ஏக்கருக்கு 60 மூட்டைகளை மட்டுமே கொள்முதல் செய்யும் முறையால் விவசாயிகள் அவதி
’’கூடுதலாக அறுவடை செய்யும் நெல்லை, விற்பனை செய்ய முடியாத நிலையில் உள்ள விவசாயிகள், அவற்றை வெளி சந்தையில் மிகவும் குறைவான விலைக்கு விற்பனை செய்யும் சூழலுக்கு தள்ளப்பட்டுள்ளனர்’’
டெல்டா மாவட்டங்களில் விவசாயிகள் காவிரியில் உரிய நேரத்தில் தண்ணீர் திறக்கப்பாடாதது, போதிய மழையின்மை அல்லது அதிகப்படியான மழைப்பொழிவு, நிலத்தடி நீரை பயன்படுத்த முடியாமல் மின்சார பிரச்சனை என பல இன்னலுக்கு மத்தியில் விவசாயம் செய்து வருகின்றனர். அவ்வாறு செய்யப்பட்டு அதற்குரிய பலனை அடையும் நேரத்திலும் அரசு அவர்களுக்கு பல இன்னல்களை வழங்குவதாக மயிலாடுதுறை மாவட்ட விவசாயிகள் குற்றச்சாட்டை தெரிவித்துள்ளனர்.
மயிலாடுதுறை மாவட்டத்தில் நடப்பு பருவத்தில் ஒரு லட்சத்து 65 ஆயிரம் ஏக்கர் நிலப்பரப்பில் விவசாயிகள் சம்பா, தாளடி சாகுபடி செய்துள்ளனர். மார்கழி மாதத்தின் இறுதியில் தொடங்கிய அறுவடை பணிகள் தை மாதத்தில் பெரும்பாலும் நிறைவடைந்தது. விவசாயிகள் அறுவடை செய்த நெல்லை கொள்முதல் செய்ய தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம் சார்பில் மாவட்டம் முழுவதும் கடந்த வெள்ளிக்கிழமை 165 அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களை அரசு திறந்துள்ளது. இவற்றில் சில நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் ஆன்லைனில் ஏற்படும் குறைபாடுகள் காரணமாக செயல்படாமல் உள்ளது.
விவசாயிகள் அறுவடையைத் தொடங்கி பின்னரே கிராம நிர்வாக அலுவலர் சிட்டா, அடங்கலை கையொப்பம் இட்டு, கொள்முதலுக்கான சான்றொப்பம் வழங்குகின்றனர். அறுவடை முடிந்த பின்னர் ஆன்லைனில் பதிவு செய்தால், குறைந்தது 15 நாட்களுக்கு பிறகே விவசாயிகளுக்கு கொள்முதல் தேதி வழங்கப்படுகிறது. இதனால், விவசாயிகள் தாங்கள் அறுவடை செய்த நெல்லை விற்பனை செய்ய ஆன்லைனில் பதிவு செய்து வைத்துவிட்டு, நெல்மூட்டைகளை களம் அல்லது வீட்டில் அடுக்கி வைத்து15 நாட்களுக்கு மேலாக காத்திருக்க வேண்டிய நிலை உள்ளது.
மேலும் தற்போது ஒரு ஏக்கருக்கு 60 மூட்டை நெல் மட்டுமே அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் கொள்முதல் செய்யப்படுகிறது. இதனால் அதைவிட கூடுதலாக அறுவடை செய்யும் நெல்லை, விற்பனை செய்ய முடியாத நிலையில் உள்ள விவசாயிகள், அவற்றை வெளி சந்தையில் மிகவும் குறைவான விலைக்கு விற்பனை செய்யும் சூழலுக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
இந்த ஆண்டு பெய்த மழையில் சிக்கி பல இன்னல்களுக்கு பின்னர் அரும்பாடு பட்டு விளைவித்த நெல்லை அரசு முழுமையாக கொள்முதல் செய்யாமல் விவசாயிகளை வஞ்சிப்பது வேதனை தெரிவித்துள்ள விவசாயிகள், ஏக்கருக்கு அனுமதிக்கப்பட்ட 60 மூட்டை என்ற அளவை விட கூடுதலாக அறுவடையாகும் நெல்லை கொள்முதல் செய்ய அரசு அனுமதிக்க வேண்டும், அறுவடை தொடங்குவதற்கு முன்னதாகவே, கிராம நிர்வாக அலுவலர் சிட்டா, அடங்கலை வழங்கி சான்றொப்பம் வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.