”ராக்கெட் போல் உச்சத்திற்கு சென்ற விலை - குடும்பத் தலைவிகள் வேதனை” இதுதான் காரணமா..?
"நசுக்கிய பூண்டுச் சாறு ஒரு டீஸ்பூன் தவறாமல் உட்கொள்வது இதய நோய் அபாயத்தை நீக்குகிறது"
தஞ்சாவூர்: வரத்து குறைஞ்சு போச்சு... விலை எகிறி போச்சு... என்று குடும்பத் தலைவிகள் வேதனைப்படறாங்க. எதற்கு தெரியுங்களா?
சமையலில் முக்கிய இடம் பிடிக்கும் பூண்டு
சமையல் அறையில் மிக முக்கியமான பொருள். அன்றாட சமையலில் பயன்படுத்தப்படும் விளை பொருட்களில் முக்கிய உணவாக தொடர்ந்து நீடிப்பது பூண்டு. குறிப்பாக, அசைவ உணவு தயாரிப்பிலும் பூண்டின் முக்கியத்துவம் குறித்து சொல்லிக் கொண்டே போகலாம். அந்த அளவிற்கு அதனுடைய பயன்பாடு மக்களிடையே உள்ளது. சைவ உணவுகளிலும் பூண்டு அதிகளவில் பயன் படுத்தப்படுகிறது.
தமிழகத்தில் நீலகிரி, திண்டுக்கல் மாவட்டங்களில் பூண்டு பயிரிடப்பட்டாலும், மாநிலத்தின் பெரும்பாலான தேவையை பூர்த்தி செய்வதற்கு, பிற மாநிலங்களில் இருந்து பூண்டு இறக்குமதி செய்யப்படுகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது. அதிலும் குறிப்பாக இமாச்சல பிரதேசம், மராட்டியம், குஜராத் உள்ளிட்ட வட மாநிலங்களில் அதிகளவில் பூண்டு சாகுபடி செய்யப்படுகிறது. இங்கிருந்து கொள்முதல் செய்யப்படும் பூண்டு நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கும் அனுப்பி வைக்கப்படும்.
எக்கச்சக்கமான மருத்துவக்குணங்கள் நிரம்பிய பூண்டு
பூண்டில் ஏராளமான மருத்துவ குணங்கள் உள்ளன. இவற்றில் இருக்கும் ஆக்ஸிஜனேற்ற பண்பின் காரணமாக உடலில் உள்ள கொழுப்பின் அளவை கட்டுப்படுத்துவதோடு, ரத்த அழுத்தம், சர்க்கரை நோய் போன்றவற்றை குணப்படுத்த உதவுகிறது.
நசுக்கிய பூண்டு ஒரு டீஸ்பூன் தவறாமல் உட்கொள்வது இதய நோய் அபாயத்தை நீக்குகிறது. காலையில், வெதுவெதுப்பான நீரில் இரண்டு பல் பூண்டு மற்றும் சிறிது எலுமிச்சை சாறு சேர்த்து குடிக்கவும். இது நம் உடலில் உள்ள இரத்தத்தை சுத்தப்படுத்த உதவுகிறது. பல்வலி உள்ளவர்கள் ஒரு பல் பூண்டை நறுக்கி வலிமிகுந்த பல்லின் கீழ் வைத்தால் பல்வலியில் இருந்து விடுபடலாம்.
வெண்ணெயுடன் பூண்டை வறுத்து சாப்பிடுவது மூல நோய்க்கு நல்லது. தோல் பராமரிப்பு மற்றும் முடி பராமரிப்புக்கு பூண்டு முக்கியம். இதன் பயன்பாடு முடி உதிர்தலை நீக்குகிறது. இத்தகைய முக்கியத்துவம் வாய்ந்த பூண்டு விலை அப்பப்போ எகிறும், குறையும், கடந்த ஒரு மாதமாகவே சராசரியாகவும், விலை குறைந்தும் இருந்தது பூண்டு இப்போ ஜிவ்வுன்னு உயர்ந்திடுச்சு.
காமராஜர் மார்க்கெட்டுக்கு வரத்து குறைந்தது
தஞ்சை அரண்மனை வளாகத்தில் காமராஜர் மார்க்கெட் செயல்பட்டு வருகிறது. இந்த மார்க்கெட்டுக்கு கடந்த ஆண்டு வரத்து அதிகரிப்பினால் நாள் ஒன்றுக்கு 12 டன் முதல் 15 டன் வரை பூண்டு விற்பனைக்காக இருந்தது. இந்த நிலையில் கடந்த ஜனவரி மாதத்திற்கு பிறகு அதன் விலை ஏறுமுகமாகி உச்சத்தில் நீடித்தது. இதனால் பூண்டு விலை ரூபாய் 400 முதல் 450 வரை விற்பனை செய்யப்பட்டது. பின்னர் வரத்து சற்று அதிகரித்ததால் சில நாட்கள் நாட்டு பூண்டு மற்றும் மலைப்பூண்டின் விலை ரூபாய் 240 முதல் 260 வரை விற்பனையானது. அதற்கு பிறகு பூண்டு விலை குறைந்தது. ரூ.180 வரை விற்பனையானது. இதனால் குடும்பத்தலைவிகள் மகிழ்ச்சி அடைந்தது வந்தனர்.
ராக்கெட் போல் உச்சத்திற்கு போகுது விலை
இந்நிலையில் கிடுகிடுவென்று மீண்டும் கடந்த ஜனவரி மாதத்தில் விற்றது போல் விலை உயர்ந்துள்ளது. சில்லறை கடைகளில் கிலோ ரூ.400 முதல் 440 வரையிலும் மொத்த கடைகளில் பூண்டு விலை கிலோ 340 முதல் 360 வரையிலும் விற்கப்படுகிறது. ஆரோக்கியத்தை அள்ளித்தரும் பூண்டு இப்படி கிடுகிடுன்னு ராக்கெட் போல் விலை உச்சத்திற்கு போய் உள்ளது நடுத்தர குடும்ப தலைவிகளுக்கு வேதனையை ஏற்படுத்தி உள்ளது.
இதுகுறித்து பூண்டு வியாபாரிகள் தரப்பில் கூறுகையில், வட மாநிலங்களின் வரத்து குறைவு ஏற்படுவது அவ்வபோது நடக்கும் நிகழ்வுதான். இதனால் பூண்டின் விலை அதிகரித்து காணப்படுகிறது. மேலும் இந்த விலை உயர்வு வரும் ஜனவரி மாதம் வரை இதே விலையில் நீடிக்கும். விளைச்சல் குறைவினால் தற்போது தஞ்சைக்கு பெருமளவு வரத்து குறைந்து ஐந்து முதல் ஏழு டன் வரை மட்டுமே வருகிறது.
வழக்கமாக ஒரு வாரத்திற்கு தேவையான பூண்டினை கிலோ கணக்கில் வாங்கிச் சென்ற பொதுமக்கள் தற்போது விலை அதிகரிப்பால் குறைந்த அளவில் வாங்கி செல்கின்றனர் என்றனர்.