Sun Ramanathan : ’துணை முதல்வரே என் கண்ட்ரோல்தான்’ தஞ்சை மேயரின் பேச்சால் கொதிக்கும் உ.பிக்கள்..!
’துணை முதல்வர் உதயநிதியின் வலதுகரமாக இருப்பவரின் ஆசி இருப்பதால் என்னை யாரும் ஒன்று செய்ய முடியாது என்று தஞ்சை மேயர் சன்.ராமநாதன் ஆணவ பேச்சு’ கொதிநிலையில் திமுக கவுன்சிலர்கள்

தஞ்சாவூர் மேயராக சன். ராமநாதன் பொறுப்பேற்றதில் இருந்து அவர் மேல் புகாருக்கு மேல் புகார், குற்றச்சாட்டிற்கு மேல் குற்றச்சாட்டு. இதனை முன்வைப்பதெல்லாம் எதிர்க்கட்சிகள் அல்ல அவருடைய திமுக கவன்சிலர்களேதான். ராமநாதனுக்கு எதிராக அவர்கள் இப்போது போர்கொடி உயர்த்தியிருக்கின்றனர். எத்தனை பேர் எதிர்த்தாலும் என்னை யாராலும் ஒன்னும் செய்ய முடியாது என்றும் அடுத்த தஞ்சாவூர் எம்.எம்.ஏ-வே நான் தான் எனவும் ஆணவத்தில் ஆடிவருகிறார் ராமநாதன் என்கிறார்கள் தஞ்சை உடன்பிறப்புகள்.
மேயர் ராமநாதன் மீது அதிருப்தியிலும் கோபத்திலும் திமுக கவுன்சிலர்கள்
சகல வசதி வாய்ப்புகளையும் மேயர் ராமநாதனே அனுபவிக்க வேண்டும் என்று கங்கனம்கட்டிக்கொண்டு செயல்படுவதால் திமுக கவுன்சிலர்களுக்கே பசைகள் எதுவும் செல்லவில்லை. இதனால் தங்களை நம்பி வருபவர்களுக்கு கூட சட்டைப் பையை பிரிக்க முடியாத நிலையில் கவுன்சிலர்கள் படாதபாடு பட்டுவருகின்றனர். அதே நேரத்தில் திமுக கவுன்சிலர்கள் தேர்வு செய்யப்பட்ட வார்டுகளுக்கு கூட அடிப்படை வசதிகள் உள்ளிட்ட எந்த வித கட்டமைப்பையும் செய்ய முடியாமல் உறூப்பினர்கள் தவிப்பதாகவும், சொந்த வார்டுக்கு உள்ளே கூட போக முடியாத நிலை கவுன்சிலர்களுக்கு இருப்பதற்கு காரணம் சன்.ராமநாதனின் அலட்சியமும் ஆவணப்போக்கும்தான் என கண்ணீர் வடிக்கிறார்கள் தஞ்சை மாநகராட்சியின் திமுக கவுன்சிலர்கள்.
ஓட்டுக் கேட்கவே போகமுடியாது – குமுறும் திமுகவினர்
இப்படியே தொடர்ந்தால் வரும் 2026 தேர்தலுக்கு ஓட்டு கேட்க கூட போக முடியாத நிலை வரும் வரும் என்பதை கூட கருத்தில்கொள்ளாத மேயர் சன்.ராமநாதன், தன் இருப்பை மட்டுமே தக்க வைக்க எல்லா நடவடிக்கைகளையும் செய்வதாக அறிவாலயத்திற்கு புகார் மேல் புகார் சென்றியிருக்கிறது.
நம்பிக்கையில்லா தீர்மானத்திற்கு ஏற்பாடு – ஆணவமாக பேசிய மேயர்
கொதிநிலையில் இருக்கும் திமுக கவுன்சிலர்கள் பலர் சன் ராமநாதனுக்கு எதிராக மன்ற கூட்டத்தில் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவர முடிவு செய்த நிலையில், அது திருவையாறு சட்டமன்ற உறுப்பினரும் மாவட்ட செயலாலருமான துரை.சந்திரசேகரனின் கவனத்திற்கு சென்றுள்ளது. இதனையறிந்த அவர் மேயர் சன்.ராமநாதன், துணை மேயர் அஞ்சுகம் பூபதி மற்றும் அதிருப்தி கவுன்சிலர்கள் அத்தனை பேரையும் அழைத்து சமாதானம் பேசியிருக்கிறார். தேர்தல் நெருங்கும் நேரத்தில் மேயர் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்தால் அது கட்சிக்கு கெட்ட பெயராகிவிடும் என்றும் இதையே எதிர்க்கட்சிகள் ஊதி பெரிதாக்கிவிடுவார்கள் என்றும் பேசி சமரசம் செய்ய முயன்றிருக்கிறார். அப்போது மேயர் ராமநாதனிடம் கவுன்சிலர்கள் கேட்பதை செய்துக்கொடுக்கும்படி அறிவுறுத்தலும் கொடுத்திருக்கிறார்.
மாவட்ட செயலாளரை மதிக்காத தஞ்சை மேயர்
ஆனால், மாவட்ட செயலாளர், எம்.எல்.ஏவாக உள்ள மூத்த உறுப்பினர் துரை.சந்திரசேகரனையே மதிக்காமல் அந்த கூட்டத்தில் சன்.ராமநாதன் பேசியதாகவும், என் இஷ்டப்படி தான் இருப்பேன். என்னை உங்களால் ஒன்றும் செய்துவிடமுடியாது என்று திமிராக பேசியதாக பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது. அதோடு, தனக்கு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினோடு இருக்கும் முக்கியமான நபரின் ஆதரவு இருப்பதாகவும் அவரும் தானும் ஒரே சமூகம் என்பதால் தன்னை யாராலும் ஒன்றும் கிழிக்க முடியாது என்ற ரீதியில் சன்.ராமநாதன் தன் ஆதரவாளர்களிடையே பேசியதால் அவர்களே அதிர்ச்சியில் ஆழ்த்துள்ளனர்.
சாதி பின்புலத்தை குறிப்பிட்டு மிரட்டல்
அதுமட்டுமின்றி, உதயநிதியின் வலதுகரமாக இருக்கும் தன்னுடைய சமூகத்தை சேர்ந்த நபராலே 2026ல் தஞ்சை தொகுதியில் எம்.எல்.ஏ சீட் பெற்று நான் எம்.எல்.ஏ ஆகிவிடுவேன் என்றும் மண்டைக்கனமாக அவர் சொல்லித் திரிவதாகவும் இதனால் கட்சியினர் மட்டுமின்றி பொதுமக்கள் மத்தியிலும் திமுகவிற்கு கெட்ட பெயரை சன்.ராமநாதன் எந்த பின்விளைவுகளை பற்றியும் கவலைக்கொள்ளாமால் வாங்கிக்கொடுத்துக்கொண்டிருப்பதாகவும் தலையில் அடிக்காத குறையாக கவலையில் ஆழ்ந்துள்ளனர் உடன்பிறப்புகள்
வருத்தத்தில் மூத்த உடன்பிறப்புகள்
தஞ்சாவூரில் உள்ள சில கவுன்சிலர்களிடமும் மூத்த நிர்வாகிகளிடம் பேசியபோது, இதுவரையிலான தங்களுடைய அரசியல் வாழ்க்கையில் இப்படி ஓபனாக தன்னுடைய சமுக பின்புலத்தை சொல்லியும், தனக்கு ஆதரவாக தன்னுடைய சமூகத்தையே சேர்ந்த துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் அலுவலகத்தில் இருக்கும் முக்கிய புள்ளியின் பெயரை சொல்லியும் ஒருவர் தஞ்சை திமுகவில் பேசியதில்லை என்றும் சன்.ராமநாதன் மேயராக தொடர்வதும் வரும் சட்டமன்றத்தில் அவருக்கு சீட் கொடுப்பதும் தஞ்சையில் திமுகவை மக்கள் மத்தியில் செல்வாக்கு இழக்கச் செய்யும் என்றும் வருத்தத்துடன் பதிவு செய்கின்றனர்.




















