தந்தையின் வெறிச் செயல்... 3 குழந்தைகள் கழுத்தறுத்து படுகொலை: தஞ்சை அருகே பயங்கரம்
செல்போன் என்ற அசுரன் வாயிலாக பிரச்னை எழுந்துள்ளது. வினோத்குமார் மனைவி நித்யாவுக்கு சமூக வலைதளங்களில் ஆர்வம் அதிகம் என்று கூறப்படுகிறது. இதனால் குடும்பத்தில் பிரச்னை ஏற்பட்டு வந்துள்ளது.

தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டம் மதுக்கூர் அருகே மனைவி மற்றொரு நபருடன் சென்ற ஆத்திரத்தில் தன் 3 குழந்தைகளையும் கழுத்தறுத்து படுகொலை செய்த தந்தை போலீசில் சரண் அடைந்தார். இந்த சம்பவம் தஞ்சை மாவட்டத்தையே உலுக்கியுள்ளது.
தஞ்சாவூர் மாவட்டம் மதுக்கூர் அருகே கோபாலசமுத்திரம் பகுதியை சேர்ந்த சாம்பசிவம் என்பவரின் மகன் வினோத்குமார் (38). இவர் மதுக்கூர் பகுதியில் ஹோட்டலில் சர்வராக வேலை பார்த்து வந்தார். இவரது மனைவி நித்யா (35). இவர்களுக்கு ஓவியா (12), கீர்த்தி (8), என்ற மகள்களும், ஈஸ்வரன் (5), என்ற மகனும் இருந்தனர். ஓவியா ஆறாம் வகுப்பும், கீர்த்தி மூன்றாம் வகுப்பும் படித்து வந்தனர்.

குடும்ப வாழ்க்கை நன்றாக சென்று கொண்டு இருந்த நிலையில் செல்போன் என்ற அசுரன் வாயிலாக பிரச்னை எழுந்துள்ளது. வினோத்குமார் மனைவி நித்யாவுக்கு சமூக வலைதளங்களில் ஆர்வம் அதிகம் என்று கூறப்படுகிறது. இதனால் அடிக்கடி வினோத்குமாருக்கும், நித்யாவுக்கும் பிரச்னை ஏற்பட்டு வந்துள்ளது.
இந்நிலையில் நித்யாவுக்கு சமூக வலைதளம் வாயிலாக திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியை சேர்ந்த ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. நாளடைவில் இது வினோத்குமார் குடும்பத்தில் பெரும் பூகம்பத்தையே ஏற்படுத்தி உள்ளது. சமூக வலைதளத்தில் ஏற்பட்ட பழக்கம் கள்ளக்காதலாக மாற கடந்த ஆறு மாதத்திற்கு முன்பு, கணவர் மற்றும் குழந்தைகளை விட்டு பிரிந்து மன்னார்குடியை சேர்ந்த அந்த நபருடன் நித்யா சென்று விட்டாராம். இது மிகப்பெரிய அளவில் வினோத்குமாரை பாதித்துள்ளது.
இதனால், மதுபோதைக்கு வினோத்குமார் அடிமையாகி உள்ளார். மேலும் தனது மூன்று குழந்தைகளையும் வெறுத்து அவர்களை அடிக்கடி திட்டியும், அடித்தும் வந்துள்ளதாக கூறப்படுகிறது. தங்களை சுற்றி என்ன நடக்கிறது என்றே தெரியாத நிலையில் தந்தையின் கோபத்திற்கு உள்ளாகி வந்துள்ளனர் அந்த மூன்று குழந்தைகளும்.
இந்நிலையில் இன்று இரவு 7 மணியளவில் குடிபோதையில் வினோத்குமார் வீட்டிற்கு வந்துள்ளார். பின்னது தனது மகள்கள் ஓவியா, கீர்த்தி ஆகியோரை வீட்டில் இருந்து வெளியே சென்று விளையாடுங்கள் என்று தெரிவித்துள்ளார். மேலும் தண்ணீர் எடுத்து வரவும் கூறியுள்ளார்.
பிறகு தனது மகன் ஈஸ்வரனை தூக்கி கொஞ்சுவது போல் நடித்துள்ளார். வினோத்குமார். பின்னர் தான் மறைத்து வைத்திருந்த அரிவாளால் குழந்தை ஈஸ்வரனை கழுத்தை அறுத்து கொலை செய்துள்ளார். இதில் ரத்தவெள்ளத்தில் துடித்து குழந்தை இறந்துள்ளது. பின்னர் வெளியில் சென்ற தனது இரண்டு மகளையும் வீட்டிற்கு உள்ளே அழைத்து அடுத்தடுத்து கழுத்தை அறுத்து வெறித்தனமாக கொடூரமாக கொலை செய்துள்ளார். இதனால் வீடு முழுவதும் ரத்தவெள்ளம் ஏற்பட்டுள்ளது.
இதன்பிறகு வீட்டிலிருந்து புறப்பட்டு மதுக்கூர் போலீசில் வினோத்குமார் சரணடைந்து நடந்த விஷயங்களை தெரிவித்துள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த போலீசார் உடன் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்த 3 குழந்தைகள் உடலையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
தகவல் அறிந்த பட்டுக்கோட்டை டி.எஸ்.பி., ரவிச்சந்திரன் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டார். இதுகுறித்து மதுக்கூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். இந்த கொடூர கொலைகள் குறித்த தகவல் தஞ்சை மாவட்ட மக்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.





















