(Source: ECI/ABP News/ABP Majha)
Sirkali: 31 ஆண்டுகளுக்கு பின்னர் சந்திப்பு... பாசத்தை பொங்கிய முன்னாள் கல்லூரி மாணவர்கள்! - சீர்காழியில் நெகிழ்ச்சி!
சீர்காழி அருகே புத்தூர் அரசு தொழில்நுட்ப கல்லூரியில் 31 ஆண்டுகளுக்குப் பிறகு முன்னாள் மாணவர்கள் சந்திக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே புத்தூர் சீனிவாசா சுப்பராயா அரசு தொழில்நுட்பக் கல்லூரி இயங்கி வருகிறது. பழமையான இந்த கல்லூரியில் கடந்த 1989 -ஆம் ஆண்டிலிருந்து 1992 -ஆம் ஆண்டு வரை கட்டடவியல், மின்னியல், மின்ணணுவியல், இயந்திரவியல் ஆகிய பாடப்பிரிவுகளில் மயிலாடுதுறை, கும்பகோணம், தஞ்சாவூர், திருச்சி, மதுரை, சேலம், திண்டுக்கல், கடலூர், நாகப்பட்டினம், விழுப்புரம் உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலிருந்தும் வந்து இங்கு கல்வி பயின்று பிறகு ஒவ்வொருவரும் தமிழ்நாடு, வெளி மாநிலங்கள் மற்றும் வெளி நாடுகளிலும் சென்று வேலை பார்த்து வருகின்றனர்.
அதில் பலர் சிறந்த வல்லுனர்களாகவும், விஞ்ஞானிகளாகவும், உயர் பதவிகளிலும், அரசு பதவிகளிலும் இருந்து வருகின்றனர். கடந்த 1992 -ஆம் ஆண்டு இம்மாணவ மாணவிகள் படிப்புகளை முடித்துவிட்டு கல்லூரியை விட்டு வெளியே சென்றுள்ளனர். இந்நிலையில் 31 -ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் இதே கல்லூரியில் தாங்கள் படித்த வகுப்பறையிலேயே சந்திக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் கல்லூரி முதல்வர் முனைவர் குமார், துணை முதல்வர் ஆரோக்கியராஜ், முன்னாள் முதல்வர் தங்கமணி முன்னிலையில் 1989 - 1992 ஆம் ஆண்டு பயிற்றுவித்த பேராசிரியர்கள் சிறப்பு அழைப்பாளர்களாக பங்கேற்றனர்.
முன்னாள் மாணவர்கள் பயின்ற விதம் பிறகு படிப்படியாக முன்னேறி வெளியூர்களுக்கு சென்று திறம்பட வாழ்க்கையை நடத்தி வருகின்ற விதம் குறித்தும் ஒவ்வொருவரின் வாழ்க்கை அனுபவங்கள் குறித்தும் கருத்துக்களை நெகிழ்ச்சியுடன் எடுத்துக் கூறினர். தாங்கள் படித்த வகுப்பறையில் நிகழ்வுகளை நடத்தி நினைவு பரிசுகளையும் வழங்கினர். இதில் வெளிநாடுகளில் இருந்து வரமுடியாத முன்னாள் மாணவர்கள் ஜூம் மீட் மூலம் இணைந்து தங்களது பசுமையான நினைவுகளை பகிரிந்துக்கொண்டனர்.
முன்னாள் மாணவ மாணவிகள் 31 ஆண்டுகளுக்குப் பிறகு சந்தித்து ஒருவருக்கொருவர் கருத்துக்களையும், அனுபவங்களையும் எடுத்துக் கூறியது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது. 31 ஆண்டுகளுக்குப் பிறகு சந்தித்த தங்கள் நண்பர்களின் அருகில் அமர்ந்து சந்தோஷத்தில் மூழ்கினர். மேலும் தாங்கள் படித்த கல்லூரிக்கு தங்களது பங்களிப்பாக மாணவர்கள் இணைந்து 2.30 லட்சம் ரூபாய் செலவில் 5 குளிர்சாதன பெட்டிகளை கருத்தரங்கத்திற்கு அமைத்துக்கொடுத்து மகிழ்ந்தனர்.
மேலும் பல சுவாரஸ்யமான செய்திகளை காண :
Follow @ Google News : கூகுள் செய்திகள் பக்கத்தில் ABP நாடு செய்திகளை உடனுக்குடன் பெற