தமிழக முதல்வர் மீது விவசாயிகள் கடும் கோபத்தில் உள்ளனர் - பி.ஆர்.பாண்டியன்
மயிலாடுதுறை மாவட்டத்தில் மழையால் பாதிக்கப்பட்ட 60℅ விவசாயிகளுக்கு இன்னும் இழப்பீடு வழங்கவில்லை என பி.ஆர்.பாண்டியன் தமிழக அரசு மீது குற்றச்சாட்டை தெரிவித்துள்ளார்
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் தமிழக அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழு பொதுச்செயலாளர் பி.ஆர்.பாண்டியன் தலைமையில் விவசாயிகள் கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து அவர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்பொழுது கூறுகையில், "இந்தியாவில் பருவநிலை மாற்றம், வறட்சி, பருவம் தவறிய மழை போன்றவற்றிலிருந்து பாதுகாக்கும் வகையில் காப்பீட்டுத் திட்டம் கொண்டுவரப்பட்டது. ஆனால், விவசாயிகளுக்கு பயனற்ற நிலையிலும், காப்பீட்டு நிறுவனங்களுக்கு சாதகமாகவுமே காப்பீட்டு திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன.
எனவே இதில் மாற்றம் கொண்டுவரப்பட வேண்டும். மயிலாடுதுறை மாவட்டத்தில் கடந்த ஆண்டு பெய்த மழையால் அறுவடைக்கு தயாராக இருந்த பயிர்கள் தரங்கம்பாடி, சீர்காழி வட்டங்களில் முழுவதும் சேதமடைந்தன. இதையடுத்து காப்பீட்டு நிறுவனங்கள் மூலமாக ஏக்கர் ஒன்றுக்கு 8 ஆயிரம் ரூபாய் இழப்பீடு வழங்க கணக்கிடப்பட்டு அதற்குரிய நிதியை மத்திய, மாநில அரசுகள் விடுவித்துள்ளன. ஆனால், இதுவரை 60 சதவீத விவசாயிகளுக்கு இழப்பீட்டுத் தொகை வழங்கப்படவில்லை. இந்த நிலையில் விவசாயிகள் வங்கிகளில் பெற்ற விவசாயக் கடனை தள்ளுபடி செய்ய இதுவரை தமிழக அரசு எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. உடனடியாக விவசாயிகளுக்கு இழப்பீட்டுத் தொகையை வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
விவசாயிகள் பெற்றுள்ள கடனை ரத்து செய்ய தமிழக அரசு முன்வர வேண்டும். இதுகுறித்து அரசின் கவனத்துக்கு கொண்டு செல்லும் வகையில் தமிழக வேளாண்துறை அமைச்சரிடம் விவசாயிகளின் கோரிக்கையை முன் வைத்தால், அதை அவர் குற்றமாக கருதுகிறார். தனிநபர் விமர்சனம் செய்கிறார். விவசாயிகள் முதல்வர் மீது கோபத்தில் உள்ளனர் என்பதை அமைச்சர் எடுத்துக் கூற வேண்டும். நிதி பற்றாக்குறையை காரணம் காட்டி தொடர்ந்து விவசாயிகள் பெற்று வருகிற சலுகைகளை பறிப்பதும், விவசாயிகளின் பாதிப்புகளை மூடி மறைக்க முயற்சிப்பதும் தமிழக அரசுக்கு அவப்பெயரை உருவாக்கும். மயிலாடுதுறை மாவட்டத்தில் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்காக அறிவித்த திட்டங்கள் விவசாயிகளை சென்றடைந்துள்ளதா என்பதை முதல்வர் ஆய்வு செய்ய வேண்டும். இது தொடருமேயானால் தமிழக அரசுக்கு எதிராக மீண்டும் மயிலாடுதுறை மாவட்ட விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபடுவார்கள்.
காப்பீட்டு திட்டத்தில் பிரீமியம் தொகையை செலுத்துகிறபோது, விவசாயிகள் அளிக்கும் சான்றுகளில் தவறுகள் ஏதேனும் இருந்தால், அதனை உடனடியாக திருத்தம் செய்து பிரீமியம் தொகையை பெற்றுக்கொள்ள வேண்டும். ஆனால் இழப்பீட்டு தொகை கொடுக்கும்போது சான்றுகள் தவறாக உள்ளது என்று கூறி இழப்பீட்டு தொகை கொடுக்காமல் நிறுத்தி வைப்பது விவசாயிகளுக்கு பாதிப்பை ஏற்படுத்துகிறது. இது குறித்து அரசு விரிவாக ஆய்வு செய்ய வேண்டும்" என்றார்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்