சிறுவனின் எதிர்கால வாழ்க்கையை மீட்டு கொடுத்து மீண்டும் நடமாட வைத்து சாதனை படைத்த மீனாட்சி மருத்துவமனை டாக்டர்கள்
காலை அகற்ற வேண்டிய நிலையில் இருந்த சிறுவனை காப்பாற்றி தற்போது நன்கு நடக்க வைத்து சாதனை படைத்துள்ளனர் தஞ்சாவூர் மீனாட்சி மருத்துவமனை மருத்துவர்கள்.
தஞ்சாவூர்: டிராக்டர் விபத்தில் ஏறக்குறைய கால் துண்டிக்கப்படும் நிலையிலிருந்து நான்கரை வயது சிறுவனின் காலை சிறப்பான அறுவை சிகிச்சையின் மூலம் காப்பாற்றி உள்ளனர் தஞ்சாவூர் மீனாட்சி மருத்துவமனை மருத்துவர்கள் குழுவினர்.
விபத்தில் சிக்கிய நான்கரை வயது சிறுவன்
காவிரி டெல்டா பகுதியில் பன்முக சிறப்புப் பிரிவுகளை உள்ளடக்கிய மிகப்பெரிய மருத்துவமனையாக மீனாட்சி மருத்துவமனை விளங்கி வருகிறது. இம்மருத்துவமனையில் இரண்டு – நிலைகளை உள்ளடக்கிய ஒரு எலும்பியல் அறுவை சிகிச்சையை நான்கரை வயதே நிரம்பிய சிறுவனுக்கு மருத்துவக்குழுவினர் வெற்றிகரமாக செய்துள்ளனர். இதனால் அந்த சிறுவனின் எதிர்கால வாழ்க்கையையும் மருத்துவர்கள் பிரச்னையின்றி எதிர்கொள்ள செய்துள்ளனர். காலை அகற்ற வேண்டிய நிலையில் இருந்த சிறுவனை காப்பாற்றி தற்போது நன்கு நடக்க வைத்து சாதனை படைத்துள்ளனர்.
தஞ்சாவூர் மீனாட்சி மருத்துவமனை டாக்டர்கள் குழு
தஞ்சாவூர் மீனாட்சி மருத்துவமனையின் எலும்பியல் சிகிச்சை துறை தலைவரும், முதுநிலை வல்லுநருமான டாக்டர் கே. பார்த்திபன், இணை சிறப்பு நிபுணர் டாக்டர் எஸ். சண்முக ஹரிஹரன் ஆகியோரால் மேற்கொள்ளப்பட்ட இந்த அறுவைசிகிச்சை செயல்முறைகளினால் காயமடைந்த சிறுவனின் காலில் இயக்க செயல்பாடும் மற்றும் இயல்பான தோற்றமும் மீண்டும் மீட்கப்பட்டிருக்கின்றன. இவ்விபத்திற்கு முன்பு இருந்தவாறு இயல்பாக நடக்கவும், ஓடவும் இந்த வெற்றிகர சிகிச்சை வழிவகுத்திருக்கிறது.
காலை அகற்றாமல் அறுவை சிகிச்சை
இதுகுறித்து டாக்டர் கே.பார்த்திபன் நிருபர்களிடம் கூறியதாவது: “நாகப்பட்டினம் மாவட்டம், பிள்ளையார் தோப்பு கிராமத்தைச் சேர்ந்த நான்கரை ஆண்டுகள் வயதுள்ள ஒரு சிறுவனான ரக்ஷனின் இடதுகாலில் டிராக்டர் ஏறி இறங்கிய ஒரு வினோதமான விபத்தால் எலும்பு முறிவும், கடும் காயமும் ஏற்பட்டன. கீழ்ப்புற காலின் முக்கிய எலும்பு இரண்டு துண்டுகளாக உடைந்து விட்டது. அத்துடன், கீழ்ப்புற காலிலுள்ள இரண்டு முக்கியமான இரத்தநாளங்களுள் ஒன்று கிழிந்து துண்டாகிவிட்டது. விபத்து ஏற்பட்டவுடன் அருகிலுள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு இச்சிறுவனை பெற்றோர் அழைத்துச் சென்றபோது, காலை வெட்டியெடுப்பதுதான் சாத்தியமுள்ள ஒரே விருப்பத்தேர்வு என்ற அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அதை ஏற்காத அச்சிறுவனின் பெற்றோர் தஞ்சாவூர், மீனாட்சி மருத்துவமனைக்கு சிறுவனை அழைத்து வந்து, சிகிச்சைக்காக அனுமதித்தனர். மீனாட்சி மருத்துவமனைக்கு அழைத்து வரப்பட்டிருந்த போது, காயமடைந்த காலில் இறந்த திசுக்கள் முற்றிலும் உடனடியாக அகற்றப்பட்டு காயத்திற்கு தையல் போடப்பட்டது. காலின் பிரதான எலும்பு விபத்தில் உடைந்ததோடு, கீழ்ப்புறக்காலின் ஒரு இரத்தநாளமும் துண்டிக்கப்பட்டிருந்ததால் ஏறக்குறைய முற்றிலும் துண்டிக்கப்படும் அளவிற்கு இச்சிறுவனின் காலில் கடுமையான காயம் ஏற்பட்டிருந்தது.
மூன்று மணிநேரம் நீடித்த அறுவை சிகிச்சை
மூன்று மணி நேரங்கள் நீடித்த முதல் அறுவைசிகிச்சையில் வெட்டப்பட்ட இடத்தில் இருந்த மாசுகள் அகற்றப்பட்டன, மென்திசுக்கள் பாதிப்பின்றி தக்கவைக்கப்பட்டன. எலும்புடன் ஒரு வெளியார்ந்த பொருத்தி இணைக்கப்பட்டது. அதன் பிறகு நடைபெற்ற இரண்டாவது அறுவை சிகிச்சையில் டைட்டானியம் கம்பி உட்புறத்தில் பொருத்தப்பட்டது. இந்த அறுவைசிகிச்சையானது, மிக நுட்பமாகவும், திறம்படவும் செய்யப்பட்டது. கீழ்ப்புற காலுக்கு இரத்தஓட்டம் எந்த விதத்திலும் பாதிக்கப்படாதவாறு இந்த செயல்முறை நிகழ்த்தப்பட்டது மற்றும் அறுவைசிகிச்சைக்குப் பிறகு பாதிக்கப்பட்ட கால் பகுதியில் எந்த தொற்றும் ஏற்படாதவாறு தடுக்கப்பட்டது
ஆறு வாரங்களுக்குப் பிறகு, காலுக்கு வெளிப்புறத்தில் பொருத்தப்பட்டிருந்ததை அகற்றுவதற்காகவும் மற்றும் காலுக்கு உட்புறத்தில் ஒரு கம்பியை இணைப்பதற்காகவும் மற்றொரு அறுவை சிகிச்சை இச்சிறுவனுக்கு செய்யப்பட்டது. இந்த இருகட்ட அறுவை சிகிச்சைகளுக்குப் பிறகு இச்சிறுவனுக்கு இயல்பான நடமாட்டத்திறன் முழு அளவில் திரும்ப கிடைத்திருக்கிறது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.
நடமாட வைத்து சாதனை படைத்த டாக்டர்கள் குழு
இச்சிறுவனுக்கு செய்யப்பட்ட இரண்டாவது அறுவைசிகிச்சை குறித்து டாக்டர் ஹரிஹரன் கூறுகையில், “காலில் உள்ள காயம் ஆறுவதற்காக ஆறு வாரங்கள் கடந்த பிறகு இரண்டாவது அறுவைசிகிச்சைக்காக இச்சிறுவன் மீண்டும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இச்சிகிச்சையின்போது காலுக்கு வெளியே பொருத்தப்பட்டிருந்த கம்பியை நாங்கள் அகற்றியதோடு, டைட்டானியம் எலாஸ்டிக் நெய்ல் (TENS Nail) என்ற கம்பியை காலுக்கு உட்புறத்தில் பொருத்தினோம். இரண்டாவது அறுவைசிகிச்சை செய்யப்பட்டதிலிருந்து சில நாட்களுக்குள் அக்காலில் எலும்புகள் முற்றிலுமாக குணமடைந்தன. இதன் காரணமாக, மற்ற சிறுவர்களைப் போலவே இச்சிறுவனால் இயல்பாக நடக்கவும் மற்றும் ஓடவும் சாத்தியமாகியிருக்கிறது.
இப்போது சில நாட்களுக்கு முன்பு இந்த எலாஸ்டிக் நெய்ல் –ஐயும் நாங்கள் அகற்றிவிட்டோம்.” இவ்வாறு அவர் தெரிவித்தார்.
பேட்டியின் போது துணை மருத்துவ கண்காணிப்பாளர் டாக்டர். பிரவீன், முதுகுத்தண்டு அறுவைசிகிச்சை துறையின் முதுநிலை நிபுணர் டாக்டர். காத்திகேயன் மகாராஜன் மற்றும் எலும்பியல் சிகிச்சை துறையின் இணை சிறப்பு நிபுணர் டாக்டர் பாலகுருநாதன் ஆகியோர் உடன் இருந்தனர்.