திமுகவினர் கண்ணும் கருத்துமாக இருக்கணும்... அமைச்சர் கே.என்.நேரு அட்வைஸ் எதற்காக?
வாக்காளர் சேர்க்கைக்கான படிவங்கள் வழங்கப்பட்டவுடன் திமுகவினர் பெயர் சேர்க்கையை கண்காணிக்க வேண்டும். குறிப்பாக சிறுபான்மையினர் வாக்குகள் ஒன்று கூட விடுபடாமல் சேர்க்க வேண்டும்.

தஞ்சாவூர்: அடுத்த இரண்டு மாதம் திமுகவினர் கண்ணும் கருத்துமாக இருக்க வேண்டும் என்று நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு அட்வைஸ் செய்தார். எதற்காக தெரியுங்களா?
தஞ்சாவூர் மத்திய மாவட்ட திமுக சார்பில், என் வாக்குச்சாவடி வெற்றி வாக்குச்சாவடி என்ற தலைப்பில் திமுகவின் வாக்குச்சாவடி முகவர்கள், பூத் டிஜிட்டல் ஏஜெண்ட் ஆகியோருக்கான ஆலோசனைக் கூட்டம் நேற்று நடைபெற்றது. கூட்டத்துக்கு மாவட்ட அவைத் தலைவர் சி.இறைவன் தலைமை வகித்தார். அனைவரையும் தஞ்சாவூர் மேயரும், மாநகரச் செயலாளருமான சண்.ராமநாதன் வரவேற்றார். கூட்டத்தில் முன்னாள் மத்திய நிதித்துறை இணையமைச்சர் எஸ்.எஸ்.பழநிமாணிக்கம், நாடாளுமன்ற உறுப்பினர் ச.முரசொலி, சட்டமன்ற உறுப்பினர்கள் துரை.சந்திரசேகரன், டிகேஜி.நீலமேகம், சாக்கோட்டை க.அன்பழகன், முன்னாள் எம்எல்ஏக்கள் எம்.ராமச்சந்திரன், மகேஷ்கிருஷ்ணசாமி, தலைமை செயற்குழு உறுப்பினர் து.செல்வம், தொகுதி பார்வையாளர்கள் இ.ஏ.கார்த்திகேயன், கோ.மனோகரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில் உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி.செழியன் பேசியதாவது: பாஜக வெற்றி பெற முடியாது என்ற நிலையில், கையில் எடுத்திருக்கிற ஆயுதம் தான் வாக்கு திருட்டு. அந்த திருட்டை தடுக்கதான் திமுக தலைவர் பல்வேறு ஆலோசனைகளை கூறியுள்ளது போல், நாம் நமது வாக்கை புதுப்பித்துக் கொள்ள வேண்டும். முதலில் நம்முடைய வாக்கை புதுப்பித்துக் கொள்கிற முதல் பணியை திமுகவினர் செய்ய வேண்டும்.
வாக்காளர் பெயர் சேர்ப்பின்போது இரண்டு படிவங்கள் வழங்கப்படும், அதில் ஒரு படிவத்தை நாம் பத்திரம் போல் பாதுகாக்க வேண்டும். எனவே வாக்கு திருட்டை தடுக்க வேண்டியது திமுகவினர் தான். நாம் பார்க்காத வெற்றியா, தமிழகத்தில் அதிக இடத்தில் வெற்றி பெற்றதும் திமுகதான். ராஜூவ்காந்தி படுகொலையின் போது நடைபெற்ற தேர்தலில் ஒரே ஒரு இடத்தில் வென்றதும் திமுக தான். எனவே வெற்றியின் உச்சமும் நாம், தோல்விக்கான இடத்தையும் பார்த்துவிட்டோம். எனவே, வரும் தேர்தல் ஆட்சியை பிடிக்கிற தேர்தல் மட்டுமல்ல, இந்தியாவை பாதுகாக்கிற தேர்தல், இறையாண்மையை பாதுகாக்கிற தேர்தல்.
மோடி, அமித்ஷா போன்றவர்கள் அடிமைகளை கையில் வைத்துக் கொண்டு நம்மை வீழ்த்த நினைக்கிறார்கள், இந்தியாவில் பிரதமரையே எதிர்க்கும் துணிவு வேறு எந்த மாநில முதல்வருக்கும் இல்லை, பல்வேறு அரசியல் கட்சியினரும் அடிபணிந்து வரும் நிலையில், இன்றைக்கும் மாநில உரிமையை கட்டிக் காக்காமல் விடமாட்டோம் என செயல்பட்டு, பிரமதமரை எதிர்த்து அதன் வெற்றிக்கனியை பறிக்கும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இரண்டாவது முறையாக முதல்வராக்குவோம். இவ்வாறு அவர் பேசினார்.
அமைச்சர் கே.என்.நேரு பேசியதாவது: இரண்டு மாத காலத்துக்கு திமுகவினர் கடினமாக உழைக்க வேண்டும். முதலில் வாக்காளர் பட்டியலில் பெயர் உள்ளதை திமுகவினர் சரிபார்க்க வேண்டும். வாக்காளர் சேர்க்கைக்கான படிவங்கள் வழங்கப்பட்டவுடன் திமுகவினர் பெயர் சேர்க்கையை கண்காணிக்க வேண்டும். குறிப்பாக சிறுபான்மையினர் வாக்குகள் ஒன்று கூட விடுபடாமல் சேர்க்க வேண்டும். அனைத்து வாக்கும் திமுகவின் வாக்காகும், யார் வாக்காளர்களாக இருக்கிறார்கள் என்பதை விட, யார் வாக்காளர்களாக இருக்க கூடாது என்பதை கண்காணிக்க வேண்டும். பிற மாநிலங்களிலிருந்து வந்தவர்கள் வாக்காளர்களாக சேர்க்கப்பட இருக்கிறார்கள்.
அதற்கான ஆவணங்கள் உள்ளதா என்பதை அருகில் இருந்து பார்க்க வேண்டும். ஆவணங்கள் இல்லாமல் பிற மாநில வாக்காளர்களை சேர்க்க அனுமதிக்க கூடாது. நம்முடைய வாக்காளர்களை சேர்க்க முனைப்பு காட்ட வேண்டும். ஒரு மாத காலம் சேர்க்கை நடைபெறும், அடுத்த மாதம் சரிபார்ப்பு நடைபெறும் எனவே இரண்டு மாதமும் திமுகவினர் கண்ணும் கருத்துமாக செயல்பட வேண்டும். இப்படி செயல்பட்டால் தான் திமுக 7 வது முறையும், ஸ்டாலின் 2 வது முறையும் முதல்வராக வர முடியும் என்றார்.






















