தஞ்சாவூரில் ஆடுகள், கும்பகோணத்தில் சேவல்கள்: வேட்டையாடும் தெருநாய்களால் மக்கள் அச்சம்
நள்ளிரவு 2 மணியளவில் ஆடுகள் கத்தும் சத்தம்கேட்டு குடும்பத்தினர் வீட்டின் பின்பக்கம் சென்று பார்த்தனர். 8க்கும் மேற்பட்ட தெருநாய்கள் சேர்ந்து ஆடுகளை கடித்து குதறிக் கொண்டு இருப்பதை கண்டனர்.

தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டம் ராமநாதபுரம் ஊராட்சியில் தெருநாய் கூட்டமாக சேர்ந்து வீட்டின் பின்புறம் கட்டப்பட்டிருந்த 7 ஆடுகளை கடித்து கொன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
தஞ்சாவூர் மாவட்டம் ராமநாதபுரம் தெற்கு மூப்பனார் தெருவை சேர்ந்த சம்பத்குமார் மகன் சரவணன் (41). விவசாயி. இவர் தனது வீட்டில் மாடுகள் மற்றும் ஆடுகளை வளர்த்து வருகிறார். நேற்று மாலை வழக்கம்போல் மேய்ச்சலுக்கு அழைத்துச் சென்று விட்டு மாடுகள் மற்றும் ஆடுகளை தனது வீட்டின் பின்புறம் கட்டி வைத்தார்.

இன்று நள்ளிரவு 2 மணியளவில் ஆடுகள் கத்தும் சத்தம்கேட்டு சரவணன் மற்றும் அவரது குடும்பத்தினர் வீட்டின் பின்பக்கம் சென்று பார்த்தனர். அங்கு 8க்கும் மேற்பட்ட தெருநாய்கள் சேர்ந்து ஆடுகளை கடித்து குதறிக் கொண்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். உடன் நாய்களை துரத்திவிட்டு சென்று பார்த்தபோது 6 ஆடுகள் இறந்து கிடந்தன. இவற்றின் மதிப்பு ரூ. 50 ஆயிரத்திற்கு மேல் இருக்கும் என்று கூறப்படுகிறது. குழந்தைகள் போல் வளர்த்து வந்த ஆடுகள் இறந்து கிடந்ததை கண்டு சரவணன் குடும்பத்தினர் வேதனையடைந்தனர்.
இதுகுறித்து ராமநாதபுரத்தை சேர்ந்த பொதுமக்கள் தரப்பில் கூறுகையில், இப்பகுதியில் விவசாயிகள், விவசாயத் தொழிலாளர்கள் அதிகளவில் வசித்து வருகிறோம். நாங்கள் எங்கள் வீடுகளில் மாடுகள், ஆடுகள், கோழிகளை வளர்த்து வருகிறோம். இப்பகுதியில் தெருநாய்கள் எண்ணிக்கை அதிகரித்து விட்டது. எங்கள் வீட்டு குழந்தைகள் பள்ளிக்கு செல்வதற்காக வேனில் ஏற செல்லும் போது துரத்துகின்றன. சாலையில் ஒன்றுக்கொன்று சண்டையிட்டு கொண்டு வாகனங்களின் குறுக்கே புகுந்து ஓடுகின்றன. இதனால் இருசக்கர வாகனங்களில் செல்பவர்கள் தடுமாறி விழுந்து விபத்துக்குள்ளாகி உள்ளனர். மேலும் மேய்ச்சலுக்காக மாடுகள், ஆடுகளை அழைத்து செல்லும் போது தெருநாய்கள் அவற்றை துரத்தும் சம்பவங்களும் நடந்துள்ளது. இதுகுறித்து ஏற்கனவே பலமுறை ஊராட்சி அலுவலகத்தில் தகவல் தெரிவித்துள்ளோம். இன்று வீட்டில் கட்டி வைத்திருந்த ஆடுகளை கடித்து கொன்றுள்ளன. எனவே இதுகுறித்து உரிய நடவடிக்கை மேற்கொண்டு தெருநாய்களை பிடித்து அப்புறப்படுத்த வேண்டும். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
கும்பகோணத்தில் பலியான கோழிகள்
கும்பகோணம் அருகே பழவத்தான் கட்டளை ஊராட்சிக்கு உட்பட்ட விவேகானந்தர் நகரில் கார்த்திக் என்பவர் வளர்த்த 50 கோழிகளை தெரு நாய்கள் கடித்து குதறியதில் அனைத்து கோழிகளும் உயிரிழந்தன.
கும்பகோணம் அருகே பழவத்தான்கட்டளை ஊராட்சிக்கு உட்பட்ட விவேகானந்த நகரில் கார்த்திக் என்பவர் உயர்ரக சேவல் மற்றும் பெட்டை கோழிகளை வளர்த்து வந்தார் இவர் வளர்த்து வந்த கோழிகளை நேற்று இரவு அப்பகுதியில் சுற்றி திரியும் நாய்கள் கடித்து குதறின. இதில் அனைத்து கோழிகளும் உயிரிழந்தன.
தங்கள் பகுதியில் சுற்றி திரியும் தெரு நாய்களை கட்டுப்படுத்த வேண்டுமென வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் ஏற்கனவே கார்த்திக் புகார் கொடுத்திருந்ததும் குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் நாய்கள் கடித்து தனது வளர்ப்பு கோழிகள் உயிரிழந்ததை தொடர்ந்து உயிரிழந்த அனைத்து கோழிகளையும் கும்பகோணம் வட்டார வளர்ச்சி அலுவலகமும் தரையில் கிடைத்தி, தெரு நாய்களை அப்புறப்படுத்த வேண்டும் என கோரிக்கை விடுத்தார் .
இதனை தொடர்ந்து உயிரிழந்த கோழிகளை பார்வையிட்ட நாச்சியார் கோவில் போலீஸ் இன்ஸ்பெக்டர், உதவி வட்டார வளர்ச்சி அலுவலர் ஆகியோர் விவேகானந்தர் பகுதியில் சுற்றி திரியும் நாய்களை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தனர். இதனை தொடர்ந்து உயிரிழந்த கோழிகள் அனைத்தும் ஊராட்சி ஒன்றிய குப்பை கிடங்கிற்கு எடுத்துச் செல்லப்பட்டது.






















