தேசிய அளவில் அசத்தல் - வெற்றிக்கு பின்னணி யார்? தஞ்சாவூர் மேயர் சண்.ராமநாதன் கூறியது என்ன?
மாநகரில் குடிநீர் பிரச்சினை, புதை சாக்கடை உடைப்பு, கழிவு நீர், குப்பைகள் தேங்குதல் போன்ற பிரச்சினைகள் இருந்தால், உடனடியாக கட்டுப்பாட்டுறையில் இருந்தவாரே அந்த பிரச்சினைகளை சரி செய்ய முடியும்.

தஞ்சாவூர்: தமிழகத்திலேயே சிறந்த மாநகராட்சியாக முதலிடம் பெற மக்கள் கொடுத்த ஒத்துழைப்பும், கூட்டு முயற்சியால் கிடைத்த வெற்றி என்று பெருமிதத்துடன் தஞ்சாவூர் மேயர் சண்.ராமநாதன் தெரிவித்தார்.
ஸ்மார்ட் சிட்டி திட்டம் செயல்படுத்தப்படும் மாநகராட்சிகளில் அமைக்கப்பட்டுள்ள கட்டுப்பாடு அறை மூலம் மாநகராட்சியில் செயல்பாடுகள் கண்காணிக்கப்பட்டு வருகிறது. இதன் மதிப்பீடு அடிப்படையில் தமிழகத்திலேயே தஞ்சாவூர் மாநகராட்சி சிறந்த மாநகராட்சியாக முதலிடம் பெற்றுள்ளதாக, மத்திய அரசின் வீட்டுவசதி மற்றும் நகர்புற வளர்ச்சித்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இந்தியாவில் மத்திய அரசின் வீட்டுவசதி மற்றும் நகர்புற வளர்ச்சித்துறை அமைச்சகத்தின் கீழ் 100 ஸ்மார்ட் சிட்டி நகரங்கள் தேர்வு செய்யப்பட்டு, அதற்கான நிதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டு, பல்வேறு திட்டங்கள் அமல்படுத்தப்பட்டுள்ளன. அதன்படி தஞ்சாவூர் மாநகராட்சியில் நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் மாநகராட்சியில் பொது இடங்களில் 246 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு, அவை கட்டுப்பாட்டு அறையின் இணைக்கப்பட்டுள்ளது.
மாநகரில் குடிநீர் பிரச்சினை, புதை சாக்கடை உடைப்பு, கழிவு நீர், குப்பைகள் தேங்குதல் போன்ற பிரச்சினைகள் இருந்தால், உடனடியாக கட்டுப்பாட்டுறையில் இருந்தவாரே அந்த பிரச்சினைகளை சரி செய்ய முடியும். இந்த கட்டுப்பாட்டு அறையின் செயல்பாடுகளை ஒவ்வொரு ஆண்டும் மத்திய அரசின் வீட்டுவசதி மற்றும் நகர்புற வளர்ச்சித்துறை அமைச்சகம் சார்பில் தணிக்கை செய்யப்பட்டு, அதன் மதிப்பீடுகள் வெளியிடப்பட்டு வருகிறது.
அதன்படி 2024-2025-ம் ஆண்டுக்கான மதிப்பீடுகள் செய்யப்பட்டு நேற்று முன்தினம் அதன் முடிவுகள் வெளியானது. இதில் தமிழகத்தில் உள்ள 10 மாநகராட்சிகளில் தஞ்சாவூர் முதலிடத்தையும், அகில இந்திய அளவில் 14 -வது இடத்தையும் பெற்று அசத்தியுள்ளது.
இதுகுறித்து மேயர் சண்.ராமநாதன் கூறியதாவது ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளது. இதில் மாநகராட்சியின் பொது இடங்களில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராக்கள் மூலம் புதைசாக்கடை பிரச்சினை, குடிநீர் பிரச்சினை, குப்பை அகற்றுதல், பொது அறிவிப்பு போன்றவை கட்டுப்பாட்டு அறையிலிருந்தவாறு உரிய அறிவுரைகள் வழங்கப்பட்டு பிரச்சினைகள் தீர்க்கப்படுகிறது. அதே போல் மாநகராட்சியை தொடர்பு கொள்ள அலுவலக நாட்களில் இலவச டோல்ப்ரி எண் 1800425 1100 பொதுமக்களுக்கு வழங்கப்பட்டு, குறைகள், நிறைகள் எடுத்துக் கூறப்படுகிறது. தினமும் 300 அழைப்புகள் வருகிறது. இதில் 90 சதவீதம் வரை நிவர்த்தி செய்யப்படுகிறது.
மேலும், மேல்நிலைநீர் தேக்கத் தொட்டிகளில் குடிநீர் தினசரி பயன்பாடு குறித்தும், தெரு மின் விளக்குகள், சோலார் மின் விளக்குகள் பயன்பாடு குறித்தும் கண்காணிக்கப்பட்டு வருகிறது. ஒவ்வொரு ஆண்டும் மத்திய அரசின் வீட்டு வசதி மற்றும் நகர்புற வளர்ச்சித்துறை சார்பில் தணிக்கை செய்யப்பட்டு அதன் மதிப்பீடுகள் வெளியிடப்பட்டு வருகிறது. அதன்படி கடந்தாண்டு அகில இந்திய அளவில் தஞ்சாவூர் மாநகராட்சி 41 -வது இடத்தில் இருந்தது. தற்போது 14 -வது இடத்துக்கு முன்னேறியுள்ளோம். அதே போல் தமிழகத்தில் 10 மாநகராட்சிகளில் தஞ்சாவூர் முதலிடத்தை பெற்றுள்ளது. இவ்வாறு தேர்வு செய்யப்பட்டுள்ளதால் விரைவில் தஞ்சாவூர் மாநகராட்சிக்கு மத்திய அரசு சார்பில் விருது வழங்கப்பட உள்ளது.
இந்த பெருமைக்கு முக்கிய காரணம் தஞ்சாவூர் மக்களின் முழு ஒத்துழைப்பு, கூட்டு முயற்சியும்தான் காரணம். இந்த நேரத்தில் மக்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறோம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
அப்போது, துணை மேயர் அஞ்சுகம் பூபதி, மண்டலக் குழுத் தலைவர்கள் டி. புண்ணியமூர்த்தி, எஸ்.சி. மேத்தா, ரம்யா சரவணன், பொறியாளர் சாம் ஸ்டெல்வின் ஆகியோர் உடனிருந்தனர்.

