 பேரை சிகிச்சைக்காக தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் இதுகுறித்து போலீசார் மேற்கொண்ட விசாரணையில் பஸ்சை டிரைவர் மற்றும் கண்டக்டர் இருவரும் மாறி மாறி ஓட்டி வந்துள்ளனர். விபத்து நடந்த போது கண்டக்டர் பாலமுருகன் பஸ்சை இயக்கியதாக கூறப்படுகிறது. தொடர்ந்து மீட்பு வாகனம் வந்து பஸ்சை மீட்டு சென்றது. இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. காயமடைந்தவர்களில் சிலர் அவுட்பேஷண்ட்டாக சிகிச்சை பெற்று வீட்டுக்கு திரும்பினர் என்று போலீசார் தரப்பில் தெரிவித்தனர். நேற்று முழுவதும் மழை பெய்து கொண்டே இருந்ததால் சாலையோரம் பஸ் இறங்கியபோது நிலை தடுமாறி விபத்து ஏற்பட்டு இருக்கலாம் என்று தெரிவிக்கப்படுகிறது.
பைக்கை திருட முயன்ற வாலிபர் சிக்கினார்
தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை அருகே ஆலடிக்குமுளை சமத்துவபுரம் பகுதியை சேர்ந்தவர் சுந்தரம். இவரது மகன் ராமதாஸ் (33) இவர் ஆலடிக்குமுளை குளக்கரையில் தனது பைக்கை நிறுத்திவிட்டு சென்றார். மீண்டும் திரும்பி வந்து பார்த்தபோது தனது பைக்கை ஒரு வாலிபர் எடுத்துச் செல்ல முயன்றதை பார்த்து அதிர்ச்சியடைந்து கத்தினார். தொடர்ந்து அக்கம்பக்கத்தினர் உதவியுடன் அந்த வாலிபரை மடக்கி பிடித்து பட்டுக்கோட்டை தாலுகா போலீசில் ஒப்படைத்தார்.
அந்த வாலிபரிடம் பட்டுக்கோட்டை போலீசார் நடத்திய விசாரணையில், அவர் பட்டுக்கோட்டை சுண்ணாம்புக்கார தெருவை சேர்ந்த ராமன் மகன் விக்கி என்ற கலியபெருமாள் (24) என தெரிய வந்தது. இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து கலியபெருமாளை கைது செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.