முதல்ல அட்வைஸ்... அடுத்தது ஃபைன்; அதிரடி காட்டும் தஞ்சை போக்குவரத்து போலீசார்
தஞ்சை மாவட்டத்தில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் போக்குவரத்து போலீசார் இதுபோன்ற நிகழ்ச்சிகளை மேற்கொள்கின்றனர்.
தஞ்சாவூர்: தஞ்சாவூரில் போக்குவரத்து போலீசார் சார்பில் ஹெல்மேட் அணியாமல் வாகனம் ஓட்டி வந்தவர்களுக்கு அறிவுரை கூறியதோடு, ஹெல்மேட் அணிந்து வாகனம் ஓட்டுவேன் என உறுதிமொழியும் மேற்கொள்ள செய்தனர்.
தஞ்சை மாவட்டத்தில் இருசக்கர வாகனத்தில் செல்பவர்கள் கட்டாயம் தலைகவசம் அணிந்து செல்ல வேண்டும் என்ற போக்குவரத்து விதிமுறை அமல்படுத்தப்பட்டு தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது.
தலைகவசம் அணியாமல் வாகனம் ஓட்டுபவர்களுக்கு போலீசார் அபராதமும் விதித்து வருகிறார்கள். மேலும் தலைகவசம் அணியாமல் இருசக்கர வாகனங்களில் சென்று விபத்துக்குள்ளாகி உயிரிழப்பும் ஏற்படுகிறது. இதனை தடுக்கும் வகையில் விழிப்புணர்வு நிகழ்ச்சிகளும் நடத்தப்பட்டு வருகின்றன.
அதன்படி தஞ்சை மாநகர போக்குவரத்து போலீசார் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறர்கள். அதன்படி தஞ்சை பழைய பஸ் நிலையம் அண்ணா சிலை அருகே தலைகவசம் அணியாமல் வாகனம் ஓட்டி வந்தவர்களுக்கு அறிவுரை கூறியதோடு, தலைகவசம் அணிந்து வாகனம் ஓட்டுவேன் என உறுதிமொழியும் மேற்கொள்ள செய்தனர்.
இதையடுத்து தஞ்சை அண்ணாநகர் பகுதியில் நாடகம் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தினர். நிகழ்ச்சிக்கு போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் தலைமை வகித்தார். சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர்கள் குணசேகரன், ரமேஷ்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
தலைக்கவசம் உயிர்கவசம் என்ற தலைப்பில் நடந்த விழிப்புணர்வு நாடகத்தில், மது அருந்தி விட்டு வாகனம் ஓட்டுவது, ஹெல்மெட் அணியாமல் வாகனம் ஓட்டுவது, அவ்வாறு ஓட்டினால் உயிரிழப்பு எவ்வாறு ஏற்படுகிறது என்பதை போலீசார் தத்ரூபமாக நடித்து காட்டினர். மேலும் தலைகவசம் வைத்துக்கொண்டு அணியாமல் வாகனங்களில் தொங்க விட்டபடி செல்லக்கூடாது, தலைகவசம் அணிந்து தான் பயணிக்க வேண்டும் என்பது குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தினர். இதனை ஏராளமான பொதுமக்கள் கண்டு களித்தனர்.
தொடர்ந்து பொதுமக்கள் தரப்பில் கூறுகையில், தமிழகத்தில் இயக்கப்படும் வாகனங்களின் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்து கொண்டே செல்கிறது. இதேபோல மறுபுறம் வாகன விபத்துகளும் அதிகரிக்கின்றன. இதனால் பலர் உயிரிழந்து வருகின்றனர்.
குறிப்பாக இருசக்கர வாகன ஓட்டிகள் ஹெல்மெட் அணியாமல் செல்வதே உயிரிழப்புக்கு காரணமாக உள்ளது. இதனால் இருசக்கர வாகனத்தை ஓட்டி செல்பவரும், பின்னால் அமர்ந்து இருப்பவரும் கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டும் என்று ஏற்கனவே உத்தரவிடப்பட்டது. இந்நிலையில் தஞ்சை மாவட்டத்தில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் போக்குவரத்து போலீசார் இதுபோன்ற நிகழ்ச்சிகளை மேற்கொள்கின்றனர். வாகனம் ஓட்டுபவர்கள் தங்களுக்கும் ஒரு குடும்பம் இருப்பதை உணர்ந்து செயல்பட வேண்டும் என்பதற்காகதான் இதுபோன்ற விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்படுகிறது. இது மிகவும் பயனுள்ளதாக அமைந்தது. மது அருந்திவிட்டு ஓட்டுபவர்கள் மத்தியிலும் விழிப்புணர்வை ஏற்படுத்தி உள்ளது இந்த நிகழ்ச்சி என்று தெரிவித்தனர்.