உரம் விலையேற்றத்திற்கு திமுகவே காரணம் - பாஜக துணைத் தலைவர் கருப்பு முருகானந்தம் பேட்டி
காசியில் பிரதமர் நரேந்திரமோடி பங்கேற்ற நிகழ்ச்சியை பொது மக்கள் எளிதில் காணும் வகையில் காசி விஸ்வநாதர் கோயில் முன் எல்இடி திரையில் ஒளிபரப்பபட்டது
காசியிலுள்ள விஸ்வநாதர் கோவிலின் இருண்ட பக்கம் தற்போது முடிவடைந்துள்ளது. 3000 சதுர அடியில் இருந்த காசி விஸ்வநாதர் கோவில் வளாகம், தற்போது 5 லட்சம் சதுர அடியாக மாறியுள்ளது. இப்போது, 50 ஆயிரம் முதல் 75 ஆயிரம் பக்தர்கள் கோவிலுக்கும் அதன் வளாகத்திற்கும் வரலாம். இக்கோயிலை புதுப்பிக்கட்டதையடுத்து, பிரதமர் மோடி, தொடங்கி வைத்தார். இவ்விழாவினை நேரிடையாக சிசிடிவி திரை மூலம் பார்க்கும் வகையில், கும்பகோணம் காசி விஸ்வநாதர் கோயில் முன்பு பாஜக சார்பில் அமைக்கப்பட்டிருந்தது. கும்பகோணம் மகாமக குளக்கரையில் உள்ள காசி விஸ்வநாதர் கோயிலில் பாஜகவினர் சிறப்பு பூஜை செய்தனர். அப்போது பிரதமர் மோடியின் பெயரில் சிறப்பு அர்ச்சனைகள், பூஜைகள் நடைபெற்றது. தொடர்ந்து காசியில் பிரதமர் நரேந்திரமோடி பங்கேற்ற நிகழ்ச்சியை பொது மக்கள் எளிதில் காணும் வகையில் காசி விஸ்வநாதர் கோயில் முன்பு எல்இடி திரையில் ஒளிபரப்பபட்டது. இதில் பாஜக மாநில துணைத் தலைவர் கருப்பு முருகானந்தம், மாவட்ட தலைவர் சதீஷ்குமார், வடக்கு மாவட்ட பொறுப்பாளர் அண்ணாமலை, நகரத் தலைவர் ரங்கராஜன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
அப்போது கருப்பு முருகானந்தம் நிருபர்களிடம் கூறுகையில், தமிழகத்தை ஆளும் திமுகவிற்கு, மக்களை பற்றி கவலையில்லை. சமூக வலைதளம் வழியாக ஆளும் திமுகவினரின் தவறுகளை சுட்டிக்காட்டினால், அவை வெளியுலகிற்கு தெரியாமல் மறைக்கும் வகையிலும், எதிர்கட்சிகளை மிரட்டி, அச்சுறுத்தியே ஆட்சி செய்து வருகின்றனர். அவர்களை செயல்படாமல் முடக்கும் வகையில் பொய் வழக்கு போட்டு சிறையில் அடைக்கும் செயலையே தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர்.
குறிப்பாக, கல்யாணராமன், மாரிதாஸ், கிஷோர் கே சுவாமி என பட்டியல் நீள்கிறது. இத்தகைய போக்கை தமிழக அரசு தவிர்க்க வேண்டும்.தேர்தல் வாக்குறுதிப்படி, தமிழக அரசு, பெட்ரோல், டீசல் விலையை குறைக்க வேண்டும் அல்லது அதனை ஜிஎஸ்டி வரிவிதிப்பிற்குள் கொண்டுவர மத்திய அரசிற்கு ஒத்துழைக்க வேண்டும். மக்களிடம் வாக்குறுதி அளிக்காமலேயே மத்திய அரசு, பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியை குறைத்தது, அதனை தொடர்ந்து 25க்கும் மேற்பட்ட மாநிலங்கள் தேர்தல் வாக்குறுதி தராமலேயே, தத்தம் மாநில வரிகளை குறைத்து பெட்ரோல், டீசல் விலைகளை குறைத்துள்ளன. ஆனால் தேர்தல் வாக்குறுதியில் சொன்னபடி திமுக அரசு, பெட்ரோல் டீசல் விலைகளை குறைக்க முன்வரவில்லை.தமிழகத்தில் உரத்தட்டுப்பாடு மற்றும் விலை ஏற்றத்திற்கு காரணம் தமிழக அரசு தான். இதனை தீர்க்க மாநில அரசு, உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.