தமிழகத்தில் போதை பொருட்கள் புழக்கம் அதிகரித்துவிட்டது - பொன்.ராதாகிருஷ்ணன் பேட்டி
’’கடந்த 6 மாதங்களில் போதைப்பொருள் புழக்கம் அதிகமாகியுள்ளது. பள்ளி, கல்லூரியில் படிக்கும் மாணவர்கள் போதைக்கு அடிமையாகக்கூடிய சூழல் உள்ளது’’
தஞ்சாவூரில் பொன். ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களிடம் கூறுகையில், இந்தியாவில் உள்ள விவசாயிகளுடைய வாழ்க்கையில் ஒளியேற்றும் வகையில், அவர்களுடைய வருமானத்தை இரட்டிப்பாக மாற்றுவதற்காக நம் பிரமதர் மோடி தொடர்ந்து முயற்சி செய்து வருகின்றார்கள். நம்முடைய விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்குவதற்கு, குறைந்த செலவில் அதிக லாபம் பெறுவதற்கு, விவசாயம் எப்படி செய்வது என்பது பற்றி ஒரு கல்ந்தாய்வு, மோடி, அமித்ஷா, குஜராத் மாநிலத்தில் முதல்வர், கவர்னர், விவசாய அமைச்சர் ஆகியோர் கலந்து கொண்டுள்ள நிகழ்ச்சி நடைபெறுகிறது. இந்த நிகழ்ச்சியை நாடு முழுவதும் சுமார் 55 ஆயிரம் இடங்களில் நேரடியாக ஒளிப்பரப்பபடுகின்றது.
ஒரு வழக்குப் பதிவு செய்யப்படும் போது, குற்றம் சாட்டப்படுபவர்கள் மீது உடனடியாக, அது குறித்து யோசித்து நடவடிக்கை எடுப்பது காவல் துறையினரின் கடமை. அது செய்யாமல் கிடப்பில் வைத்து கொண்டு, ஏராளமான வழக்குகள் போடும் படியாக ஏற்பாடுகளை செய்து, அதற்பின் கைது நடவடிக்கை எடுத்துள்ளார்கள் என்று சொன்னால், கைது நடவடிக்கை எடுத்தவர்களின் மனதிலேயே, ஏதோ ஒரு பின்னனி இருந்து கொண்டு இருக்கின்றது. அதனுடைய அடிப்படையில் தான் கைது செய்துள்ளார்கள் என கருதுகின்றேன். ஆகையால் தமிழக அரசு இந்த பழிவாங்கம் நடவடிக்கையை நிறுத்தி விடவேண்டும். யார் மேலே வழக்கு பதிவு செய்யப்பட்டாலும் கூட, அதனுடைய உண்மை தன்மையை தெரிந்து கொண்டு உடனடியாகவே நடவடிக்கை எடுக்க வேண்டும். அப்படி இல்லை என்றால், வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும். இந்த செயல் உள்நோக்கத்திற்காக நடந்துள்ளது.
இதைச் செய்யாமல் வாட்டுகிற விதமாக மாரிதாசை பழிவாங்கும் வகையில் செயல்படுகிற அரசு மக்களுக்கானதாகவோ, கருத்து சுதந்திரத்துக்கானதாகவோ இருக்க முடியாது. அதிமுக முன்னாள் அமைச்சர்கள் வீட்டில் இதுவரை ஊழல் தடுப்புப் பிரிவினர் நடத்திய சோதனை மூலம் எத்தனை பேர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது? என்ன வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது? என்பது தெரியவில்லை. இதன் மூலம், ஏதோ ஒரு காலத்தில் பயன்படுத்துவதற்காக வழக்குகளைப் பதிவு செய்து சேர்த்து வருகின்றனர் என்பது தெரிகிறது. அது, தேர்தல் காலமாகவோ அல்லது தேவைப்படும் காலமாகவோ இருக்கலாம்.
தவறு செய்திருந்தால் யாராக இருந்தாலும், முழுமையாக விசாரித்து உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லாவிட்டால் நடவடிக்கையைக் கைவிட வேண்டும். சேர்த்து வைத்து பழிவாங்கினால் கீழ்த்தரமான மனிதனுக்கும், அரசுக்கும் வித்தியாசமில்லாமல் போய்விடும். திமுக அரசு நூறு நாள்களில் 200 வாக்குறுதிகளை நிறைவேற்றி இருக்கிறோம் என விளம்பரம் செய்துள்ளது. ஆனால் எதுவும் செய்யவில்லை. தமிழகத்தில் கடந்த 6 மாதங்களில் போதைப்பொருள் புழக்கம் அதிகமாகியுள்ளது. பள்ளி, கல்லூரியில் படிக்கும் மாணவர்கள் போதைக்கு அடிமையாகக்கூடிய சூழல் உள்ளது. எனவே, உடனடியாக போதை பொருள் விற்பனையைத் தடை செய்து தொடர்புடையவர்களை கைது செய்ய வேண்டும். இதேபோல லாட்டரி விற்பனையையும் தடுக்க வேண்டும் என்றார்.